Published:Updated:

ஒபாமா வாழ்த்திய நடராசனின் பிறந்த தினம் இன்று! ஏன் வாழ்த்தினார் ஒபாமா?

தமிழக அரசியலை மட்டுமல்ல... அ.தி.மு.க-வையும் ஜெயலலிதாவையும் ஆட்டிப்படைத்த நடராசனின் பிறந்தநாள் இன்று!

நடராசன்
நடராசன் ( விகடன் )

‘‘என் ஜாதகத்தை யாராலும் கணிக்க முடியாது!’’ - தனக்கு நெருக்கமானவர்களிடம் நடராசன் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது.

நடராசன் குழந்தையாக இருந்தபோது, அவரின் சேட்டையைத் தாங்க முடியாமல் பள்ளியில் சேர்த்தார், தாய் மாரியம்மாள். அந்தக் காலத்தில், ஆறு வயது நிரம்பியவர்களைத்தான் பள்ளியில் சேர்த்துக்கொள்வார்கள். நான்கு வயது நடராசனுக்கு ஆறு வயது எனப் பொய் சொல்லி பள்ளியில் சேர்த்துவிட்டனர். இதனால், பள்ளிச் சான்றிதழில் நடராசனின் பிறந்த நாள் 1942 அக்டோபர் 23-ம் தேதி என்று இருக்கும்.

நடராசனின் தந்தை, தாய்
நடராசனின் தந்தை, தாய்

உண்மையான வயது என்ன என்பதை அறிந்துகொள்ள நடராசன் முற்பட்டு, அவர் அம்மாவிடம் பல முறை கேட்டிருக்கிறார். ஆனால், மாரியம்மாள் சொல்லவில்லை. நடராசன் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டபோது, ‘‘வீட்டு எறவாணத்தில் உன் ஓலைக் குறிப்பைச் சொருகி வச்சிருந்தேன். புயல் வந்தப்ப பறந்துபோச்சு’’ எனச் சொல்லியிருக்கிறார், மாரியம்மாள். ‘‘ஓலைதான் பறந்துபோச்சே... என் பிறந்த நேரத்தையாவது சொல்லு’’ எனக் கேட்டிருக்கிறார். ‘‘ஒன்பது பேரைப் பெத்த எனக்கு, நீ பொறந்த நேரம் ஞாபகத்தில் இல்ல’’ என மாரியம்மாளிடமிருந்து பதில் வந்தது.

‘தான் பிறந்த நேரம் எது’ என்பதை நடராசன் அறிந்துகொள்ள முயன்று தோற்றுப்போனார். ஆனால், பிற்காலத்தில் அவரின் உண்மையான பிறந்த தேதியை அறிந்து, ஜாதகத்தைக் கணிக்கச் சிலர் முயன்றார்களாம். அப்போது நடராசன் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘‘என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களும், என்னை ஆபத்தாக எண்ணி அஞ்சுகிறவர்களும், என் ஜாதகத்தைக் கணிக்க முடியாமல் தவிக்கிறார்கள். எவராலும் என்னையும் என் ஜாதகத்தையும் கணிக்க முடியாது.’’

சசிகலாவுடன் நடராசன்
சசிகலாவுடன் நடராசன்
Vikatan

‘ஜாதகத்தை எதிரிகள் கணித்துவிடுவார்கள்’ என்பதால், தனது பிறந்தநாளை வெளிப்படையாகக் கொண்டாட மாட்டார், நடராசன். வீட்டிலேயே கேக் வெட்ட, நெருக்கமானவர்கள் மட்டும் வந்து வாழ்த்து சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் 2012-ம் ஆண்டு, நடராசனின் பிறந்தநாள் வெளியுலகம் அறிய அமர்க்களப்பட்டது. காரணம், அந்த ஆண்டு நடராசனுக்கு 70-வது பிறந்தநாள். பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம், தடபுடல் விருந்து, கச்சேரி, கவியரங்கம், வாணவேடிக்கை எனப் பிறந்த நாளை பிரமாண்டப்படுத்திவிட்டார்கள்.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, தன் கைப்பட பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பிவைத்திருந்தார். இந்தியாவில் இருக்கிற பெரிய அரசியல் புள்ளிகளின் பிறந்த நாளுக்குக்கூட இப்படி வாழ்த்துகள் வந்தது இல்லை. ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்குக் கிடைக்காத அமெரிக்க அதிபரின் வாழ்த்துகூட நடராசனுக்குக் கிடைக்கிறது என்றால், கடல் கடந்தும் நடராசனின் ஆதிக்கம் விரிந்திருக்கிறது என அர்த்தம்.

நடராசன் பிறந்தநாளுக்கு ஒபாமா அனுப்பிய வாழ்த்து...
நடராசன் பிறந்தநாளுக்கு ஒபாமா அனுப்பிய வாழ்த்து...

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதுதான் நடராசனின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. சென்னை, பெரியார் திடலில் நடந்த விழாவில், ‘பூலித்தேவனை நெஞ்சில் நிறுத்திய புதுப்படைத் தலைவா’, ‘தமிழர்களின் இதயக்கனி’, ‘தமிழினத்தின் முகவரி’ என்றெல்லாம் பேனர்கள் வைத்து அசத்தினார்கள். ‘இந்த இதயம் துடிப்பது...’ என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் நடராசனுக்குப் புகழஞ்சலிகள் வேறு.

‘‘ஆனந்த நடராசனின் பலம் தெரியவில்லை. படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்றையும் செய்யும் ஆண்டவனுக்குத் தெரியும், நீ செய்யும் தொண்டு. ஆனால், ஆள்பவர்களுக்கு (ஜெயலலிதா) தெரியவில்லையே’’ என அந்த விழாவில் பன்ச் வைத்தார் கவிஞர் நந்தலாலா. கவிஞர் கிருதியாவோ, ‘‘உன் வீட்டில் எப்போதும் ‘ஜெ.ஜெ’ எனக் கூட்டம் களைகட்டும். அப்படி வருகிறவர்களைக் காப்பாற்றும் புத்த தேவன் நீ. உன்னைச் சீண்டுவோருக்குப் பூலித்தேவன்" எனச் சீறினார். "ஏ.டி.எம் எந்திரம் நீ. உன்னைச் சொருகுகிறவர்களுக்குக்கூட பணத்தைத் தருகிறாய்" என்றார், கவிஞர் இனியவன்.

அமிதாப்பச்சனுடன் நடராசன்...
அமிதாப்பச்சனுடன் நடராசன்...

‘‘சிலர் (ஜெயலலிதா) யாரையும் முழுவதுமாக நம்புவதில்லை. ஏன்... அவர்கள் அவர்களையே நம்புவதில்லை. நான் யாரை எதற்காகச் சொல்கிறேன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ‘கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களிடம் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று எழுதப்படாத சட்டத்தைப் போடுகிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில், நவீனத் தீண்டாமை கட்சிகளின் பெயரால் நடக்கிறது. என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. என்னை நம்பியவர்களுக்காக உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறேன். என்னை நம்பி இருந்தவர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் வருத்தப்பட்டிருக்கிறேன். இங்கே வந்தால் வம்பு வந்துவிடும் என்பதால், வீட்டில் வந்து பார்த்தவர்களின் பெயர்களையெல்லாம் இங்கே சொல்லக் கூடாது. போனில் வாழ்த்திய கவர்னர்களும் இருக்கிறார்கள்’’ என அந்த 70-வது பிறந்தநாள் விழாவில் பேசினார், நடராசன்.

``சிறைக்குள் ரெய்டு.. தினகரன் வெயிட்டிங்”- அடுத்தடுத்த அதிர்ச்சியில் சசிகலா!
பொங்கல் விழாவில் பேசும் நடராசன்...
பொங்கல் விழாவில் பேசும் நடராசன்...
விகடன்

‘‘என் ஜாதகத்தை யாராலும் கணிக்க முடியாது!’’ என்று சொன்ன நடராசனின் ஜாதகத்தை மாற்றி எழுதியது, பி.ஜே.பி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை ஆட்சியில் அமரவைக்க நினைத்தார் நடராசன். 2017-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில், ‘‘ஜெயலலிதாவை 30 ஆண்டுகளாக என் மனைவி சசிகலா தோளில் சுமந்தார். ‘குடும்ப அரசியல் செய்கின்றனர்’ என்று கூறுகின்றனர். அன்றைக்கு ஜெயலலிதாவை ஆடிட்டர் குருமூர்த்தியா காப்பாற்றினார்? எங்கள் குடும்பம்தானே காப்பாற்றியது! நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம். பி.ஜே.பி-யில் எந்தப் பதவியும் வகிக்காத ‘துக்ளக்’ குருமூர்த்தி அரசியல் செய்யும்போது, ஜெயலலிதாவைப் பாதுகாத்த நாங்கள் அரசியல் செய்யக்கூடாதா? திராவிடர்களுக்கு எதிராகப் பிராமணர்களுடன் சேர்ந்து குருமூர்த்திதான் சதி செய்கிறார்’’ என்று சீறினார் நடராசன்.

விளைவு, சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் போனார் சசிகலா. ஆடிட்டர் குருமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைந்தன. தினகரன் ஓரங்கட்டப்பட்டார். நடராசன் உடல்நலம் பாதிக்கப்பட்டார். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டார். சில மாதங்களே வாழ்ந்து மரணத்தைத் தழுவினார் நடராசன்.

நடராசனுக்கு அஞ்சலி
நடராசனுக்கு அஞ்சலி
விகடன்

‘‘அ.தி.மு.க-வை வெளியிலிருந்து யாரும் வீழ்த்த முடியாது’’ என ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு முடிந்ததும் சொன்னார், நடராசன். இப்போது நடராசனின் ஆன்மாவுக்குப் புரிந்திருக்கும் ‘‘வெளியில் இருந்துதான் வீழ்த்தியிருக்கிறார்கள்’’ என்பது.