Published:Updated:

"தமிழ்நாடா... அங்கதான் மக்கள் தெளிவுடன் இருக்காங்க!" - அயோத்தி விசிட் ரிப்போர்ட்

அயோத்தி
அயோத்தி

அவங்கவங் களுக்கு அவங்கவங்க நம்பிக்கை முக்கியம். பத்து வருஷமா இங்க வர்ற அனுபவத்துல சொல்றேன். எனக்குத் தெரிஞ்சு இங்கே இந்து - முஸ்லிம்னு எந்தப் பகைமையும் இல்லை

ராமஜென்ம பூமியை அடைய இன்னும் ஒரு கிலோமீட்டர் மட்டுமே பாக்கி!

மீண்டும் போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். ''எந்த பிரஸ், பர்மிஷன் வாங்கியிருக்கீங்களா?" என்று பேசிக்கொண்டிருக்கும்போதே, நம் புகைப்படக்கலைஞரிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டது. அதன் கேலரியைத் திறந்தார்கள். முந்தைய செக்போஸ்ட்டில் போலீஸ் சோதனை செய்துகொண்டிருந்ததை அதில் பதிவு செய்திருந்தோம். "பாருங்க... போலீஸ் செக் பண்றதைலாம் வீடியோ எடுத்திருக்காங்க" என்று உயரதிகாரியிடம் முறையிட்டார் காவலர். நான் அவர்களிடம், "உங்களுக்கு இது எப்படி டியூட்டியோ, அப்படி எங்களுக்கும் இது டியூட்டிதான்" என்றேன். பொத்தாம் பொதுவாக, "உள்ளே மீடியாவுக்கு அனுமதி இல்லை" என்றார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க.... http://bit.ly/2COt73m

என் செல்போன், பர்ஸிலிருந்த பத்திரிகையாளர் அடையாள அட்டை, இதர அடையாள அட்டைகள், ரெக்கார்டர், ஹெட்செட், பாக்கெட்டிலிருந்த பென்டிரைவ் எல்லாவற்றையும் புகைப்படக் கலைஞரிடம் கொடுத்தேன். பர்ஸில் சிறிது பணம் மட்டுமே இருந்தது. ''ஒரு பக்தனாக உள்ளே அனுமதிப்பீர்கள்தானே?'' என்றேன்.

"தமிழ்நாடா... அங்கதான் மக்கள் தெளிவுடன் இருக்காங்க!" - அயோத்தி விசிட் ரிப்போர்ட்

''நீங்க மீடியா என்று சொல்லிவிட்டீர்கள். அப்புறம் எப்படி விடுவது?'' என்றார்.

"ஏன், மீடியாவில் இருக்கிறவங்களுக்கு பக்தி இருக்கக்கூடாதா?'' என்று கேட்டேன். இப்போது உயரதிகாரி பேசினார். ''நீங்கள் உள்ளே செல்லலாம். பக்தர்களுக்கு அனுமதி மறுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை'' என்றார் அந்த அதிகாரி.

700 மீட்டர் தூரத்தில் இருக்கும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான ராமஜென்ம பூமியைப் பார்க்க, உள்ளே காலடி எடுத்துவைத்தேன்!

'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் விண்ணைப் பிளந்தது. பக்தர்கள் இடைவிடாமல் ராம கோஷத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர். "இங்கிருந்து அரை கிலோமீட்டர்தான். பாதுகாப்பு காரணங்களுக்காக பாதையை வளைச்சு வளைச்சு திருப்பிவிட்டிருப் பாங்க. ஒன்றரை கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும்" என்றார் என்னுடன் நடந்துகொண்டிருந்த கமலேஷ் திரிபாதி.

இவருக்கு வயது அறுபது ப்ளஸ் இருக்கலாம். கொல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறார். "இங்கே ராமர் கோயில் கட்டலாம்னு தீர்ப்பு வந்துடுச்சு. ஆனா, எதுக்கு இப்படி அடிச்சிக்கிறாங்கன்னு தெரியலை. அவங்கவங் களுக்கு அவங்கவங்க நம்பிக்கை முக்கியம். பத்து வருஷமா இங்க வர்ற அனுபவத்துல சொல்றேன். எனக்குத் தெரிஞ்சு இங்கே இந்து - முஸ்லிம்னு எந்தப் பகைமையும் இல்லை. பாய் கடையில டீ வாங்கிட்டு, பக்கத்துல இருக்கிற இந்து கடையில பலகாரம் வாங்கிக்குவோம். அவங்களுக்குள்ளும் நிறைய கொடுக்கல்-வாங்கல் இருந்தது. மொத்தத்துல எல்லோரும் சகோதரர்களாத்தான் பழகுறாங்க. இந்த அரசாங்கம், கோர்ட், மதம், சண்டை, நிலம், இதுக்கான தீர்ப்பு, நீதி இதெல்லாம் ஒண்ணுமே இல்லை தம்பி. ஆனா, 'இதெல்லாம் ஒண்ணுமே இல்லை'ங்கிறதைப் புரிஞ்சிக்கிற புள்ளி எல்லோருக்கும் ஒண்ணா அமையாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சமயத்துல அது புரியும்" என்றார்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் ஒரு சோதனை மையம். இங்கே தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்தனர். ஷூ அணிந்து வந்தவர்களை ஷூ, சாக்ஸ் எல்லாவற்றையும் கழற்றி, கையில் எடுத்துச் சோதித்தார்கள். மீண்டும் கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார்கள். கோயிலுக்குள் செல்ல ஷூ, செருப்பு எதுவும் தடையில்லைபோலிருக்கிறது. அதன் பிறகும் இதேபோல் இரண்டு இடங்களில் சோதனை செய்தார்கள். திடீரென பாதையில் ஒரு திருப்பம். மற்றோர் உள்பகுதியை நெருங்கிவிட்டதுபோல் தெரிந்தது.

