Published:Updated:

``பூட்ஸ் சத்தம் கேட்டாலே குலையெல்லாம் நடுங்கும்!" - ஸ்டாலினின் மிசா நினைவுகள்!

மிசா
மிசா

மக்கள் பிரச்னைகளுக்காகத்தானே நாங்கள் போராடினோம். போராட்டக்களத்தில் அடிபடுவதும் மிதிபடுவதும் சகஜமான ஒன்றுதான். ஆனால், சும்மா அறையில் படுத்திருந்த என்னை எதற்காக அடித்தார்கள்?

1967-2006 இடைப்பட்ட காலகட்டத்தில் வார்டன் பதவியில் ஆரம்பித்து டி.ஐ.ஜி வரை ஒன்பது பதவிகளை வகித்து ஓய்வுபெற்றவரும், தமிழ்நாடு சிறைத் துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றியவருமான ஜி.ராமச்சந்திரன் எழுதும் தொடரில் இருந்து...

1993-ம் ஆண்டில் சென்னை மத்தியச் சிறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தபோதுதான் மு.க.ஸ்டாலினை முதலில் சந்தித்தேன்.

தி.மு.க நடத்திய போராட்டத்தில் கைதான ஏராளமான பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

சிறை வழக்கப்படி, அரசியல் கைதிகளுக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் இரவில் சப்பாத்தியுடன் மட்டனும் தரப்படும். என்னிடம் பேசிய ஸ்டாலின், ''தொண்டர்கள் எல்லோரும் மட்டன் சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கேட்டார்.

நான் அதிர்ச்சியாகி, ''இரண்டாயிரம் பேருக்கு சப்பாத்தி, மட்டன் என்றால் பெரிய வேலை, அதற்குரிய உபகரணங்கள் பாத்திரங்கள் ஆகிய வசதிகள் ஏதும் இங்கு இல்லையே'' என்றேன். மட்டனுக்கு பதிலாக ஆளுக்கு இரண்டு முட்டை கொடுக்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னேன்.

அவர் விடாப்பிடியாக, ''இன்றிரவு சப்பாத்திக்கும் மட்டனுக்கும் ஏற்பாடு செய்வதாகத் தொண்டர்களிடம் சொல்லிவிட்டேன். இப்போது இல்லையென்றால் ஏமாந்துவிடுவார்கள். எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார். அந்தச் சூழலில் அவருடைய கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை.

முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > ஜெயில்... மதில்... திகில்! - 34 - ஸ்டாலினின் மிசா நினைவுகள்! https://bit.ly/2BClP54

மிசா
மிசா

இரண்டு மூன்று இடங்களில் தற்காலிகச் சமையற்கூடங்கள் அமைக்கப்பட்டன. வேக வேகமாக 6,000 சப்பாத்திகளும், மட்டனும் தயார் செய்யப்பட்டன. ஆளுக்கு 115 கிராம் மட்டன் என எடை போடப்பட்டு வழங்கப்பட்டது. எடை போடும் இடத்தில் ஸ்டாலினே நின்றுகொண்டு எல்லோருக்கும் விநியோகம் செய்தார்.

தொண்டர்கள் சாப்பிட ஆரம்பித்த போது அவரைச் சாப்பிடச் சொன்னேன். அதற்கு அவர் 'கடைசியில் சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டார். கடைசி தொண்டனுக்குச் சப்பாத்தியும் மட்டனும் தரப்பட்டபோது நள்ளிரவு 1:30 மணி. அதற்குப் பிறகுதான் சாப்பிட்டார் ஸ்டாலின். அவருடைய பொறுமை, தொண்டர்கள் மேல் அவர் காண்பித்த அன்பைப் பற்றியே சிறையில் பேச்சாக இருந்தது.

மற்றொரு நாள் சமையற்கூடத்தில் உணவு தயாராவதை மேற்பார்வை செய்துகொண்டிருந்தேன். ஸ்டாலினும் உடனிருந்து, உணவு தயாராகத் தயாராக ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். திடீரென என்னைப் பார்த்து, ''Convict Warder-களுக்கு மற்ற கைதிகளை அடிக்கும் உரிமை இருக்கிறதா?'' என்று ஒரு கேள்வியைக் கேட்டார். நான், ''Convict Warder-களுக்கு மட்டுமல்ல. சிறையிலுள்ள எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் கைதிகளை அடிக்க யாருக்கும் உரிமை இல்லை'' என்றேன்.

''பிறகு ஏன் சார் நான் மிசா கைதியாக இருக்கும்போது ஒரு காரணமும் இல்லாமல் என்னை அடித்தார்கள்? நான் என்ன குற்றம் செய்தேன் என்று என்னை அப்படிப் போட்டு அடித்து நொறுக்கினார்கள். 1967 முதல் தி.மு.க நடத்திய அத்தனை போராட்டங்களிலும் கலந்துகொண்டேன். மக்கள் பிரச்னைகளுக்காகத்தானே நாங்கள் போராடினோம். போராட்டக்களத்தில் அடிபடுவதும் மிதிபடுவதும் சகஜமான ஒன்றுதான். ஆனால், சும்மா அறையில் படுத்திருந்த என்னை எதற்காக அடித்தார்கள்?

அப்போது அடிபட்ட காயங்கள் உடலில் தழும்புகளாக நிலைத்துவிட்டாலும், அந்தக் காயங்களின் வலி மறைந்துவிட்டது. ஆனால், அந்த அடிபட்ட சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் மனம் வலிக்கிறது. காவலர்களின் பூட்ஸ் சத்தம் கேட்டாலே இன்று யாரை அடிக்கப் போகிறார்களோ என்று குலையெல்லாம் நடுங்கும். அரசியலைவிட்டே என்னைத் துரத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, என்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வேறென்ன காரணம் இருந்திருக்கக்கூடும்?'' என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்டபோது, அவருடைய கண்கள் கலங்கியிருந்தன.

அதை அவர் அங்கேவைத்துச் சொன்னதற்கும் ஒரு காரணம் இருந்தது. அந்த சமையற்கூடத்தின் பின்புறமுள்ள தொகுதியில்தான் மிசா கைதியாக அவர் அடைக்கப் பட்டிருந்தார். அவர் கேட்ட கேள்விகள், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய தாயார் தயாளு அம்மாள் கேட்ட கேள்விகளை நினைவுபடுத்தின.

- இந்த அத்தியாயத்தை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > ஜெயில்... மதில்... திகில்! - 34 - ஸ்டாலினின் மிசா நினைவுகள்! https://bit.ly/2BClP54

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு