Published:Updated:

ரூ.5,000 கோடி - வெள்ளத்தில் வெளிவரும் ஊழல் பெருச்சாளிகள்!

இந்தியாவிலுள்ள நகரங்களை உலகத்தரத்துக்கு மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கொண்டு வந்தது

பிரீமியம் ஸ்டோரி

மழை வெள்ளம் சென்னையைச் சிதறடித்துக் கொண்டிருந்த சமயத்தில், முதல்வர் ஸ்டாலினிடமிருந்து வந்து விழுந்தன கோபமான வார்த்தைகள். “முந்தைய ஆட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி, என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணி பொறுப்பு வகித்த உள்ளாட்சித்துறை சார்பாகப் பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. கமிஷன் மட்டும் வாங்கியிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது” என்று வேலுமணிக்கு எதிராக ஆக்ரோஷமாக கர்ஜித்தார் முதல்வர். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, “கமிஷன் வாங்கியதை யார் பார்த்தது?” என்று ஸ்டாலினுக்கு பதிலளித்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாத ஸ்டாலின், தனக்கு நெருக்கமான அதிகாரிகள் வட்டத்தில், “பல கோடி ரூபாயைக் கொட்டிச் செலவழிக்கப்பட்ட தி.நகர் பகுதியிலேயே இடுப்பளவு நீர் தேங்கிவிட்டது. இவங்க செய்த தப்புக்கு மக்கள் சிரமப்படுறாங்க. நமக்கும் கெட்ட பெயராகுது’ என்று கொந்தளித்தாராம். ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எங்கே நடந்தது முறைகேடு?’ என விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் மொத்தமும் அதிர்ச்சி ரகம்!

ரூ.5,000 கோடி - வெள்ளத்தில் வெளிவரும் ஊழல் பெருச்சாளிகள்!

நடைபாதை, மழைநீர் வடிகாலுக்கு 400 கோடி!

ஸ்மார்ட் சிட்டி, மழைநீர் வடிகால் திட்டங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து, பெயர் குறிப்பிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் பேசினார். “இந்தியாவிலுள்ள நகரங்களை உலகத்தரத்துக்கு மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கொண்டு வந்தது. மாநில உள்ளாட்சித்துறையின் வழியாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு, மத்திய அரசு ஒவ்வொரு மாநில அரசுக்கும் கோடிகளில் நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த ஆட்சியில், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் மேற்பார்வையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்தன. முதற்கட்டமாக, தி.நகரிலுள்ள பாண்டி பஜார் ஏரியாவைத் தேர்வுசெய்து நவீனமயமாக்கினார்கள். முதலில் சில்லறை வியாபாரிகளுக்கென்று தனியாக மாநகராட்சி சார்பில் பன்னடுக்குக் கட்டடம் கட்டி, அதில் கடைகளை மாற்றம் செய்தனர். சாலையின் இரு பக்கத்திலும் 10 அடி அகலத்துக்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டன. இந்தத் திட்டத்துக்காக மட்டும் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அதேபோல, மழைநீர் வடிகால் திட்டத்துக்கும் 200 கோடி ரூபாய் ஒதுக்கிப் பணிகள் நடந்தன. ‘இவ்வளவு கோடி கொட்டி அழித்தும், தி.நகர் ஏரியாவிலேயே தண்ணீர் முழங்கால் வரை ஏன் நிற்கிறது?’ என்பதுதான் இந்தத் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதைப் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாயில், உருப்படியாக 200 கோடி ரூபாய்கூட செலவழித்திருக்க மாட்டார்கள். மீதிப்பணம் யாருக்கு கமிஷனாகப் போனது... தி.நகரில் மழைநீர் வடிகால் திட்டம் தோல்வியடைந்தது ஏன் என்பதை விசாரித்தாலே வேலுமணிக்குச் சிக்கலாகிவிடும்.

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை, வேலுமணிக்கு நெருக்கமான ‘நிலவு’ பிரமுகரின் நிறுவனமே மொத்தமாக எடுத்தது. இதற்கு ஏற்கெனவே மாநகராட்சிப் பணிகள் எடுத்துவந்த ஒப்பந்ததாரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வேலுமணி வீட்டில்வைத்து இதற்கு பஞ்சாயத்து நடந்து பிறகு, ‘சப் கான்ட்ராக்ட்’ முறையில் சென்னை ஒப்பந்ததாரர் களுக்குப் பணிகளைப் பிரித்துக்கொடுப்பது என முடிவானது. இந்த விவகாரத்தில் ‘உரியவர்களுக்கு’ பெருமளவில் கவனிப்புகள் நடந்துள்ளன. ‘சப் கான்ட்ராக்ட்’ முறையில் பணிகளை ஆளாளுக்குப் பிரித்துக்கொடுத்ததால், இந்தப் பணிகள் முறைப்படுத்தப்பட்ட வகையில் நடக்கவில்லை, மேலும், அவை சரிவர கண்காணிக்கப்படவும் இல்லை.

ரூ.5,000 கோடி - வெள்ளத்தில் வெளிவரும் ஊழல் பெருச்சாளிகள்!

உலக வங்கி அளித்த 1,000 கோடி ரூபாய் என்னவானது?

2015-ல் சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி இருந்தபோது, உலக வங்கி நிதி உதவியுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக 1,000 கோடி ரூபாய் நிதி வந்தது. அந்த டெண்டர் பணிகளைத் தனக்குவேண்டிய ஒரு கொங்கு நிறுவனத்தின் பக்கம் மடைமாற்றிவிட்டார் வேலுமணி. வடிகால் அமைக்கும் பணிகளை கொங்கு நிறுவனம் முறையாகச் செய்யவில்லை. சென்னை கூவம் ஆற்றிலிருந்து கிளை ஆறுகளாக மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் எனச் சில கால்வாய்கள் நகருக்குள் செல்கின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக, தி.நகர் வழியாகச் செல்லும் மாம்பலம் கால்வாயைத் தூர்வாருவதற்காகத் தனியாக 80 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. அதையும் சரியாகத் தூர்வாரவில்லை. மழைநீர் தேங்கி நிற்பதற்கு இதுவும் ஒரு காரணம்” என்றார் அந்த ஐ.ஏ.ஸ் அதிகாரி.

சென்னையில் பாதாளச் சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம் என இரு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்கும் முன்பே இந்த வடிகால் அமைப்புகளைத் தூய்மை செய்யும் பணிகளை மாநகராட்சி கையில் எடுக்கும். ஆனால், இந்த முறை மாநகராட்சியிலுள்ள மூத்த அதிகாரி ஒருவர் இந்தத் திட்டத்துக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை என்கிறார்கள். இதனால், கால்வாய்களை முழுமையாகத் தூய்மைப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. முதல்வரின் கொளத்துார் தொகுதி தண்ணீரில் மிதப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறது மாநகராட்சி வட்டாரம்.

300 கோடி ரூபாய் என்ன ஆனது?

நம்மிடம் பேசிய சென்னை மாநகராட்சியின் உயரதிகாரி ஒருவர், “2018-ம் ஆண்டு ‘மிஸ்ஸிங் லிங்க்ஸ் ஸ்டார்ம் வாட்டர் டிரெய்னேஜ்’ என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தனர். இணைக்கப்படாத வடிகால்களை இணைப்பதுதான் அதன் நோக்கம். ஆனால், அதையும் சரியாக மேற்கொள்ளவில்லை. ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகவே, நன்றாக இருந்த சில மழைநீர் வடிகால்களையும் உடைத்து, மீண்டும் கட்டினார்கள். இந்தத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில் பாதியளவுகூடச் செலவாகவில்லை. இதிலும் வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களே விளையாடியுள்ளன. மழைநீர் வடிகாலுக்குப் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஒரு யூனிட்டின் விலை 5,000 ரூபாய். ஆனால், 10,000 ரூபாய் என விலையை உயர்த்தி வாங்கியுள்ளனர். ஒவ்வொரு டெண்டரிலும் இதுபோல முறைகேடுகள் நடைபெற்று, 25 சதவிகிம் கவனிப்பாகச் சென்றுள்ளது. ‘எம் சாண்ட்’ ஒரு கியூபிக் ஃபீட் விலை 50 ரூபாய் என்றால், ஆற்று மணலின் விலை 120 ரூபாய். பூச்சு வேலை உள்ளிட்டவற்றுக்கு எம் சாண்ட் மணலைப் பயன்படுத்திவிட்டு, ஆற்று மணலுக்கான விலையை பில்லில் ஏற்றிச் சுருட்டியிருக்கிறார்கள்.

கோவளம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு, 300 கோடி ரூபாய் ஜெர்மன் வளர்ச்சி வங்கி மூலம் ஒதுக்கப்பட்டது. மணற் பாங்கான பகுதி என்பதால், அங்கு மழைநீர் வடிகால் அமைப்பதற்கான தேவையே இல்லை என்று சிலர் நீதிமன்றம் சென்றனர். அதை விசாரித்த நீதிமன்றமும் அந்தத் திட்டத்துக்குத் தடைவிதித்தது. ஆனால், ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாய் என்ன ஆனது என்பதில் தெளிவில்லை.

ரூ.5,000 கோடி - வெள்ளத்தில் வெளிவரும் ஊழல் பெருச்சாளிகள்!

2,000 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டல் புகார்... சிக்கலில் வேலுமணி!

நம்மிடம் பேசிய முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, “நகர்ப்புற வளர்ச்சிக்கு என ஆசிய வளர்ச்சி வங்கியில் 2,400 கோடி ரூபாய் தமிழக அரசு கடன் பெற்றது. இவையின்றி, ஸ்மார்ட் சிட்டிக்கான நிதி, பொதுவான மாநில அரசு நிதி, மாநகராட்சி நிதி என 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கும். அவற்றில் 40 சதவிகிதத் தொகை, ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் கமிஷனாக வேலுமணி பாக்கெட்டுக்குச் சென்றிருக்கிறது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்தாமல், தனக்கும் தனது உறவுகளுக்கும் நன்மை பயக்கும் திட்டத்தை மட்டுமே வேலுமணி செயல்படுத்தினார். வேலுமணிமீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், தவறிழைத்த ஒப்பந்ததாரர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்றார்.

“கடந்த பத்தாண்டுகளில் சென்னை மாநகராட்சியில் நடந்த முறைகேடுகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை கேட்கும் ஆவணங்களை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக வழங்குவதில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய அதிகாரிகளே இப்போதும் அதிகாரப் பதவியில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் மாஜி அமைச்சர் வேலுமணியைக் காப்பாற்றும் நோக்கில் ஃபைல்களை மாற்றும் வேலையில் இறங்கியிருக்கிறார்களாம். குறிப்பாக, உச்சப் பதவியிலுள்ள தலைமைப் பொறியாளர் ஒருவர்தான் இந்த ஃபைல்களை மாற்றும் வேலையைக் கச்சிதமாகச் செய்துவருகிறார்” என்கிறது ரிப்பன் பில்டிங் வட்டாரம்.

ஆக, சென்னை மற்றும் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு மொத்தமாக ரூ.1040 கோடி, ஆசிய வளர்ச்சி வங்கி அளித்த ரூ.2,400 கோடி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி அளித்த ரூ.300 கோடி, உலக வங்கியிடமிருந்து வந்த ரூ.1,000 கோடி, மாம்பலம் கால்வாய்த் திட்டத்துக்கு ரூ.80 கோடி, ‘மிஸ்ஸிங் லிங்க்ஸ் ஸ்டார்ம் வாட்டர் டிரெய்னேஜ் ப்ராஜக்ட்’-க்கு ரூ.300 கோடி எனப் பல்வேறு திட்டங்களுக்குமாகச் சேர்த்து சுமார் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டும்கூட, தமிழகம் தண்ணீரில் மிதக்கிறது. குறிப்பாக தலைநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இது குறித்து விளக்கம் கேட்க, உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியைத் தொடர்புகொண்டோம். அவர் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவரது உதவியாளர்களும் நம் அழைப்பை ஏற்கவில்லை. இது தொடர்பாக வேலுமணிக்கு மெசேஜ், மெயில் அனுப்பப்பட்டுள்ளன.

‘தலைநகர் வெள்ளத்தில் தத்தளிப்பதை, தன் ஆட்சிக்கான இழுக்காகப் பார்க்கிறார் முதல்வர். இதற்கு முழுமுதற் காரணம் வேலுமணிதான் என்று அவர் கருதுவதால், ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக நடந்த முறைகேடுகளைத் தீவிரமாகத் தோண்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்’ என்கிறார்கள். ‘பேச வேண்டிய இடத்தில் பேசிவிட்டேன்’ என்று இறுமாப்புடன் இருந்த வேலுமணிக்கு உச்சகட்ட சிக்கல் ஆரம்பித்துவிட்டது என்கிறது அதிகாரிகள் வட்டாரம்.

கோடிக்கணக்கான பணத்தைத் தின்று பதுங்கிய ஊழல் பெருச்சாளிகள் வெளிவரும் நேரம் இது. வேட்டையாடுவாரா முதல்வர்?

*****

ரூ.5,000 கோடி - வெள்ளத்தில் வெளிவரும் ஊழல் பெருச்சாளிகள்!

டெண்டர் எடுத்தவர்கள் பெரும்பாலும் வேலுமணியின் ஆட்கள்!

‘எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், பத்து வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்’ எனச் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் வழக்கறிஞர் சுரேஷ், “சென்னை, கோவை மாநகராட்சிகளுக்கான டெண்டர்களை எடுத்தவர்கள் பெரும்பாலும் வேலுமணியின் சகோதரர், உறவினர், நண்பர்களாக இருந்ததை அறப்போர் இயக்கம் கண்டறிந்தது. இந்த முறைகேடுகள் அதிகாரிகளின் உதவியின்றி நடந்திருக்காது என்பதால், அவர்கள் மீதும் விரிவாகப் புகார் அளித்திருக்கிறோம். சுமார் 188 டெண்டர்கள் வேலுமணியின் சகோதரர் நடத்தும் செந்தில் அண்ட் கோ நிறுவனத்துக்கும், வேலுமணிக்கு நெருக்கமான கே.சி.பி என்டர்பிரைசஸ், வரதன் இன்ஃபிராஸ்ட்ரக்சர், கன்ஸ்ட் ரானிக்ஸ் இந்தியா, எஸ்.பி.பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டன. இது குறித்து முழுமையாக விசாரிக்கும்போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும்” என்றார்.

கோவையிலும் கொள்ளை?

ஸ்மார்ட் சிட்டிக்காகத் தேர்வுசெய்யப்பட்ட முதல் 20 நகரங்களில் கோவையும் அடக்கம். இது தொடர்பாகச் சில தரவுகளைச் சேகரித்திருக்கும் வழக்கறிஞர் லோகநாதன், “ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக்குழுவில், நகராட்சி நிர்வாக ஆணையர் தலைவராகவும், மாநகராட்சி ஆணையர் நிர்வாக இயக்குநராகவும் இருக்க வேண்டும், துணை ஆணையருக்கு அங்கு வேலையே இல்லை. ஆனால், கோவை ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக்குழுவில் துணை ஆணையர் இருக்கிறார். நிர்வாகக்குழுவிலுள்ள 13 பதவிகளில் ஒன்பது மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. வால்பாறையில் இருக்கும் பிரபல தொழிலதிபரின் மருமகனையும், வேலுமணி குடும்பத்துக்கு வேண்டப்பட்ட ஒருவரையும் சுயாதீன இயக்குநராக்கியுள்ளனர். பிரச்னைகள் தொடர்ந்ததால், கடந்த ஆண்டு ராஜ்குமார் என்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியை சி.இ.ஓ-வாக நியமித்தனர். தற்போதுவரை மத்திய அரசு ரூ.391 கோடியும், மாநில அரசு ரூ.400 கோடியும் இந்தத் திட்டத்துக்காகக் கொடுத்துள்ளன. அவற்றில் 640 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்ததற்கான சுவடே இல்லை” என்றார்.

ரூ.5,000 கோடி - வெள்ளத்தில் வெளிவரும் ஊழல் பெருச்சாளிகள்!

“கமிஷனரைத் தூக்குகிறேன் பார்!”

சென்னையில் நவ. 9-ம் தேதிக்குப் பிறகு பெய்த தொடர் மழையால், ரிப்பன் பில்டிங்கிலும் தண்ணீர் நிரம்பியது. கடுப்பான ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், செயற்பொறியாளர் முருகன் இருவரையும் அழைத்து டோஸ் விட்டிருக்கிறார். முருகனை வேறு மண்டலத்துக்கு மாற்றம் செய்தும் ஆணையிட்டார். ஆனால், முருகன் தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் “கமிஷனர் மாற்றல் செய்தாலும் நான் மாற மாட்டேன். அவரையே கமிஷனர் பதவியிலிருந்து தூக்குகிறேன் பார்!” என்று கூறிவருகிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு