குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது, பாரதிய ஜனதா கட்சியினர் சி.ஏ.ஏ சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதா ஐடி விங் தலைவர் அமித் மால்வியா, மேற்கு வங்கத்தில் ரயில் கொளுத்தப்பட்ட புகைப்படத்துடன் செய்திருந்த ட்வீட்டின் ஹேஷ்டேகில் #IndiaSupportsCAA என்று போடுவதற்குப் பதிலாக #IndiaSupportsCCA என்று தவறுதலாக பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் வைரலானது.
இதை அப்படியே காப்பி செய்து குஜராத் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஜெகதீஷ் விஸ்வகர்மாவும் ட்வீட் செய்திருந்தார். முதலில் CAB என்று இருந்தது, சட்டம் இயற்றப்பட்ட பிறகு CAA என்று மாறியதுபோல், இப்போது CCA என்று மாறியிருக்கிறதோ என்று நினைத்த பி.ஜே.பி ஆதரவாளர்கள் அதே வார்த்தையை கொண்டே ட்வீட்டை அதிகமாக போடத் தொடங்கினர்.
இந்த ட்வீட்டை கவனித்த, குடியுரிமைச் சட்ட எதிர்ப்பாளர்கள் அதையே ஹேஷ்டேக்காகப் பயன்படுத்தி அந்த வார்த்தையை டிரெண்டிங்கில் கொண்டுவந்தனர். அதோடு, பாரதிய ஜனதா கட்சியின் ஐ.டி விங்கை கேலியும் செய்து வந்தனர்.
குடியுரிமை மசோதா ரத்து செய்யப்படுவதையே அமித் மால்வியா அப்படிக் குறிப்பிட்டுள்ளார்.சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்கள்
மேலும், `குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்வதையே CCA அதாவது ``கேன்சலேஷன் ஆப் சிட்டிசன்ஷிப் அமென்ட்மெண்ட்' என்று அமித் மால்வியா சொல்ல வருகிறார் என்று அவரைக் கேலி செய்துள்ளனர்.
இந்த ட்வீட் நேற்று பதியப்பட்டுள்ளது. ஆனால், கேலிகளைக் கண்டு அசராத பாரதிய ஜனதா ஐ.டி விங் தலைவர் அமீத் மால்வியா, 24 மணி நேரமாகியும் ட்வீட்டை அழிக்கவில்லை. இப்போதுவரை ஹேஸ்டேக்கைப் பின்பற்றி 38,000 பேர் ட்வீட் செய்துள்ளனர். இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
- ஜான் ஜே. ஆகாஷ்