Published:Updated:

பள்ளிகளைக் கொரோனா வார்டுகளாக மாற்றுவது விபரீதமானதா?

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

விரைவில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்கும் என அரசு அறிவித்திருக்கிறது. ப்ளஸ் டூ விடைத்தாள்களைத் திருத்தும் பணியும் அடுத்தடுத்து தொடங்கப்படும்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில் சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மீண்டும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி நோயாளிகளை ஆம்புலன்ஸிலேயே வைத்திருக்கும் அளவுக்கு நிலை மோசமானது.

இந்தச் சூழலில், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சிலருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ''மருத்துவ முகாம்கள் அமைக்கத்தான் அதிகாரிகள் கேட்கின்றனர். ஆகஸ்டிலோ செப்டம்பரிலோ நிலைமை சீராகி பள்ளிகள் தொடங்கப்படலாம் என்ற சூழலில் பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் அமைப்பது மாணவர்களை பாதிக்கும்'' என்ற குரல், பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.

பள்ளிகளைக் கொரோனா வார்டுகளாக மாற்றுவது விபரீதமானதா?

இதுதொடர்பாக தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர் நம்மிடம் பேசினார். ''கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்க வகையில் இருக்கின்றன. மக்களும் அரசின் நோக்கத்தை உணர்ந்து பொறுப்பாக நடந்துகொள்கின்றனர். சமீப நாள்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இது எதிர்பாராத நெருக்கடி என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அதேநேரம், பள்ளிகளை கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றும் நடவடிக்கை விபரீதமானது. அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, அரசு இந்த முயற்சியை முற்றிலுமாக கைவிடவேண்டும்.

பள்ளிகளில் 3 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவர்கள் படிக்கிறார்கள். நோய்த்தொற்று சூழ்ந்த ஓரிடத்தில் இவர்களை வைத்திருப்பது எவ்வளவு ஆபத்து? விரைவில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்கும் என அரசு அறிவித்திருக்கிறது. ப்ளஸ் டூ விடைத்தாள்களைத் திருத்தும் பணியும் அடுத்தடுத்து தொடங்கப்படும்.

கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டால், மீண்டும் தேர்வு அறையாக மாற்றுவதோ... அங்கு விடைத்தாள்களைத் திருத்தும் பணியைச் செய்வதோ எளிதல்ல. மாணவர்கள் அமரும் இருக்கைகள், அடுத்த வருடத்துக்கான பாடநூல்கள் இவற்றையெல்லாம் எந்த அறைகளில் பத்திரப்படுத்துவது? இதுபோன்ற பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

ஒருவேளை அரசு கொரோனா வார்டுகளாக எங்கள் பள்ளிகளை மாற்றினால், வரும் கல்வியாண்டில் பெற்றோர்கள் மாணவர்களை சேர்ப்பதற்கு அச்சப்படுவர். அரசுப் பள்ளிகளுக்கும் அதுதான் நிலை. இத்தனை நாள்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்து மனரீதியாக மாணவர்கள் தளர்வாக இருப்பார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களையும் பெற்றோர்களையும் மேலும் துயரத்துக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாக்கும். எனவே, அரசு இந்த முயற்சியை கைவிடவேண்டும்'' என்றார்.

- இதற்கு அரசு தரப்பில் சொல்லப்படும் விளக்கம் என்ன? சென்னை மாநகர மக்களைக் காப்பாற்ற களமிறக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் செயல்பாடுகள் எப்படி? - முழுமையான கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > ''பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்களைக் கேட்பது ஏன்?'' - விளக்கம் தரும் சுகாதாரத்துறை Click here https://bit.ly/2SFXzol

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு