Published:Updated:

ட்விட்டரில் `ஸ்பெல்லிங் மிஸ்டேக்'... கலாய்த்தவர்களின் மனதை உருக வைத்த எம்.பி

பீட்டர் கெய்ல் பதிவுகளில் எழுத்துப்பிழைகள் இருப்பதாக அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் தொடர்ந்து விமர்சித்து கேலி செய்து வந்தனர்.

Peter Kyle MP
Peter Kyle MP

தனது ட்விட்டர் பதிவுகளில் எழுத்துப்பிழைகள் இருந்ததால் மக்களின் கேலிக்குள்ளான எம்.பி ஒருவர், தனக்கு டிஸ்லெக்சியா பாதிப்பு இருப்பதாலேயே அத்தகைய பிழைகள் நேர்கின்றன என்று பதிவிட்டிருப்பது பலரின் மனதையும் தொட்டிருக்கிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கெய்ல் என்பவர் ட்விட்டரில் தன் பதிவுகளை இடுவது வழக்கம். அவரின் பதிவுகளில் எழுத்துப்பிழைகள் இருப்பதாக அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் தொடர்ந்து விமர்சித்து கேலி செய்து வந்தனர். அண்மையில் 'எல்லை' (Border) என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக 'சாப்பாட்டு விடுதியில் வழக்கமாகச் சாப்பிடுபவர்' (Boarder) என்ற அர்த்தம் தொனிக்கும் வார்த்தையை எழுதிவிட்டார். இந்த ட்வீட் மிகவும் வைரலாகவே பல தரப்பிலிருந்து கேலிகளும் கிண்டல்களும் பதிவிடப்பட்டன.

`பணம் முக்கியமில்லை; மக்களை பாதிக்கிறது!’ - அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த ட்விட்டர்

ஒரு கட்டத்தில் பீட்டர் கெய்ல் தனக்கு தீவிர டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ளதென்றும், அதனால்தான் இத்தகைய தவறுகள் நிகழ்கின்றன என்றும் தெரிவித்தார். டிஸ்லெக்சியா என்பது கற்றல் குறைபாடு. எழுத்துப் பிழைகள் மற்றும் வாசிப்புத் திறனின்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நிலை. மூளை எழுத்து மற்றும் பேச்சு மொழியைக் கையாளும் விதத்தில் ஏற்படும் முரண்பாடுகளே இந்தப் பிரச்னை.

ட்விட்டரில்  பதிவு
ட்விட்டரில் பதிவு

இதுபற்றிக் குறிப்பிட்ட பீட்டர் கெய்ல், "கண்களுக்குத் தெரியாத சவால்களைக் கொண்டவர்களின் தவறுகளை மன்னிக்க முடியாத இடமாக ட்விட்டர் இருக்கிறது. சில நேரங்களில் சொற்களை வெறும் வடிவங்களாக மட்டுமே உணர்கிறேன். அத்தகைய நேரங்களில் நான் என் மூளையைப் பயன்படுத்த முயன்றாலும், கண்களுக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிக் காலத்திலும் கல்லூரிக் காலத்திலும்கூட இந்தப் பிரச்னைகளால் தான் எதிர்கொண்ட தர்மசங்கடமான நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்திருக்கிறார். குறிப்பாகப் பள்ளியில் படிக்கும்போது ஷேக்ஸ்பியர் பற்றிய பாடத்தை வகுப்பறையில் சத்தமாக வாசிக்கச் சொன்னபோது, வாசிக்க முடியாமல் கஷ்டப்பட்ட சம்பவத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

அதனால் தற்போது மேடைகளில் பேசும்போது டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் க்ரீம் பேப்பர் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பேசுவதாகவும் தெரிவித்திருக்கிறார். 49 வயதான பீட்டர் கெய்ல் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் மற்றும் பிஹெச்டி பெற்றவர்.

Twitter
Twitter

தனது பிரச்னையை வெளிப்படையாகப் பேசியதற்காக சக எம்.பிக்களான ஹாரியட் ஹர்மன், யெவெட் கூப்பர் ஆகியோர் பீட்டர் கெய்லைப் பாராட்டியுள்ளனர். பல்வேறு தரப்பு மக்களும் அவரைப் பாராட்டி கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.