Published:Updated:

"பின்லாந்து வேறு... தமிழகம் வேறு..." - செங்கோட்டையன் சிறப்பு 'லாஜிக்' பேட்டி

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

குலக்கல்வியைக் கொண்டுவருவதல்ல எங்கள் நோக்கம். பின்லாந்து நாட்டில், 9-ம் வகுப்பு படிக்கும்போதே, தகவல் தொழில்நுட்பம், கணினி உள்ளிட்ட தொழிற் பயிற்சிகளில் மாணவர்கள் தேர்ச்சிபெற்றுவிடுகிறார்கள்

சர்ச்சைகள் கிளப்பாத, அளந்து பேசக்கூடிய மூத்த அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். ஆனால், 'மாணவர்கள் சாதிக்கயிறு கட்டக்கூடாது என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிக்கை, என் கவனத்துக்கு வராமலேயே வெளிவந்துவிட்டது' என்று சமீபத்தில், ஓப்பன் டாக் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தவர், இப்போது, '5,8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்றிருக்கிறார். அவரை வீட்டில் சந்தித்தேன்... விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/35ldpts

"1 முதல் 8-ம் வகுப்பு வரையிலாக இடைநிற்றலில்லாக் கல்வியை, தமிழக அரசு உறுதிசெய்திருந்த நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டிருப்பது மாணவர்களுக்குச் செய்கிற அநீதி அல்லவா?''

"மத்திய அரசு, 'அனைவருக்கும் கல்வி' என்ற திட்டத்தை அரசு ஆணையாக வெளியிட்டு இந்தியா முழுமைக்கும் அமல்படுத்திவிட்டார்கள். நாடு முழுவதும் கல்வியை ஆய்வு செய்வதற்கான ஒரு வழிமுறையாக ஆரம்பக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியில் தனித்தனித் தேர்வுகளை நடத்தி, கல்வியின் தரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். அரசு ஆணை என்பதால், பல மாநிலங்களும் இதை நடைமுறைப்படுத்திவிட்டன. தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்திவிடாமல், 'இப்படியொரு பொதுத்தேர்வு முறை அமலாகவிருக்கிறது. அதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்' என்ற முன்னறிவிப்போடு முதல் 3 ஆண்டுகளுக்கு இத்திட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கும் முடிவை எடுத்துள்ளோம்! எனவே தேர்வு எழுதினாலும் அனைவரும் பாஸ் செய்யப்படுவார்கள்; அதாவது, தற்போதைய நிலையே நீடிக்கும்!''

"பின்லாந்து வேறு... தமிழகம் வேறு..." - செங்கோட்டையன் சிறப்பு 'லாஜிக்' பேட்டி

"தேர்வு முறை அற்ற பின்லாந்து நாட்டுக் கல்விமுறையை ஏற்கெனவே பாராட்டிப் பேசியிருக்கும் நீங்கள், தற்போது தேர்வு முறைதான் தரமான கல்விக்கு அடிப்படை என்கிறீர்களே..?''

"உண்மைதான்... ஆனால், பின்லாந்து நாட்டின் மொத்த மக்கள்தொகையே வெறும் 55 லட்சம்தான். அதில் மாணவர்களின் எண்ணிக்கை என்பது சில லட்சங்களே வரும். ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 20-லிருந்து 25 மாணவர்கள்தான் அங்கே பயில்கிறார்கள். ஆனால், ஒரு கோடியே முப்பத்தாறு லட்சம் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் இது சாத்தியமில்லையே..! அதுமட்டுமல்ல... பின்லாந்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், பொருளாதார வசதிகளும் நம்மைவிட மேம்பட்டு இருக்கின்றன. தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கும் மேலாக ஒரே கல்வியமைப்பு முறையும் அங்கே நடைமுறையில் இருந்துவருகிறது.

ஆனால், இங்கேயோ 'கல்வி கற்காத ஒருவர்கூட இருக்கக்கூடாது' என்ற அளவில், இப்போதுதான் வளர்ந்துவருகிறோம். அந்தவகையில், குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியை அளித்தால்தானே அடுத்தகட்டத்துக்கு அவர்களை முன்னேற்ற முடியும். வெறுமனே 1 முதல் 8 வரை பாஸ் செய்ய வைத்துவிட்டால், 9, 10-ம் வகுப்பில் வந்து அந்த மாணவன் என்ன செய்யமுடியும்? அடுத்த 3 ஆண்டுகளில் அடுத்தடுத்து பொதுத்தேர்வை அந்த மாணவன் சந்திக்கவிருக்கும்போது மன அழுத்தம் வராதா? 'தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள்தானே மருத்துவ மேற்படிப்புகளுக்கு வருகிறார்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் ஏன் வரவில்லை' என்றுகூடத்தான் பத்திரிகையாளர்களே கேள்வி கேட்கிறீர்கள். அப்படியென்றால், அரசுப் பள்ளி மாணவர்களையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்றால், என்னதான் செய்யவேண்டும் என்று நீங்கள்தான் சொல்லுங்களேன்..?''

"தேர்வு முறைகளில் தோல்வியடையும் மாணவர்கள் பள்ளியை விட்டே விலகிவிடுவதால், குலக்கல்வி முறையைத்தான் இந்தத் திட்டம் வளர்த்தெடுக்கும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டை எப்படி மறுப்பீர்கள்?''

"இந்தியாவிலேயே, மிகக் குறைவான இடைநிற்றல் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடுதான் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் 40 விழுக்காடு மட்டும்தான். மீதமுள்ள 60 விழுக்காடு மாணவர்கள் அவரவர் தகுதிக்கேற்ற வேலைகளுக்குத்தான் செல்கிறார்கள். குலக்கல்வியைக் கொண்டுவருவதல்ல எங்கள் நோக்கம். பின்லாந்து நாட்டில், 9-ம் வகுப்பு படிக்கும்போதே, தகவல் தொழில்நுட்பம், கணினி உள்ளிட்ட தொழிற் பயிற்சிகளில் மாணவர்கள் தேர்ச்சிபெற்றுவிடுகிறார்கள். 18 வயதுக்குள்ளாகவே யார் துணையுமின்றி, தானே பணி செய்து சுயமாக மேற்படிப்பு படிக்கும் அளவுக்கு முன்னேறிவிடுகிறார்கள். இது என்ன, குலக்கல்வி முறையா?''

> பள்ளிக் கல்வி செயல்பாடுகள் முதல் எடப்பாடி அரசு வரை... பற்பல கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்களை, ஆனந்த விகடன் சிறப்புப் பேட்டியில் முழுமையாக வாசிக்க > "எடப்பாடி பழனிசாமியின் தனிச்சிறப்புகள்..." https://www.vikatan.com/government-and-politics/politics/exclusive-interview-with-k-a-sengottaiyan

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv

அடுத்த கட்டுரைக்கு