Published:Updated:

25 ஆயிரம் கோடி ரூபாய்... அதிகரித்து வரும் அரசின் ஓய்வூதியச் செலவுகள்!

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

2018-2019-ம் ஆண்டு அரசின் மொத்த வரிவருவாய் 1,64,950 கோடி ரூபாய். இதில் ஓய்வூதியச் செலவு 25,362 கோடி ரூபாய்.

Old age
Old age

"அரசின் மொத்த வருவாயில் 80 சதவிகிதம், அரசு ஊழியர்களுக்கே சம்பளமாகவும் ஓய்வூதியமாகவும் போய்விடுகிறது. மீதமுள்ள தொகையில்தான் அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியிருக்கிறது'' - மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதிர்த்த முத்துகளில் இதுவும் ஒன்று.

Pension Scheme Spendings
Pension Scheme Spendings
Vikatan

அரசு ஊழியர்களுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அது எடப்பாடி ஆட்சிவரையில் தொடர்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தினார்கள்.

`பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை; பணிக்குத் திரும்பாவிடில் துறைரீதியான நடவடிக்கை!' என எச்சரித்தது, எடப்பாடி அரசு. அதன்பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள் பெரும்பாலும் தி.மு.க. கூட்டணிக்கு விழுந்தன. போராட்டத்தை ஒடுக்கிய எடப்பாடி ஆட்சிக்குக் காட்டிய எதிர்ப்பு, தேர்தலில் எதிரொலித்தது.

ஒவ்வோர் ஊதிய திருத்தத்திற்குப் பிறகும் பணியில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கிவருவதால், ஓய்வூதியச் செலவினம் ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டு வருகிறது.

அரசு ஊழியர்களுக்குச் சம்பளமாக அரசு ஒதுக்கும் நிதி ஒருபக்கம் இருக்கட்டும். மறுபக்கம், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க அரசு எவ்வளவு செலவழிக்கிறது எனப் பார்ப்போம்.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கான பலன்களை விரைவாக வழங்குவதை உறுதிசெய்வதற்கும் ஓய்வூதியதாரர்கள் குறைகளைத் தீர்ப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது, ஓய்வூதிய இயக்கம். 2019 மார்ச் 31-ம் தேதி கணக்குப்படி, தமிழ்நாட்டில் 7,37,699 ஓய்வூதியதாரர்கள் இருக்கிறார்கள். இதில் ஐந்து வகை ஓய்வூதியதாரர்கள் அடக்கம்.

Pension Scheme Spendings
Pension Scheme Spendings
Vikatan

4,12,224 மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், 67,785 ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள், 1,98,045 மாநில அரசு குடும்ப ஓய்வூதியதாரர்கள், 28,569 ஆசிரியர் குடும்ப ஓய்வூதியதாரர்கள், 31,076 கருணைத்தொகை பெறும் ஓய்வூதியதாரர் உள்ளிட்டோர் என மொத்தமாக 7,37,699 ஓய்வூதியதாரர்களுக்குத் தமிழக அரசு ஓய்வூதியம் அளித்துவருகிறது. இந்த நிதியாண்டான 2019-2020 பட்ஜெட்டில் ஓய்வூதியத்துக்காக மட்டும் 32,395.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஓய்வூதியம் பெறத் தகுதி பெறுவதற்குக் குறைந்தபட்ச தகுதி பணிக்காலம், 20 நிறைவுற்ற அரை ஆண்டுகள் (20 completed half years). முழு ஓய்வூதியம் பெறத் தகுதி பெறுவதற்குக் குறைந்தபட்ச தகுதி பணிக் காலம் 60 நிறைவுற்ற அரை ஆண்டுகள் ஆகும். மேலும் அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியத்தில் 50 சதவிகிதம் அல்லது இறுதிப் பத்து மாதப் பணிக்காலத்தில் பெற்ற சராசரி ஊதியத்தில் 50 சதவிகிதம். இதில் எது அதிகமோ, அதனடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படும். 2017 அக்டோபர் 1-ம் தேதி முதல் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் 7,850 ரூபாய்.

80 வயது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வயதிற்கேற்ப அடிப்படை ஓய்வூதியம், அடிப்படை குடும்ப ஓய்வூதியத்தில் கூடுதல் ஓய்வூதியமாக 2011-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்களுக்கும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படுவது போன்றே ஓய்வுக் காலப் பயன்கள் தரப்படுகின்றன.

ஒவ்வோர் ஊதிய திருத்தத்திற்குப் பிறகும் பணியில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கிவருவதால், ஓய்வூதியச் செலவினம் ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டு வருகிறது.

"அதிகரித்துவரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவினங்களால் அரசின் நிதிச்சுமை அதிகமாகி வருகிறது. இதனால் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. வருவாய்ச் செலவினங்களை மேற்கொள்ள அரசு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது'' என்கிறார் நிதி அமைச்சர், ஓ.பன்னீர்செல்வம்.

O Panneerselvam
O Panneerselvam

"இது உள்கட்டமைப்பு, நலத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரங்களை மட்டுப்படுத்துகிறது. காலப்போக்கில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவதுடன், அந்தக் குறைந்த அளவிலான பணியாளருடன் அதிக அளவிலான ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியச் செலவினங்களை ஏற்க வேண்டிய நிலை. இதனால் தாங்க இயலாத அளவுக்கு நிதிச்சுமை ஏற்படும்'' என்கிறார் பன்னீர்செல்வம்.

2001-2002-ம் நிதியாண்டில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காக அரசு செலவழித்த தொகை 3,050.48 கோடி ரூபாய். இது படிப்படியாக உயர்ந்து 2005-2006-ம் ஆண்டில் 4,488.83 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2010-2011-ம் ஆண்டில் 11,855.27 கோடி ரூபாயாக அதிகரித்தது. இந்த நிதியாண்டில் இந்தத் தொகை 32,415.72 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது.

அரசின் மொத்த வருவாய் வரவுகளில் ஓய்வூதியத்தின் பங்கு எவ்வளவு தெரியுமா? 16 சதவிகிதம் 2001-2002-ம் ஆண்டிலிருந்து இந்தச் சதவிகிதம் குறையவே இல்லை.

Minister Jayakumar
Minister Jayakumar

`பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நேரத்தில், "அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பிற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறுகின்றனர்'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

இதுதொடர்பாக அப்போது ஜெயக்குமார் பெயரில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டார்கள். அதில் அரசு ஊழியர்களின் சம்பள விவரங்களையும் அரசின் வரவு-செலவையும் பட்டியலிட்டார். 2018-2019-ம் ஆண்டு பட்ஜெட்டின்படி, அரசின் மொத்த வரிவருவாய் மற்றும் மத்திய அரசின் திட்ட நிதியாக 1,64,950 கோடி ரூபாய் வருகிறது. அதில் சம்பளத்துக்கான செலவு மட்டும் 52,171 கோடி ரூபாய் ஆகும். ஓய்வூதியச் செலவாக 25,362 கோடி ரூபாயும், நிர்வாகச் செலவாக 10,837 கோடி ரூபாயும் செலவாகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வருடத்துக்கு அரசு செலுத்தும் வட்டித் தொகை 28,729 கோடி ரூபாய். மக்கள் நலத்திட்டங்களுக்காக 47,851 கோடி ரூபாய்.