இங்கு உத்தரப்பிரதேச மாநில காவல் துறையினரைக் காண முடியவில்லை. கோயில் வளாகமா... ராணுவ முகாமா என்ற சந்தேகம் எழுந்தது. எங்கும் மத்திய ரிசர்வ் படையினர் நிறைந்திருந்தார்கள். பச்சை நிறச் சீருடையில் தலையில் கறுப்புத் துணியைக் கட்டியிருந்தார்கள். பக்தர்கள் எண்ணிக்கையைவிட அவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது. இவர்கள் தவிர, ஐம்பது அடி இடைவெளியில் மணல் மூட்டைகளுக்கு நடுவே கமாண்டோக்கள் நவீன ரக துப்பாக்கியைப் பிடித்து குறிபார்த்துக் கொண்டிருந்தார்கள். எதையாவது வித்தியாசமாகச் செய்தால், பட்டெனச் சுட்டுவிடுவார்கள்போலிருக்கிறது. துப்பாக்கி முனையில் ராமர் தரிசனம். எத்தனையோ கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். இதுவரை கிடைத்திராத அனுபவம் இது. சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கோபுரங்களில் இரண்டிரண்டு போலீஸார் உன்னிப்பாகக் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். இவர்கள் போதாதென, எங்கு திரும்பினாலும் கண்காணிப்பு கேமராக்கள் தென்பட்டன. வெளியே இருந்த காவலர்களாவது சகஜமாகப் பேசினார்கள். இங்கு இருப்பவர்களோ இறுக்கமான பாவனை காட்டினார்கள்.

இதோ கண்ணெதிரே சற்றே தொலைவில் அந்த இடம் இருக்கிறது. உலகமே உற்று நோக்கும் அந்த 2.77 ஏக்கருக்கு நடுவே ஷாமியானா போடப்பட்டிருக்கிறது. வலதுபுறத்தில் ஐம்பது அடி தூரத்தில் ஸ்ரீராமனின் ஜென்மபூமி என்று நம்பப்படும் இடம். அங்கு அப்படி என்ன இருக்கிறது எனப் பார்க்கும் ஆவலில் கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. பல உயிர்ப்பலிகளுக்கும் மனக்கசப்புகளுக்கும் பெரும் அரசியல் மாற்றங்களுக்கும் காரணமாக இருந்தது இந்த இடம்தானா என்பதை நம்ப முடியவில்லை.

"தமிழ்நாடா... அங்கதான் மக்கள் தெளிவுடன் இருக்காங்க!" - அயோத்தி விசிட் ரிப்போர்ட்

காலணிகளுடன் அனைவரும் கைகளைக் குவித்து வலதுபுறத்தையே பார்த்தபடி நகர்ந்துகொண்டிருந்தனர். ஏற்கெனவே நினைத்ததுபோல் உள்ளே காலணிகளுக்குத் தடையில்லை. கண்ணாடி உண்டியல் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் கரன்சியால் அதை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். அதற்கடுத்து சற்று தொலைவில் பூக்களாலும் பட்டுத் துணிகளாலும் சாத்தப்பட்ட சிறிய ராமர் சிலை ஒன்று இருக்கிறது. அதற்கு மேல் கிருஷ்ணனின் புகைப்படம். மேலும், ஐந்தாறு சக்திச் சக்கரங்கள் ஃப்ரேம் போடப்பட்டு மாட்டப்பட்டிருந்தன. காவலர் "ஜல்தி... ஜல்தி" என்று விரட்டிக் கொண்டிருந்தார். ராமர் சிலை இருக்கும் இடத்தில் சாதுக்களோ அல்லது பூசாரிகளோ இல்லை. காவி உடையில் ஒருவரும், வெள்ளை உடையில் ஒருவரும் பக்தர்களுக்கு வெள்ளை நிறத்தில் குட்டிக் குட்டி இனிப்பு உருண்டைகளை பிரசாதமாகத் தருகிறார்கள்...

அயோத்தியிலிருந்து ஃபைஸாபாத் செல்லும் வழியில் இருக்கிறது இக்பால் அன்சாரியின் வீடு. சிறிய வீடு அது. வீட்டின் எதிர்ப்பக்கம் பந்தல் அமைக்கப்பட்டு, இரண்டு காவலர்கள் அமர்ந்திருந்தனர். நமது புகைப்படக் கலைஞர் அசோக்குமார், வீட்டின் முகப்பைப் புகைப்படம் எடுக்க கேமராவை உயர்த்தினார். காவலரின் குரல் எங்களைத் தடுத்தது.

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் புன்னகைத்து வரவேற்றார் இக்பால். "தமிழ்நாடா... அந்தப் பக்கம்தான் மக்கள் நல்ல தெளிவுடன் இருக்காங்க" என்றார். இக்பால் அன்சாரியின் தந்தை முகம்மது ஹாசிம் அன்சாரி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முஸ்லிம்கள் தரப்பின் முக்கிய மனுதாரர்களில் ஒருவர். அவர் இப்போது உயிருடன் இல்லை. மசூதி இடிக்கப்பட்டபோது, தங்களது குடும்பமே பல மாதங்கள் சோகமாக முடங்கி விட்டது எனக் குறிப்பிட்டார் இக்பால்.

- செய்தியாளர் பரிசல் கிருஷ்ணாவின் அயோத்தி நேரடி விசிட் ரிப்போர்ட்டிங்கை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > நிலம் நீதி அயோத்தி... துப்பாக்கி முனையில் ராம தரிசனம்!

https://www.vikatan.com/social-affairs/judiciary/discuss-about-ayodhya-verdict

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு