அலசல்
அரசியல்
Published:Updated:

ரூ.17,590 கோடி ஸ்மார்ட் இல்லாத திட்டம்... அலட்சியத்துக்கு யார் பொறுப்பு?

ஸ்மார்ட் சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்மார்ட் சிட்டி

சேலத்தில் மட்டுமே 1,336 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள் முடிந்திருப்பதாகக் கூறியிருக்கிறது மத்திய அரசு.

பெரு வெள்ளத்தில் அம்பலமான பெரு ஊழலாக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 மாநகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் 17-ம் தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘ரூ.5,000 கோடி: வெள்ளத்தில் வெளிவரும் ஊழல் பெருச்சாளிகள்’ என்கிற தலைப்பில், சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்துள்ள குளறுபடிகளை வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்தியைத் தொடர்ந்து, நமது அலுவலகத்தைத் தொடர்புகொண்ட சில சமூக ஆர்வலர்கள், “மற்ற மாநகரங்களில் நடந்துள்ள ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளையும் ஆராயுங்கள். எந்த எதிர்காலத் திட்டமிடலும் இல்லாமல் அலட்சியமாக, பண விளையாட்டாகவும், வெற்று அலங்காரத் திட்டங்களாகவுமே அவை நடைபெற்றுள்ளன” என்றனர். மற்ற மாநகரங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் எப்படி நடக்கிறது என்பதை அறிய, களத்தில் இறங்கியது ஜூ.வி டீம்!

சமீபத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மாநிலங் களவையில் எழுப்பியிருந்த ஸ்மார்ட் சிட்டி தொடர்பான கேள்விக்கு, ‘தமிழ்நாட்டில் மொத்தம் 17,590.24 கோடிக்கு ரூபாய்க்கு ஸ்மார்ட் சிட்டிப் பணிகள் நடந்துவருகின்றன’ என்று பதிலளித்திருக்கிறது மத்திய அரசு. இதில், 4,143.3 கோடி ரூபாய்க்கான பணிகள் நிறைவடைந்துள்ளதையும், 13,114.16 கோடி ரூபாய்க்கான டெண்டர் பணிகள் முடிந்திருப்பதையும் கோடிட்டுக் காட்டி யுள்ளனர். ரூ.332.78 கோடிக்கான பணிகள் டெண்டர்விடும் நிலையிலுள்ளன. சேலத்தில் மட்டுமே 1,336 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள் முடிந்திருப்பதாகக் கூறியிருக்கிறது மத்திய அரசு. இவ்வளவு கோடிகளைக் கொட்டிச் செலவழிக்கப்பட்ட ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் உண்மை நிலை என்ன? அது ‘ஸ்மார்ட்டாக இல்லை’ என்பதே நமக்குக் கிடைத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்!

ரூ.17,590 கோடி ஸ்மார்ட் இல்லாத திட்டம்... அலட்சியத்துக்கு யார் பொறுப்பு?

‘காமன் சென்ஸ்’ இல்லாமல் பணிகள்... விலையேற்றி அடிக்கப்பட்ட கொள்ளை!

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சி.இ.ஓ-வாக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.ராஜூவின் மகள் சுகன்யா நியமிக்கப்பட்டதில் தொடங்கிய சர்ச்சை, திட்டத்துக்கு மூலப்பொருள்கள் வாங்கியது, குறிப் பிட்ட மூன்றெழுத்து நிறுவனத்துக்கு மட்டும் 140 கோடி ரூபாய் டெண்டர் பணிகளை ஒப்படைத்தது வரை நீள்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய கோவை ஒப்பந்ததாரர் ஒருவர், “குளங்களை அலங்கரிக்க நீர்நிலையின் பரப்ப ளவைக் குறைத்ததோடு, குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகளையும் அடைத்துள்ளனர். இதனால், தண்ணீர் செல்ல வடிகாலின்றி சில மணி நேர மழைக்கே சாலைகள் வெள்ளக்காடாகி விடுகின்றன. அந்தவகையில், கொஞ்சம்கூட ‘காமன் சென்ஸ்’ இல்லாமல் பணிகள் முடிந்திருக்கின்றன.

பூங்காக்களில், சுற்றுச்சூழலைச் சிதைக்கும் அந்நியத் தாவரமான உன்னிச் செடியை வளர்க்கின்றனர். உக்கடம் பெரியகுளம் அருகே கட்டப்பட்ட தடுப்புச்சுவர், கட்டிய சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது. வெளி மார்க்கெட்டில் கிடைப்பதைவிடக் கூடுதல் விலை வைத்து கொள்முதல் செய்ததால், ‘ஸ்மார்ட் சிட்டி’ ஒப்பந்தம் எடுத்த மூன்றெழுத்து நிறுவனம் கொள்ளை லாபம் பார்த்தது. உதாரணமாக, எம் 2, எம் 3 கிரேட் ரெடிமிக்ஸ்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விதியிருக்கும் நிலையில், விலை குறைவான எம் 1 கிரேட் ரெடிமிக்ஸை கட்டடப் பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர். செடிகள் கொள்முதலில் ஆரம்பித்து, கிரானைட் கற்களைப் பதித்தது வரை எல்லாவற்றிலும் விலையை ஏற்றி கன்னா பின்னாவெனக் கொள்ளையடித்திருக் கிறார்கள்” என்று அதிர்ச்சியூட்டினார்.

ஒரு பல்ப் 21,000 ரூபாய்... அதிரவைக்கும் ஊழல்!

இதே குற்றச்சாட்டு மதுரையிலும் ஒலிக்கிறது. ஏற்கெனவே தெருவிளக்குகள் உள்ள பகுதிகளிலேயே, மீண்டும் புதிதாக 30,337 விளக்குகள் அமைப்பதற்கு, சபரி எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்துக்கு 30.25 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. இதில், ‘ஒரு பல்பின் விலை எவ்வளவு?’ என ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்ட ‘DYFI’ மாவட்ட நிர்வாகி கார்த்திக் என்பவர், அரசு தந்த பதிலால் ஆடிப்போய்விட்டார்.

இது குறித்து நம்மிடம் பேசிய கார்த்திக், “இந்தத் திட்டத்தில் 20, 40, 60, 90, 120, 200 என ஆறு வகையான வாட்ஸ்களில் விளக்குகளை வாங்கியதாக ஆர்.டி.ஐ-யில் பதிலளித்துள்ள அதிகாரிகள், 20 வாட்ஸ் விளக்கு ஒன்றைப் பொருத்துவதற்கு மட்டும் 2,304.50 ரூபாய் செலவானதாகக் கணக்கு காட்டியுள்ளனர். இந்த விளக்குகளை வெளி மார்க்கெட்டில் வாங்கி, இரண்டு வேலையாட்கள் வைத்துப் பொருத்தினால்கூட இவ்வளவு செலவு வர வாய்ப்பில்லை. இவர்கள் பொருத்தியதாகச் சொல்லும் சுமார் 30,000 விளக்குகளில், 18,380 விளக்குகள் 20 வாட்ஸ் பல்புகள்தான். இதற்கு மட்டும் 4.23 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. மீதமுள்ள 12,000 விளக்குகளுக்கு 26 கோடி ரூபாயைச் செலவு செய்திருக்கிறார்கள். அதன்படி பார்த்தால், ஒரு விளக்கின் விலை சராசரியாக 21,666 ரூபாய் என்று வருகிறது. இது பெரிய மோசடி. முறையாக விசாரிக்கப்பட்டால் இந்த பல்ப் ஊழலில் மட்டும் பல உண்மைகள் வெளிச்சமாகும்” என்றார்.

ரூ.17,590 கோடி ஸ்மார்ட் இல்லாத திட்டம்... அலட்சியத்துக்கு யார் பொறுப்பு?

தேவையில்லாத தடுப்புச் சுவர்கள்... கொழித்த ‘சந்திர’ அதிகாரி!

தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவரும் பள்ளிகள் மேம்படுத்தலுக்காக 8 கோடி ரூபாயில் நடைபெறவிருந்த, நடந்து முடிந்த பணிகளுக்காக என அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் கையெழுத்திட்ட சில கோப்புகள் மாயமாகின. இதற்குப் பொறுப்பான அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதோடு, அந்த விவகாரம் அமுங்கிப்போனது.

திருநெல்வேலி மாவட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி பணிக்காகப் பெருமாள்புரம் உள்ளிட்ட சில இடங்களில் குறுகலான சாலைகளின் நடுவில் தேவையில்லாமல் தடுப்புச்சுவர் கட்டி, அழகுக்காக விளக்குகள் அமைக்கப்பட்டி ருக்கின்றன. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும் நிலை உருவாகியிருக்கிறது.

திருச்சி மாநகராட்சியின் உயர் பொறுப்பிலிருந்த ‘சந்திர’ அதிகாரியும், வேலுமணி தரப்பும் நெருக்கம் என்கிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்டு பெரிய அளவிலான காரியங்களை அந்த அதிகாரி சாதித்திருக்கிறார். நம்மிடம் பேசிய திருச்சி மாநகராட்சி அதிகாரி ஒருவர், “கலைஞர் அறிவாலயம் அருகே ஒரு கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், அந்தக் கழிவுநீர் வாய்க்காலின் இருபுறமும் தடுப்புச் சுவர்கள் கட்டியிருக்கிறார்கள். அதில் கொஞ்சம்கூட தரம் இல்லை. மேலும், சாக்கடையின் மேலே பாலமும் கட்டப்பட்டது. எதற்காக அந்தப் பாலம் என்று இதுவரை யாருக்கும் புரியவில்லை” என்றார்.

கார்த்திக்
கார்த்திக்

ஆற்றில் 6.5 கோடி... அகழியில் 11 கோடி... பதில் சொல்வது யார்?

தஞ்சாவூரில், மேல அலங்கம், வடக்கு அலங்கம் பகுதியில் சுமார் 3,000 குடும்பங்கள் வசிக்கின்றன. ஸ்மார்ட் சிட்டிப் பணிகளைக் காரணம் காட்டி, அவர்களை அங்கேயிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை தொடர்கிறது. அவர்களுக்கு எந்த இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை என்பது வேதனையின் உச்சம்.

வேலூர் கோட்டையின் இடது பக்க அகழியைத் தூர்வாரும் 11 கோடி ரூபாய் டெண்டரை ‘குமார் பில்டர்ஸ்’ என்கிற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க-வின் அம்மா பேரவைப் பொருளாளரான எஸ்.எம்.சுகுமார்தான் இந்த நிறுவனத்தின் உரிமையாளர். இந்தப் பணி தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அகழி முழுவதுமாகத் தூர்வாரப்படவில்லை. ‘சொந்தமாக பொக்லைன் இயந்திரங்களையும் மிதவைகளையும் விலைக்கு வாங்கி அரசு தூர்வாரியிருந்தாலே 11 கோடி ரூபாய் செலவாகாதே?’ என்கிற கேள்விக்கு மாநகராட்சி அதிகாரிகளிடம் பதில் இல்லை.

தமிழகத்திலேயே, தற்போதுவரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் அதிகம் நடந்திருப்பது சேலத்தில்தான். மாநகரில் ஓடும் திருமணிமுத்தாற்றின் கரைகளை மேம்படுத்தி, அதில் சேலம் மாநகரின் கழிவுகள் கலக்காமலிருக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், சுமார் ஆறரை கோடி ரூபாய்க்கு ஆற்றின் கரைகளில் தரமில்லாத இரும்புக்கம்பி வலைகளை மட்டுமே இதுவரை அமைத்துள்ளனர். மேலும் ஆற்றின் கரையோரம் இயற்கைச் சூழலைக் கெடுத்து அமைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்களும் பெயர்ந்து உடைந்துபோயுள்ளன. 70 சதவிகித பணிகள் அம்மாபேட்டை மண்டலத்தில் மட்டுமே நடைபெற்றிருப்பதும் விமர்சிக்கப்படுகிறது.

வேலுமணி
வேலுமணி
பொன்னையா
பொன்னையா

‘ஸ்மார்ட்’ இல்லாத திட்டங்கள்... அலட்சியத்துக்கு யார் பொறுப்பு?

ஈரோட்டின் பிரதான பிரச்னையே நீர் மாசுபாடுதான். இதைத் தடுக்க, ஸ்மார்ட் சிட்டியில் எந்தத் திட்டமும் இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் கான்கிரீட்டைக் கொட்டி, ஓடையின் அகலத்தைக் குறுக்குவதாகப் புகாருள்ளது. ‘ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் சாலைகள், ஓடைகளைக் குறுக்கி, ஸ்மால் சிட்டி ஆக்கலாமா?’ என்று கொதிக்கிறது ஈரோடு மாநகரம். ஈரோடு கிழக்கு அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-வாக இருந்த தென்னரசுவின் மகன் கலையரசனுக்கு 6 கோடி ரூபாய்க்கு வ.உ.சி பூங்கா சீரமைக்கும் பணி கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்டது. இந்தப் பூங்காவின் சுற்றுச்சுவர்களில் ஓவியங்கள் வரைவதற்கு, ஒரு சதுர அடிக்கு 30 ரூபாய் கொடுத்துவிட்டு, 80 ரூபாய்க்கு பில் போட்டுவிட்டதாகப் புகார் எழுப்பப்படுகிறது.

திருப்பூரில், ஏற்கெனவே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும் நொய்யல் ஆற்றின் கரையை, ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் சுருக்கி வருகின்றனர். பார்க் ரோடு அருகே தேவையே இல்லாத இடத்தில் நடை மேம்பாலம் அமைத்தனர். திருப்பூர், சேலம், வேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2,000 கோடி ரூபாயைக் கடந்துள்ளன. கூடுதலாக நிதிச் செலவு செய்யப்பட்டும், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இந்தத் திட்டங்கள் ‘ஸ்மார்ட்’டாக இல்லை என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கிறது. இந்த அலட்சியங்களுக்கும் முறைகேடுகளுக்கும் யார் பொறுப்பேற்பது?

ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையாவிடம் பேசினோம். “ஸ்மார்ட் சிட்டி பணிகளை முழுவதுமாக கண்காணித்துவருகிறேன். எத்தனை பணிகள் முடிந்துள்ளன; நிலுவையிலுள்ளன என்பது குறித்து ஆய்வு செய்துவருகிறோம். ஆய்வின் முடிவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றார்.

ரூ.17,590 கோடி ஸ்மார்ட் இல்லாத திட்டம்... அலட்சியத்துக்கு யார் பொறுப்பு?

இது குறித்து விளக்கம் கேட்க உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியைத் தொடர்புகொண்டோம். அவரது அலைபேசி எண் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அவரது உதவியாளர்களும் நம் அழைப்பை ஏற்கவில்லை. இது தொடர்பாக அவர்களுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளோம். நம் கேள்விகளை mlathondamuthur@tn.gov.in மெயிலிலும் அனுப்பியுள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்ட மாநகரங்களிலெல்லாம், ஒரு நாள் மழைக்கே சாலைகளெல்லாம் தெப்பமாகிவிடுகின்றன. இந்த விவகாரத்தில், வேலுமணி மீது முதல்வரே நேரடியாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இவ்வளவு நடந்த பிறகும் இதற்கெல்லாம் பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டிய வேலுமணி இதுவரை வாய் திறக்காதது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

ஒரு மாநகரின் கட்டமைப்பை வலுப்படுத்தவேண்டிய ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம், வெற்று அலங்காரத் திட்டமாகவே செயல்படுத்தப்பட்டிருப்பதும், இதில் நடந்திருக்கும் ‘மெகா’ ஊழல்களும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியளிக்கின்றன. ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக மாநகரங்களில் நடந்திருக்கும் பணிகள் குறித்து’ மக்களிடம் கருத்து கேட்டால், “பெரும்பாலும் சிரமங்களை உருவாக்கும்படிதான் பல வேலைகள் நடந்துள்ளன. உண்மையில் பிடுங்கியதெல்லாம் தேவையில்லாத ஆணி

களாகவே இருக்கின்றன” என்கிறார்கள். இதை முறையாகத் திட்டமிட்டு செயல்படுத்தியிருந்தால் நவீனமான, அழகான நகரங்கள் உருவாகியிருக்கும். மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால், திட்டமிடல் இல்லாததாலும், பணத்தை வாரிச்சுருட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாக இருந்ததாலும் ஏகப்பட்ட குளறுபடிகளில் மக்கள் பணமும் கனவுகளும் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தில் மாநில அரசுக்கு நிகராக, மத்திய அரசும் நிதிப்பங்களிப்பு செய்வதால், ‘ஸ்மார்ட் சிட்டி’ ஊழல் தொடர்பாக மத்திய உளவுத்துறை ரகசிய விசாரணையை ஆரம்பித்திருக்கிறதாம். நடவடிக்கை எடுக்கப்படுமா... பொறுத்திருந்து பார்ப்போம்!

ரூ.17,590 கோடி ஸ்மார்ட் இல்லாத திட்டம்... அலட்சியத்துக்கு யார் பொறுப்பு?

******

‘நிபுணர்களுக்கு’ லட்சங்களில் ஊதியம்!

ஸ்மார்ட் சிட்டி பணிகளை நிறைவேற்ற, வெளியிலிருந்து நிபுணர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைவிட அதிக அளவு ஊதியம் கொடுக்கப்படுகிறது. கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக நகர்ப்புற நிபுணராகப் பணியமர்த்தப்பட்டவருக்கு ஒரு நாள் ஊதியம் 9,641 ரூபாய். மாதம் அவர் 2,89,219 ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார். கோவையில் இப்படி நான்கு நிபுணர்கள் பணியாற்றிவருகின்றனர். மாதத்தின் 30 நாள்களும் பணி செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். இப்படி ஒவ்வோர் ஊரிலும் குறைந்தது இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு பேர் வரை பணியமர்த்தப்பட்டுள்ளனர்!