Published:Updated:

சிறையில் சந்தித்து மனத்தை கரைத்த கலைஞர்... வைகோவின் `பொடா' நாள்கள்!

வைகோ
வைகோ

சிறையிலிருந்த 18 மாதங்களும் வைகோ அந்த மின்விசிறியைப் பயன்படுத்த மறுத்துவிட்டார். வைராக்கியமும் கோபமும்தான் வைகோ

வேலூர் மத்தியச் சிறை, சரித்திரப் புகழ் வாய்ந்தது. 153 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து கிடக்கும் இந்தச் சிறை 1867-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. அங்கே 2,130 கைதிகளைப் பூட்டிவைக்கலாம். இங்குதான் தமிழக அரசியல் தலைவர்கள் காமராஜர், அண்ணாதுரை, ராஜாஜி, வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன் மற்றும் திரிபுரா முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.

1973-ம் ஆண்டில் முதல் தலைமைக் காவலராக வேலூர் சிறையில் நுழைந்த நான், மீண்டும் 30 வருடங்கள் கழித்து 2003-ம் ஆண்டில் அதே சிறையில் தலைமை அதிகாரியாக அதாவது, கண்காணிப் பாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டேன். அங்கேதான் வைகோவைச் சந்தித்தேன்.

2002, ஜூன் 29 அன்று மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2003-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியன்று சென்னை விமான நிலையத்தில் வைத்து POTA-வில் (Prevention of Terrorist Act) கைதுசெய்யப்பட்ட வைகோ வேலூர் மத்தியச் சிறைக்குக் கொண்டுவரப்பட்டார்.

சிறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் சிறை முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். 'ஏ' கிளாஸ் தொகுதியைப் பார்வையிடும்போது, வைகோவையும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற எட்டுப் பேரையும் சந்தித்து நலம் விசாரித்தேன். வைகோவின் அறைக்கு வெளியே மின்விசிறி ஒன்று கிடந்தது. அருகிலிருந்த ஜெயிலரிடம், 'இதை ஏன் அவருடைய அறையில் பொருத்தவில்லை' என்று கேட்டேன். வைகோவே எனக்கு பதில் சொன்னார்...

''நான் 'ஏ' கிளாஸ் சிறைவாசி. எனது அறையை நீங்கள் ஃபர்னிஷ் (Furnish) செய்துதர வேண்டும். நான் 'மின்விசிறியை உடனே பொருத்துங்கள்' என்று கேட்டேன். ஆனால், நீண்டநாள்களாக மின்விசிறி கொடுக்கப்படவே இல்லை. சில நாள்கள் கழித்து இந்த மின்விசிறியை இங்கு கொண்டு வந்தார்கள். அதற்குள் மின்விசிறி இல்லாமலேயே இருக்கப் பழகிக்கொண்டேன். கேட்டவுடன் கிடைக்காததால், இனிமேல் நான் இந்தச் சிறையைவிட்டுப் போகும்வரை மின்விசிறி உபயோகப்படுத்தப்போவதில்லை அதனாலேயே அந்த மின்விசிறி அங்கு கிடக்கிறது'' என்றார்.

வைகோ
வைகோ

அவருடைய பிடிவாதத்தையும் தன்மானத்தையும் பறைசாற்றிக்கொண்டிருந்தது அந்த மின்விசிறி. சிறையிலிருந்த 18 மாதங்களும் வைகோ அந்த மின்விசிறியைப் பயன்படுத்த மறுத்துவிட்டார். வைராக்கியமும் கோபமும்தான் வைகோ.

வைகோவைப் பார்ப்பதற்காக வேலூர் சிறைக்கு இரு முறை வந்தார் கலைஞர். `தொல்காப்பிய நூல் வெளியீட்டு விழாவுக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை கலைஞருக்கு அனுப்ப வேண்டும்' என வைகோ என்னிடம் கேட்டுக்கொண்டார். அதைப் படித்துப் பார்த்தேன். அதன் இலக்கியச் சுவைக்காக அதில் ஒரு நகல் எடுத்து வைத்திருந்தேன்.

ஜெயில்... மதில்... திகில்! - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து! https://bit.ly/3dQmRrR

''நீங்கள் படைத்துள்ள இப்பூங்காவில் மலரும் பூக்கள் என்றுமே வாடாது; வண்ணமும் மாறாது. இப்பூக்களின் தேனலை மொண்டிடும் வண்டுகள் களிக்குமே தவிர மயங்கிச் சாய்ந்திடா. தமிழ் உணர்வு மங்கிவரும் வேளையில், தமிழ்ப் பகைவர் ஓங்காரக் கூச்சலிடும் இன்றைய காலகட்டத்தில், இத்தொல்காப்பியப் பூங்கா காலத்தின் இன்றியமையாத தேவையாக, தன்மானத் தமிழரின் படைக்கலனாக வாய்த்துள்ளது. காலத்தை வெல்லும் உயிர் காவியங்களைப் படைத்து, தமிழ் அன்னைக்கு நீங்கள் சூட்டிய மணியாரத்தில் இனியும் ஒரு ஒப்பிலா மணியே வைத்துள்ளீர்கள்!'' என்று அதில் எழுதியிருந்தார்.

கலைஞர் அடுத்த முறை வைகோவைச் சிறையில் சந்தித்து, 'தொல்காப்பியப் பூங்கா' புத்தகத்தை அவருக்கு அளித்தார். கண்ணீரோடு பேசிய கலைஞர், ''நீ எழுதிய வாழ்த்து மடலைப் படித்தேன்; சுவைத்தேன். இந்த வெஞ்சிறையில் இருப்பது கண்டு மிகவும் துயரம் அடைந்தேன். ஏன் சிறைக்குள் இருந்து கஷ்டப்படுகிறாய். பிணையில் வரலாம் இல்லையா?'' என்றார்.

வைகோவிடமிருந்து உறுதியான எந்த பதிலும் வரவில்லை. இருவருடைய உள்ளத்திலும் ஓடும் பாச உணர்ச்சியை அவர்கள் இருவரின் கண்களிலுமே காண முடிந்தது. வேறு எந்த அரசியலும் அவர்கள் பேசவில்லை. அந்த நேர்காணல் என்னுடைய முன்னிலையில்தான் நடந்தது. எனக்கும் `தொல்காப்பியப் பூங்கா' புத்தகம் ஒன்றைக் கையெழுத்திட்டுக் கொடுத்தார் கலைஞர்.

அங்கிருந்து கலைஞர் புறப்பட்டுச் சென்ற பிறகு, நீண்ட நேரமாகியும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார் வைகோ. அதே உணர்வுடன் கலைஞருடனான தன்னுடைய நினைவுகளை என்னிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். அவர்களுக்கிடையிலான அந்த நெகிழ்ச்சியான சந்திப்பைப் பார்த்தபோது எனக்கும் இதயம் கனத்துப்போனது.

மீண்டும் ஒரு முறை பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் வைகோவின் வரவுக்காகக் காத்திருந்தார் கலைஞர். அப்போதும், 'நீ கட்டாயம் பிணையில் வெளியில் வர வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். பூந்தமல்லி நீதிமன்றத்திலிருந்து திரும்பிய வைகோ, கலைஞர் தனக்கு அன்புக் கட்டளையிட்டதைப் பற்றியும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்த முறை சந்திப்பில் வைகோவின் மனதை ஓரளவு நன்றாகவே கரைத்துவிட்டார் கலைஞர் என்பது புரிந்தது. ஏனெனில், அந்தச் சந்திப்புக்குப் பிறகு பிணையில் செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டார் வைகோ...

வைகோவின் அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் வாழ்வில் பொடா கைதியாக அவர் சிறையிலிருந்த ஒன்றரை ஆண்டுகள் முக்கியமானவை. அந்த நாள்களின் வெளிவராத சிறை வாழ்க்கைப் பக்கங்களை சிறைத்துறையில் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. ஜி.ராமச்சந்திரன் பகிர்ந்தவை இங்கே க்ளிக் செய்க.... > ஜெயில்... மதில்... திகில்! - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து! https://bit.ly/3dQmRrR

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு