Published:Updated:

`விளிம்புநிலை மக்களின் விடிவெள்ளி!' - இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

தியாகி இரட்டைமலை சீனிவாசன்

காந்தி தன்னுடைய பெயரை தமிழில் மோ.க.காந்தி என்று எழுதுவதற்கும், திருக்குறளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் உந்துசக்தியாக இருந்திருக்கிறார்.

`விளிம்புநிலை மக்களின் விடிவெள்ளி!' - இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

காந்தி தன்னுடைய பெயரை தமிழில் மோ.க.காந்தி என்று எழுதுவதற்கும், திருக்குறளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் உந்துசக்தியாக இருந்திருக்கிறார்.

Published:Updated:
தியாகி இரட்டைமலை சீனிவாசன்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கோழியாளம் கிராமத்தில் வாழ்ந்த இரட்டைமலை - ஆதிஅம்மாள் தம்பதியின் மகனாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக 07.07.1859-ம் ஆண்டு தலைவர் சீனிவாசன் பிறந்தார்.

பெற்றோர் பணியின் நிமித்தம் தஞ்சைக்கு இடம்பெயர்ந்தபோது, அங்கு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்று, பிற்பாடு கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்தார் சீனிவாசன். இந்திய துணைக்கண்டத்தின் தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து பட்டப்படிப்பை முடித்த முதல் பெருமைக்குரிய தலைவர், இரட்டைமலை சீனிவாசன். மலைமாவட்டம் நீலகிரி குன்னூரில், சீனிவாசனின் உறவினர் அயோத்திதாசப் பண்டிதர், சித்த மருத்துவராகவும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தலைவராகவும் இருந்தார். அவரின் முதல் மனைவி இயற்கை எய்திய நிலையில், இரட்டைமலை சீனிவாசனின் சகோதரியான தனலட்சுமி அம்மையாரை, அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இக்காலகட்டத்தில் தன் மைத்துனருடன் இணைந்து தேயிலைத் தோட்டத்தின் கணக்கராக, பின்னர் தேயிலைத் தோட்ட மக்களின் நன்மதிப்புக்குரிய தலைவராக இரட்டைமலை சீனிவாசன் பணியாற்றி வந்தார். சென்னை ராஜதானியில் தமிழர் இயக்கம், பகுத்தறிவு இயக்கம், பிராமணர் அல்லாதார் இயக்கம் ஆகியவற்றுக்கு முன்னோடியாக 1890-ல் அயோத்திதாசரும் அருட்தந்தை ஜான் ரத்தினமும் இணைந்து திராவிடர் கழகத்தைத் தொடங்கி, சமுதாய மேன்மைக்குப் பணியாற்றி வந்தனர்.

இரட்டைமலை சீனிவாசன்
இரட்டைமலை சீனிவாசன்

அதில் இரட்டைமலை சீனிவாசனும் இணைந்து பணியாற்றி வந்தார். திராவிடர் கழகம், திராவிட மகாஜன சபை என்று பெயர் மாற்றம் பெற்றது. திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு 01.12.1891-ல், நீலகிரி உதகமண்டலத்தில் கூடியது. இம்மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உள்ள இழிவைப் போக்க சிறப்பான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால், அதைப் பெற்றுக் கொண்டதற்கான பற்றுச் சீட்டுகூட திரும்ப வரவில்லை.

எனினும் மனம் தளராமல், எவருடைய உதவியும் இன்றி, இருவரும் இரு கூறுகளில் நின்று போராடினால் உரிமைகளைப் பெற முடியும் என்று முடிவெடுத்து, இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் அயோத்திதாசரிடம் கருத்துவேறுபாடு கொள்கிறார். அது அரசியல் திருத்தமா அல்லது சமுதாய சீர்திருத்தமா என்றபோது, அரசியல் சீர்திருத்தம் என்று அயோத்திதாசர் முடிவெடுத்தார்.

மனித குலத்தை சாதியின் பெயரால் ஒதுக்குவதும், ஒடுக்கப்படுவதும் ஒருபோதும் நியாயமில்லை என்று 14.01.1891-ல் பறையர் மகாஜன சபையை உருவாக்கினார். பின்னர், அதுவே ஆதிதிராவிட மகாஜன சபையாக இயங்கிவந்தது. இந்த ஆண்டில்தான் (14.04.1891), மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் அம்பேவாடாவில் அண்ணல் அம்பேத்கர் பிறக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கரைவிட 30 வயது மூத்தவர் தலைவர் இரட்டைமலை சீனிவாசன்.

ஆதிதிராவிட மக்களின் விழிப்புணர்வுக்காக இரட்டைமலை சீனிவாசன் 1893-ம் ஆண்டு `பறையன்' என்ற இதழைத் தொடங்கி வெளியிட்டார். முதல் பிரதியை மதிப்புரைக்காக சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பியபோது, அதன் ஆசிரியராக இருந்த சி.ஆர்.நரசிம்மன், `பறையன்' மாத இதழைக் கையால் கூட தொடாமல் குச்சி வைத்து பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தார் என்ற நிலையில்தான், தீண்டாமை அப்போது இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`தீண்டத்தகாதவரை ஒருவன் தொட்டுவிட்டால் அவன் தீட்டை நீரால் போக்கிக்கொள்ளலாம், ஆனால் தீண்டத்தகாதவர்களின் தீட்டை எந்த நீராலும் கழுவ முடியாது, ஏனெனில், தீண்டத்தகாதவர்கள் தீட்டாலேயே சபிக்கப்பட்டவர்கள், கற்பிழந்த பெண்ணையும் தீண்டத்தகாதவனையும் தூய்மைப்படுத்த தீயினால் மாத்திரமே முடியும்' என்ற மனுதர்ம கோட்பாட்டையும் சனாதன சக்திகளின் இந்த இழிவையும் துடைத்தெறிய, தங்களையே ஆயுதமாக மாற்றிக்கொண்ட மகத்தான தலைவர்கள் அயோத்திதாசரும் சீனிவாசனாரும் என்றால் அது மிகையன்று.

மக்களின் பேராதரவோடு `பறையன்' மாத இதழ் வார இதழாக மாறி வெளிவந்தது. தலைவர் சீனிவாசன் வெளிநாடு செல்லும் வரை ஏழு ஆண்டுகள் அது வெற்றிகரமாக வெளிவந்து, மிகப்பெரிய விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டது.

அயோத்திதாசப் பண்டிதரோ, பிராமணர் அல்லாதார் அனைவரையும் ஒன்றிணைத்து சாதி பேதமற்ற திராவிட மகாஜன சபையை கட்டி எழுப்பினார். `திராவிட பாண்டியன்', `ஒரு பைசா தமிழன்' போன்ற பத்திரிகைகளைத் தொடங்கி வெகுஜன மக்களின் ஆதரவைப் பெற முயன்றார்.

தலைவர் இரட்டைமலை சீனிவாசன், அன்றைய சென்னை மாகாணத்தின் பிரித்தானிய ஆட்சியாளர்களான வைஸ்ராய் லார்ட் எல்ஜீன், கவர்னர் லார்டு வென்லாக் ஆகியோர்களிடம் நேரடியாகச் சென்று முறையிட்டு, சமூக வீதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணம் தேடிப் போராடினார், புரட்சியை உருவாக்கினார், உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.

இரட்டைமலை சினிவாசனின் பெருமைகள்
இரட்டைமலை சினிவாசனின் பெருமைகள்

இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுடைய நிலையைத் தங்களை ஆளும் அரசுக்கு தெரிவிப்பதற்காக லண்டன் பயணம் செய்ய விரும்பி, இரட்டைமலை சீனிவாசன் மும்பை சென்று சேர்ந்தார். இதை அறிந்த பெற்றோரும் உறவினர்களும், நண்பர்களும், `கடல் கடந்து செல்ல வேண்டாம், திரும்பி ஊருக்கு வாருங்கள்' என்று பணித்தபோது, தலைவர் சீனிவாசன், `சுடுகாடு சென்ற பிணம் வீடு திரும்பாது' என்று கடிதம் எழுதிவிட்டு, மும்பை சென்று, 1902-ம் ஆண்டு மேற்கு நோக்கிப் பயணம் செய்த முதல் கப்பலில் இரட்டைமலை சீனிவாசன் தன் பயணத்தைத் தொடங்கினார்.

ஆனால், அந்தக் கப்பல் ஆப்பிரிக்காவில் போய் நிற்கிறது. அங்கே இறங்கி இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, 1904-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா செல்கிறார். அக்காலகட்டத்தில் அவர் பெற்ற கல்லூரிப் படிப்பாலும், ஆளும் வெள்ளைய ஆட்சியால் பெற்ற ஆங்கிலப் புலமையாலும் தென்ஆப்பிரிக்காவில் நேட்டாலில் உள்ள நீதிமன்றத்தின் மொழிபெயர்ப்பாளராகப் பணி பெற்றார்.

அங்குதான் வழக்கறிஞராகப் பணியாற்றிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை முதன்முதலாக சந்திக்கிறார் இரட்டைமலை சீனிவாசன். காந்தி தன்னுடைய பெயரை தமிழில் மோ.க.காந்தி என்று எழுதுவதற்கும், திருக்குறளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் உந்துசக்தியாக இருந்திருக்கிறார்.

ஏறக்குறைய 16 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்காவில் பணியாற்றிய பின், அவர் 1921-ல் தாயகம் திரும்பி அரசியலை கூர்ந்து பார்த்து, நீதிக் கட்சியில் தன்னை இணைத்து தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவராகப் பரிணமிக்கிறார். 1923 தொடங்கி 1936 வரை சென்னை ராஜதானியில் நீதிக்கட்சி அமைச்சரவையில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, தன் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து, தன் லட்சியங்களுக்கு உயிர் கொடுத்து, பொதுச்சாலைகள், பொதுக் கிணறுகள், ஆலயங்களை ஏனைய சமூகத்தினர் பயன்படுத்துவது போன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்று 25.8.1924-ல் அரசியல் சட்ட நிர்ணய சபையில் தீர்மானம் கொண்டுவருகிறார். 1925-ம் ஆண்டு அதை அரசாணையாகவும் வெளியிடச் செய்த மகத்தான தலைவர் இரட்டைமலை சீனிவாசன்.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் 74 பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர். குறிப்பாக பறையன், பள்ளன், பரவன், குறும்பன், வண்ணான், வள்ளுவன், வால்மீகி, தோட்டி, செருமன், வெட்டுவன், ஆதிதிராவிடர், ஆதிஆந்திரர், ஆதிகர்நாடகர், அருந்ததியர், சக்கிலியர், தேவேந்திரர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்களை, பொதுப் பெயரில் ஆதிதிராவிடர்கள் என்று அழைக்க ஆணையைப் பெற்றுத் தந்தவர் தலைவர் சீனிவாசன். இவரின் மகத்தான பணிகளைப் பாராட்டி அன்றைய பிரிட்டிஷ் அரசு 1926 பிப்ரவரி 20-ல், ராவ் சாஹிப் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் நாட்டின் விடுதலை குறித்தும், சமுதாய சீரமைப்புக் குறித்தும் முதல் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் புறக்கணித்த நிலையில், இந்தியாவின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர். இஸ்லாமியர்களின் சார்பில் முகமது அலி ஜின்னா ஆகாகான், சீக்கியர்கள் சார்பில் சர்தார் உஜ்ஜல் சிங், நீதிக்கட்சியின் சார்பில் ஏ.பி.பாத்ரோ, சர் ஏ.டி.பன்னீர்செல்வம், தாழ்த்தப்பட்டோர் சார்பில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர், தலைவர் இரட்டைமலை சீனிவாசன் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், வட்டமேசை மாநாட்டுக்கு வந்த இந்திய பேராளர்களை ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்பட்டபோது ஒவ்வொருவரும் எழுந்து வணங்கி கைகுலுக்கி அமர்ந்தனர். அந்த வேளையில் யாரும் எதிர்பாராதவிதமாக, தலைவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் தான் அணிந்திருந்த கோட் பாக்கெட்டில் தீண்டப்படாதவன் என்று எழுதியிருந்தார். அவரை அறிமுகம் படுத்துகின்றபோது ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் கை குலுக்கக் கை நீட்டியபோது, தலைவர் இரட்டைமலை சீனிவாசன் தன் கையை எடுத்து பின்னால் கட்டிக் கொண்டார். `நான் தீண்டப்படாதவன், என்னைத் தொட்டால் உங்களுக்குத் தீட்டுப்பட்டுவிடும்' என்று தன் நாட்டிலுள்ள சமூக சீர்கேடுகளை உலக அரங்கில் வெளிப்படுத்தினார்.

சூரியனே அஸ்தமிக்காத வல்லமை படைத்த பிரித்தானிய பேரரசின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை அவமதித்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றபோதிலும், தனது நிலைமையை தங்களை ஆள்பவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எண்ணி, விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினார் இரட்டைமலை சீனிவாசன். அதற்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், `நீங்கள் தவறி விழுந்தால்கூட உங்களைத் தூக்கி விட மாட்டார்களா?' என்று கேட்கிறார். `இல்லை, தூக்கி விட மாட்டார்கள்' என்று சொல்ல, அவரை பக்கத்தில் அழைத்து, அவரின் கோரிக்கைகளை கனிவாகத் தெரிந்துகொண்டார் மன்னர்.

`நாட்டின் விடுதலை என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலையே. முழு சுதந்திரம் எங்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கி தீண்டாமையை ஒழிக்க வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கு போதிய சட்டமன்ற பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடர்கள் சட்டப் பாதுகாப்புடன் முன்னேற்றம் காண முடியும்' என்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் கோரிக்கை வைத்த மாபெரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசன்.

Gandhi
Gandhi

வட்டமேசை மாநாட்டுக்குப் பின் தாயகம் திரும்பிய இரட்டைமலை சீனிவாசனின் புகழ் நாடெங்கும் பேசப்பட்டது. 03.06.1931-ம் ஆண்டு ராவ் பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் தேசப்பிதா மகாத்மா காந்தியும், கவிக்குயில் சரோஜினியும் பங்கேற்றனர். இம்மாநாட்டில்தான் `ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர், இஸ்லாமியர், சீக்கியர்கள் போன்றோருக்கு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்படும், அதைப்போன்று சமூகத்தில் அடித்தட்டு விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனித்தொகுதி வழங்க வேண்டும்' என்று அண்ணல் அம்பேத்கரும், தலைவர் இரட்டைமலை சீனிவாசனும் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று நடைமுறைப்படுத்த பிரித்தானிய அரசு முடிவெடுத்து இட ஒதுக்கீடு வழங்கியபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார் காந்தி. இந்து, முஸ்லிம், சீக்கியர் முக்கோணத்தை விரும்பாமல் ஏற்றுக்கொண்ட போதிலும் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து மக்களைப் போன்றே தாழ்த்தப்பட்ட மக்களும் இருப்பார்கள், அவர்களுக்கென்று தனித் தொகுதி உள்ளிட்ட எவ்வித சிறப்பு பிரதிநிதித்துவத்தையும் நான் கடுமையாக எதிர்ப்பேன் என்று பேசிவிட்டு வந்தார். இருப்பினும், காந்தியின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஆங்கில அரசு இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் முடிவெடுத்து அறிவித்தனர். ஆனால், காந்தியடிகள், ``தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதிலிருந்து அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களாகக் கருதப்படுவதால் அதை நான் கடுமையாக எதிர்த்துப் போராடுவேன்" என்று கூறி இந்தியா திரும்பிய வேளையில், 19.09.1932 அன்று அவர் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். சாகும்வரை சிறையில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

இச்சமயத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் அரணாக ஒற்றைக் குரலாக ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் இருந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், ஒரு தந்தியை அண்ணல் அம்பேத்கருக்கு அனுப்பினார். ஒரு காந்தியின் உயிரைவிட லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்கால விடியல் பெரியது. எனவே, உங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள் என்று சொன்னார். காந்தியின் உண்ணா நிலை அறப்போராட்டம் நாடெங்கும் அதிர்வலைகளை பதற்றத்தை உருவாக்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கியது. இதுகுறித்து தலைவர்கள் காந்தியிடம் பேசி பயன் இல்லாமல் போகின்ற வேளையில், தலைவர் இரட்டைமலை சீனிவாசன் தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக எரவாடா சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட காந்தியை மூன்று முறை சந்தித்துப் பேசினார். ஆனால், காந்தி வாதாடி வெற்றி பெறுவதை தவிர்த்து, உண்ணாவிரதம் இருந்து அனுதாபம் தேட வேண்டியவரானார் என்பதைக் கண்டு பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டேன் என்று தலைவர் சீனிவாசன் அவர்கள் சொல்கிறார்.

இது குறித்து அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் தங்கள் விலா எலும்பு தேய உழைத்தனர். பல வெற்றிகளையும் வீரத்தழும்புகளையும் அவர்கள் வரலாறு பறைசாற்றுகிறது. ஆதிக்க சாதி அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைக் கண்ட அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ஒரு நாள்கூட சிறை சென்றதில்லை என்பது வியப்புக்குரியது. அனைத்துப் போராட்டங்களைப் பற்றிய தெளிவை தன் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் விளக்கி மக்களை அரசியல் படுத்தி சட்டப் பாதுகாப்புடன் அவரின் போராட்டங்கள் நடைபெற்று உள்ளன என்பது அவரின் வரலாற்றை உள்வாங்குகிறபோது அறிய முடிகிறது. கற்பி, புரட்சிசெய், ஒன்றுசேர் என்பது வார்த்தை வரிகள் அல்ல; அவரின் வாழ்க்கை நெறியாக அமைந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தன் வாழ்நாளில் ஒரு முறைகூட சிறை செல்லாதவர் அவர். பிரிட்டிஷ் ஆட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தந்த இரட்டை வாக்கு, தனித்தொகுதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கக் கூடாது என்று எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த மகாத்மா காந்தியை சந்தித்து தன் சமூக மக்களின் கருத்தைத் தெரிவிப்பதற்காக மட்டுமே சிறைச்சாலைக்கு பார்வையாளராகச் சென்றுள்ளார்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

காந்தியை சந்தித்து தன் நிலையை அண்ணல் அம்பேத்கர் விளக்குகிறார். காங்கிரஸும் காந்தியும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை எல்லாம் கவனித்துக் கொள்வதாக வாக்களிக்கிறார்கள். அதை ஏற்க மறுத்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ``காந்தியின் வாக்குறுதிகளை நம்பி என்னுடைய மக்களின் பாதுகாப்பை நான் பணயம் வைக்கத் தயாராக இல்லை. மகாத்மா காந்தி ஒன்றும் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி அல்ல; பழிதீர்க்கும் மனப்பான்மை எண்ணம் காங்கிரஸுக்கு இல்லை என்று வைத்துக்கொண்டாலும், காங்கிரஸ் என்றென்றும் நிலைத்திருக்க போவதில்லை. தீண்டாமை ஒழித்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரை உய்விப்பதையே தமது லட்சியமாகக் கொண்ட எண்ணற்ற மகாத்மாக்கள் பலர் இந்தியாவில் தோன்றி மறைந்து உள்ளனர். ஆனால், அவர்கள் லட்சியம் வெற்றி பெறவில்லை, நிறைவேறவில்லை மகாத்மாக்கள் தோன்றி மறைந்தனரே தவிர, தீண்டாதவர்கள் தீண்டப்படாதவர்களாகவே இருந்துவிட்டனர். இன்றும் அதே நிலையில்தான் இருந்து வருகிறோம். எனவே, என் சமுதாய மக்களின் பாதுகாப்பு சட்டப்படி உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன், இத்தீர்ப்பு மாற்றப்பட வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினால் அவரது செயற்குறிப்புகளை முன் வைக்கட்டும் இத்தீர்ப்பின் கீழ் எங்களுக்கு அளிக்கப்பட உள்ள பாதுகாப்பைவிட சிறந்த பாதுகாப்பு அவரது செயற் குறிப்புகளின் கீழ் கிடைக்கும் என்று மெய்ப்பிக்கட்டும் மகாத்மா அவர்கள் மேற்கொள்ள உத்தேசித்துள்ள அபாயகரமான நடவடிக்கையை விட்டுவிடுவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

தனி வாக்காளர் தொகுதி கேட்பதாலேயே இந்து சமுதாயத்தை நாங்கள் அவமதிக்கிறோம்; அதற்கு தீங்கு இழைக்கிறோம் என்று பொருள் அல்ல. எங்கள் முன்னேற்றத்துக்கு சாதி இந்துக்களையே நம்பியிருக்கும் நிலையை மாற்றவே இவ்வாறு தனி வாக்காளர் தொகுதி வேண்டுகிறோம். சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள இதைவிட நல்ல சிறந்த காரணங்கள் இருக்கின்றன. எனவே, கடவுள் பெயரால் அவரை நான் கேட்டுக்கொள்கிறேன் தன் முடிவை மாற்றிக்கொள்ளட்டும் தீர்மானத்தை நிறைவேற்றுவதால் ஏற்படக்கூடிய பயங்கரமான விளைவுகளைத் தவிர்க்க வேண்டும். பயங்கரமான விளைவுகளை மகாத்மா விரும்ப மாட்டார் என நம்புகிறேன். ஆனால், அவர் உண்ணாநோன்பை விடாமல் தொடர்ந்தால் இந்தப் பயங்கர விளைவுகள் நிச்சயம் ஏற்படும்." என்றார். மேலும், ``அவரது உயிர், என் மக்களின் உரிமைகள்; இவை இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தை அவர் எனக்கு ஏற்படுத்த மாட்டார் என நம்புகிறேன். ஏனெனில், என் மக்களை கை கால்களைக் கட்டிப் போட்டு சாதி இந்துக்களின் அடிமைகளாகப் பல தலைமுறை வாழ நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்" என்று அம்பேத்கர் தன் நிலையை விளக்கியும் சனாதனிகளின் முயற்சி வெற்றி பெரும் வகையில் காந்தி தன் உண்ணா நிலை போராட்டம் தொடர நாடு கொந்தளிப்புக்கு உள்ளானது. எனவே பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு தரப்பிலும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தரப்பு விருப்பம் இல்லாமல் ஒப்பந்தம் திணிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளும் நிலை உருவானது.

காந்தியின் உயிர் காக்க ஆறு கோண வடிவில் அமர்ந்து
24.09.1932-ம் நாள் மாலை 3 மணி அளவில் அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது அதுதான் வரலாற்று சிறப்பு மிக்க பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தில் டாக்டர் அம்பேத்கர், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், இரட்டைமலை சீனிவாசன், சாப்ரூ அய்யங்கார், பண்டித மாளவியா பிரசாத் பிர்லா, டாக்டர் சோலங்கி சிவராஜ் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

26.09.1932 காந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வடதுருவத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தென்துருவத்தில் அவருக்கு முன்னோடியாக தலைவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்.

தியாகி இரட்டைமலை சீனிவாசன்
தியாகி இரட்டைமலை சீனிவாசன்

1892-ல் தொடங்கப்பட்ட தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் சமுதாய உரிமைப்போர் அகில இந்திய அளவில் பிரதிபலித்தது. தலைவர் சீனிவாசன் அவர்களின் சிறப்புத் தகுதிகளை சிறப்பிக்கும் வகையில் 01.01.1936-ம் ஆண்டு திவான் பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். அதேபோன்று தமிழ்த் தென்றல் திரு வி.க அவர்களால் திராவிடமணி என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக இருந்து நல்ல பல கருத்துகளை வழங்கினார். அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தீண்டாமை ஒழிப்புக்காகத் தளர்வில்லாமல் அரும்பாடுபட்டு வந்த தலைவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், சென்னை பெரியமேடு வீரபத்திரன் தெருவில் கதவு எண் 4-ல் தனது இல்லத்தில் 86 வது வயதில் 18.9.1945-ல் இயற்கை எய்தினார். அவரது பூதவுடல் சென்னை ஓட்டேரி இடுகாட்டில் அவர் மனைவியின் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராவ் சாகிப், ராவ் பகதூர், திவான் பகதூர், திராவிட மணி, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் ஓங்குக. அவர் பயணித்த முட்கள் நிறைந்த பாதையை நினைவுகூர்வோம்; அவர் லட்சியங்களை வென்றெடுக்க சபதம் ஏற்போம்.

- மல்லை சத்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism