Published:Updated:

பிசுபிசுக்கும் ரெய்டுகள்... “க்யாரே... செட்டிங்கா?”

நாங்கள் ரெய்டுக்குச் செல்லும் முன்பே, சம்பந்தப்பட்டவரின் முதலீடுகள், எங்கே, எவ்வளவு பதுக்கப்பட்டிருக்கின்றன என்பது போன்ற விவரங்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டுதான் செல்வோம்

பிரீமியம் ஸ்டோரி

2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, வீதிக்கு வீதி, “தமிழக அமைச்சர்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பவர்கள் இரண்டு மணிகள்தான். ஒருவர் தங்கமணி, மற்றொருவர் வேலுமணி. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், எடப்பாடியுடன் இந்த இரண்டு மணிகளும் சிறைக்குச் செல்வார்கள்” என்று கர்ஜித்தார் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின். இன்று தி.மு.க அரியணை ஏறி ஆறு மாதங்களை நெருங்குகிறது. முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள் தடதடக்கின்றன. ஆனால், மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தவிர பிறருக்கு சம்மன்கூட அனுப்பப்படவில்லை. ‘மேல் நடவடிக்கை இல்லாத... ரெய்டுக்கு ஆளானவர்களைக் கொஞ்சம்கூட அச்சப்படுத்தாத இந்த ரெய்டுகள் வெறும் செட்டிங்தானா?’ என்கிற விமர்சனங்கள் தி.மு.க-வினராலேயே முன்வைக்கப்படுகின்றன!

பிசுபிசுக்கும் ரெய்டுகள்... “க்யாரே... செட்டிங்கா?”

தயங்கும் ஸ்டாலின்... மர்மம் என்ன?

அறிவாலயத்துக்கு நாம் சென்றிருந்தபோது, மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார்கள் சில தி.மு.க நிர்வாகிகள். “2001-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததுமே, அடுத்த இரண்டே மாதங்களில் தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா. அப்போது, மேம்பால ஊழல் குற்றச்சாட்டில் நள்ளிரவில் கருணாநிதியையும் கைதுசெய்தது காவல்துறை. அதேபோல, 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோதும் தி.மு.க மாஜிக்கள் மீதான பிடியை இறுக்கினார் ஜெயலலிதா. கே.என்.நேரு, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட தி.மு.க மாஜிக்கள்மீது கைது படலங்களும் அரங்கேறின. ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையைப்போலத்தான், முதல்வர் ஸ்டாலினிடமும் அதிரடியான நடவடிக்கையைத் தற்போது எதிர்பார்க்கிறோம். ஆனால், ஏனோ ஸ்டாலின் தயக்கம் காட்டுகிறார்.

இதுவரை, வேலுமணி, வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், சேலம் இளங்கோவன் ஆகிய அ.தி.மு.க நிர்வாகிகளுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடைபெற்றிருக்கிறது. ‘வருமானத்துக்கு அதிகமாக 55 சதவிகிதம் சொத்து சேர்த்துவிட்டார்’ என்று புகாருக்கு உள்ளாகியும், இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பிய பிறகுதான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் விசாரணைக்காக ஆஜராகிறார். மற்றவர்களுக்கு இன்னும் சம்மன்கூட அனுப்பப்படவில்லை. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது, பல்வேறு சந்தேகங்களுக்கு விதை தூவியுள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் சரவணன். அவருடைய சென்னை நந்தனம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் சிக்காமல் தப்பிச் சென்ற அவர், தற்போது டெல்டாவைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகி ஒருவரின் பாதுகாப்பில் இருக்கிறார். ‘முனிவர்’ பெயர்கொண்ட தொழிலதிபர் ஒருவர் மூலமாக ஆட்சி மேலிடத் தரப்புடன் சமாதானப் பேச்சுவார்த்தையையும் அவர் நடத்துவதாகக் கூறப்படுகிறது. ‘கண்துடைப்புக்கு ரெய்டு நடத்திவிட்டு, தப்பிக்கவைக்க பேரம் நடக்கிறது’ என்பது போன்ற தகவல்கள் தி.மு.க தொண்டர்களை உணர்வுரீதியாகச் சோர்ந்துபோகச் செய்கின்றன. ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தால், இது போன்ற பேச்சுகளே எழுந்திருக்காது” என்றனர்.

எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தபோது, அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த ஸ்டாலின், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட எட்டு அமைச்சர்கள் மீது 97 பக்கப் புகார்ப் பட்டியலை அளித்தார். குறிப்பாக, எடப்பாடி மீது 6,000 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு, வேலுமணி மீது எல்.இ.டி பல்பு கொள்முதலில் 900 கோடி ஊழல், தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதியில் 950 கோடி ஊழல் எனப் பக்கம் பக்கமாகப் புகார்ப் பட்டியலை வாசித்தது தி.மு.க. அதோடு, ‘வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்’ என்று நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனே வேலுமணி மீதான பிடி இறுகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்த பிறகு அந்த விவகாரம் பிசுபிசுத்துப் போய்விட்டதாகத்தான் பலரும் சந்தேகிக்கிறார்கள். வேலுமணி மீது குற்றம்சாட்டிய ஒப்பந்ததாரர் திருவேங்கடத்தின் புகாரும் கிடப்பில்தான் இருக்கிறது. வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அந்த ரெய்டு மீதான மேல் நடவடிக்கைகள் எதுவும் இல்லை.தி.மு.க குற்றம்சாட்டிய ஒன்பது பேரில், நான்கு பேர் மீதுதான் இதுவரை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. கவர்னரிடம் ஸ்டாலின் கொடுத்த புகார்ப் பட்டியலில் முதன்மையானவரான எடப்பாடி மீது, இதுவரை குறிப்பிடத்தக்க வகையில் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் நாம் விசாரித்தபோது, ரெய்டுகளில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்தும், அரசிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைக்காததால், மேற்கொண்டு எதையும் நகர்த்தாமல் அதிகாரிகள் மெளனம் காப்பதாகக் கூறப்பட்டது.

பிசுபிசுக்கும் ரெய்டுகள்... “க்யாரே... செட்டிங்கா?”

துபாய் முதலீடு... சிக்கிய ஆவணங்கள்!

நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சிலர், “நாங்கள் ரெய்டுக்குச் செல்லும் முன்பே, சம்பந்தப்பட்டவரின் முதலீடுகள், எங்கே, எவ்வளவு பதுக்கப்பட்டிருக்கின்றன என்பது போன்ற விவரங்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டுதான் செல்வோம். ரெய்டில் எங்களுக்குக் கிடைக்கும் ஆவணங்களெல்லாம் கூடுதல் பலம்தான். ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக ஒரு ரூபாய் சொத்து சேர்த்திருந்தாலும் அது குற்றம்தான். அந்த வகையில், இதுவரை நடந்த ரெய்டில் சிக்கிய அனைவருமே வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளனர். மணியானவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டிலிருந்து நகராட்சி, மாநகராட்சிக்கு சப்ளை செய்யப்பட்ட பொருள்களின் ஒரிஜினல் பில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் எல்.இ.டி பல்புகளைக் கூடுதல் விலைக்கு சப்ளை செய்த நிறுவனத்தையும் எங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். ஒவ்வொரு பல்புக்கும் அரசு நிர்ணயித்த விலை எவ்வளவு, கமிஷன் எவ்வளவு என்கிற விவரங்களையும் திரட்டியிருக் கிறோம். பிளீச்சிங் பவுடர் கொள் முதலில் நடந்த முறைகேடு குறித்தும் சில ஆவணங்கள் சிக்கியுள்ளன.

முன்னாள் அமைச்சரான கோல்டு பிரமுகர்மீது இதுவரை ரெய்டு நடத்தப்படவில்லை. ஆனால், இரண்டு நிலக்கரி நிறுவனங்களோடு அவர் தரப்பு கைகோத்திருந்ததையும், அந்த நிறுவனங்கள் மூலமாக துபாயில் சில முதலீடுகள் நடந்திருப்பதையும் கண்டறிந் துள்ளோம். மின்சாரம் கொள்முதல் செய்ததில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அவரின் மருமகன் தரப்பிலிருந்து சில வேலைகளைச் செய்து கொடுத்துள்ளனர். இதற்காகப் பெருமளவில் ‘பிரதி உபகாரம்’ நடந்துள்ளது. சிங்கப்பூரிலுள்ள ஒரு நிறுவனம் மூலமாக, தெற்காசியாவில் பெரும் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்களெல்லாம் திரட்டப்பட்டுள்ளன. அதேபோல் முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனின் வீட்டில் நடந்த ரெய்டில், எடப்பாடி சம்பந்தி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட டெண்டர்கள், அதன் மூலமாக வந்த நிதி உள்ளிட்டவை குறித்தும் ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறோம்.

வீரமான முன்னாள் அமைச்சர் தொடர்புடைய வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டபோது, பெங்களூரிலும் ஏலகிரியிலும் அவர் தரப்பினர் ‘ரிசார்ட்’ கட்டியது, சொகுசு கார் வைத்திருந்தது உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றினோம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறைபோல ரெய்டு நடத்தியவுடன் சம்பந்தப்பட்டவர்களை நாங்களும் கைதுசெய்துவிட முடியாது. பூர்வாங்க விசாரணை முடிந்து, விரைவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். எத்தனை வருடமானாலும், யாரும் தப்ப முடியாது. ஆட்சி மேலிடம் நினைத்தால், சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்மீது உடனடி கைது நடவடிக்கைக்கு உத்தரவிடலாம். ஆனால், அது போன்ற உத்தரவு ஏதும் இதுவரை வரவில்லை. ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் மலைபோலக் குவியத் தொடங்கியிருக்கின்றன. இதைவைத்து அடுத்த என்ன செய்வது என்பதும் புரியவில்லை” என்றனர்.

கைமாறியதா 300 ஸ்வீட் பாக்ஸ்?

தன் வீட்டில் ரெய்டு நடந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கர், “பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். இதற்காக நாங்கள் கலங்க மாட்டோம்” என்று கூலாக பதிலளித்தார். அதேபோல, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பும், “ரெய்டு நடந்தாலும் எங்கள்மீது எந்த ஆக்‌ஷனும் இருக்காது. பேசவேண்டியவர்களிடம் பேசிவிட்டோம்” என்று நக்கலாகத் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிச் சிரிக்கிறதாம். ‘லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு வரும் தகவல் முன்கூட்டியே லீக் ஆகிவிடுவதால், அ.தி.மு.க-வினர் கூலாக ரெய்டை எதிர்கொள்கிறார்கள். அடுத்ததாக, தங்கமணி, சரோஜா, காமராஜ் ஆகியோருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை குறிவைத்திருப்பதாக வெளிப்படையாகவே பேசப்படுகிறது. ஆக்‌ஷனைப் பற்றி முன்னாள் மாஜிக்கள் ஏன் பயப்படப்போகிறார்கள்?’ என்று குமுறுகிறது காக்கிகள் தரப்பு. இந்தத் தகவல் லீக், அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமல்ல, அமைச்சரவைக்குள்ளும் இருப்பதுதான் தி.மு.க-வினரைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

பெயர் குறிப்பிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய கொங்கு மண்டல தி.மு.க நிர்வாகி ஒருவர், “மணியானவருக்கு நெருக்கமாக இருக்கும் இனிப்பு அமைச்சர்தான் அமைச்சரவையின் சில முக்கிய முடிவுகளை எதிர்முகாமுக்கு பாஸ் செய்கிறார். கடந்த ஆட்சியில் கோலோச்சிய சில பினாமி நிறுவனங்கள், தி.மு.க ஆட்சியிலும் ஒப்பந்தங்கள் எடுக்கின்றன. கோல்டு பிரமுகருக்கு நெருக்கமான கொங்கு மண்டல நபர் ஒருவர்தான், இப்போது ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார். எடப்பாடியின் சம்பந்தி நிறுவனம் எங்கள் ஆட்சியிலும் ஒப்பந்தம் எடுக்க முடிகிறது. முன்னாள் அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, வெளிநாட்டில் வைத்து 300 ஸ்வீட் பாக்ஸ்கள் கைமாறியதாக தி.மு.க-வுக்குள்ளேயே பரபரப்பு பற்றி எரிகிறது. ‘இது போன்ற தகவல்களெல்லாம் பொய்’ என்று தன் செயலால் முதல்வர்தான் நிரூபிக்க வேண்டும்” என்று புலம்பினார்.

வேலுமணி, எடப்பாடி பழனிசாமி,  தங்கமணி, விஜயபாஸ்கர்
வேலுமணி, எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, விஜயபாஸ்கர்

க்யாரே... செட்டிங்கா?

சமீபத்தில் முதல்வர் இல்லத்தில் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி., தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடந்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள்மீது எடுக்கப்பட்ட ரெய்டு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தரப்பில் விளக்கியிருக் கிறார்கள். அப்போது, “கிடைத்திருக்கும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து அவர்களைக் கைதுசெய்யலாம். ரெய்டு மட்டும் நடத்திக் கைதுசெய்யாமல் இருந்தால், அவர்கள் தவறே செய்யாதவர்கள்போல பொதுமக்களிடம் பிம்பத்தை ஏற்படுத்திவிடுவார்கள்” என்று அதிகாரிகள் நாசுக்காகச் சொல்லியிருக்கிறார்கள். அதைப் பற்றி முதல்வர் யோசித்துக் கொண்டிருக்கும்போது, மூத்த அமைச்சர் ஒருவர் இடைமறித்து, “ரெய்டு நடத்தியதற்கே அவர்கள் அரண்டுபோய் கிடக்கிறார்கள். அவர்களைக் கைதுசெய்தால் மக்கள் மத்தியில் நீங்கள் பழிவாங்கியதாகத் தோன்றும். அவர்கள் இமேஜ் உயர்ந்துவிடும். பேசாமல் கேஸ் மட்டும் போட்டுவிடுவோம். நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துக்கொள்ளட்டும்” என்று குழப்பிவிட்டாராம். வீரமான ஒரு முன்னாள் அமைச்சருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே முதல்வரை இப்படிக் குழப்பிவிட்டாராம் அந்த அமைச்சர். இந்தக் குழப்பத்தால், எந்த முடிவும் எடுக்காமல் முதல்வர் ஸ்டாலினும் நீண்ட யோசனைக்குப் போய்விட்டதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

முதன்மைச் செயலாளர் அந்தஸ்திலுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், “மாஜி அ.தி.மு.க-வினருள் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். ஆனால், தி.மு.க-விலுள்ள சில சீனியர்கள் மாஜிக்களுடன் நெருக்கமான உறவைவைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் முதல்வரிடம் கைதுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு விவகாரத்தில், ஸ்டாலின் காட்டும் இந்த மௌனமும் தாமதமும் அவர்மீதான விமர்சனத்துக்கு காரணமாகிவிடக் கூடாது” என்று எச்சரிக்கும் தொனியில் கூறினார்.

அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறுவது ஒருவகையில் நியாயமானதுதான்.

அ.தி.மு.க-வை டெல்லியின் அடிமையாகவும், ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் கடுமையாக விமர்சித்துத்தான் ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. “ஊழல் அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் ஊழலை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும்” என்று மேடைக்கு மேடை பேசினார் ஸ்டாலின். ஆனால் இதுவரை ரெய்டைச் சந்தித்த நான்கு முன்னாள் அமைச்சர்களுமே எந்த நெருக்கடியும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள். ‘அடுத்த ரெய்டு இவர்மீதுதான்’ என்று கருதப்படும் ஒருவரும் சமீபத்தில்தான் கூலாக கோவா டூர் சென்று திரும்பியிருக்கிறார்.

‘லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு நடவடிக்கைகள் ஏன் பிசுபிசுத்துப் போயிருக்கின்றன... எல்லாம் சில அண்டர்ஸ்டாண்டிங்கோடு நடக்கும் வெறும் ‘செட்டிங்’ நாடகம்தானா... உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டிய முதல்வருக்கு என்னதான் தயக்கம், குழப்பம்?’ என்று அவர் சொந்தக் கட்சிக்காரர்களே விமர்சனம் செய்யும் அளவுக்குப் போயிருக்கிறது நிலைமை.

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, “கவர்னரிடம் ஊழல் பட்டியலைக் கொடுத்திருக்கிறோம். கவர்னர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ, நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அடுத்த நாளே அவர்களெல்லாம் சிறைக்குள் போகிறார்களா இல்லையா என்று பாருங்கள்!” என்று அதிரடியாகப் பேசினார் ஸ்டாலின். பேச்சுகள் மட்டுமல்ல, செயல்களும் அதிரடியாக இருந்தால் மட்டுமே ஊழல் புரிந்தவர்களுக்கு பயம் இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு