Published:Updated:

ஹிஜாப் சர்ச்சை ஏன் எழுந்தது? நடந்தது என்ன? இனி என்ன ஆகும்...

ஹிஜாப் சர்ச்சை

ஹிஜாப் சர்ச்சை ஏன் எழுந்தது? இதில் இதுவரை நடந்தது என்ன? இனி என்ன ஆகும்? இந்த 10 விஷயங்களைப் பார்ப்போம்!

ஹிஜாப் சர்ச்சை ஏன் எழுந்தது? நடந்தது என்ன? இனி என்ன ஆகும்...

ஹிஜாப் சர்ச்சை ஏன் எழுந்தது? இதில் இதுவரை நடந்தது என்ன? இனி என்ன ஆகும்? இந்த 10 விஷயங்களைப் பார்ப்போம்!

Published:Updated:
ஹிஜாப் சர்ச்சை

ஹிஜாப் சர்ச்சை... 10 விஷயங்கள்!

பள்ளியில் படிக்கும்போது சக மாணவ, மாணவிகளை சாதி மற்றும் மத அடையாளங்களுடன் புரிந்துகொள்ளும் வழக்கம் எவரிடமும் இருந்ததில்லை. 'இவன் நன்றாகப் படிப்பான்', 'இவள் எடுத்துவரும் சாப்பாடு நன்றாக இருக்கும்', 'இவனுக்குக் குடும்பத்தில் கஷ்டம்', 'புரியாத பாடங்களை இவளிடம் சந்தேகம் கேட்கலாம்', 'இவன் நன்றாக விளையாடுவான்' என்பது போன்ற அடையாளங்கள்தான் தெரியும்.
ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் நடத்திய போராட்டமும், 'அவர்கள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம்' என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தியதும், கர்நாடக மாநிலக் கல்லூரிகளை கலவர நிலவரத்தில் தள்ளியிருக்கின்றன. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக கல்வி தடைப்பட்டிருந்தது. எல்லாம் சரியாகி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தேர்வு நடைபெற இருக்கும் நேரத்தில் இந்த சர்ச்சை எழுந்திருக்கிறது.
இந்த சர்ச்சை ஏன் எழுந்தது? இதில் இதுவரை நடந்தது என்ன? இனி என்ன ஆகும்? இந்த 10 விஷயங்களைப் பார்ப்போம்.

ஹிஜாப் சர்ச்சை
ஹிஜாப் சர்ச்சை

1. உடுப்பி பி.யூ பெண்கள் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி இந்த சர்ச்சை ஆரம்பித்தது. நம் ஊரில் இருக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மேல்நிலை வகுப்புகளை கர்நாடகாவில் பி.யூ கல்லூரியில் படிக்கிறார்கள் மாணவர்கள். பெயர்தான் கல்லூரி என்றாலும், பள்ளி வயது மாணவர்களே இங்கு படிக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு முதல்வர் ருத்ர கவுடா அனுமதி மறுத்ததாகச் சொல்லி எட்டு முஸ்லிம் மாணவிகள் கல்லூரியின் வாசலில் போராட்டம் நடத்தினர்.

2. 'கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடை இல்லை. ஆனால், வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஹிஜாப்பை அகற்றிவிட வேண்டும். வகுப்பறையில் எல்லோரும் சமமே. கல்லூரி சேர்க்கையின்போதே இதைத் தெளிவாகக் குறிப்பிட்டு உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறோம்' என்று முதல்வர் ருத்ர கவுடா சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3. ஆனால், போராட்டம் நடத்திய மாணவிகள் இதை மறுத்தனர். சேர்க்கையின்போது கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தில் 'யூனிபார்ம் அணிய வேண்டும், அடையாள அட்டை அணிய வேண்டும்' என்று இருந்ததே தவிர, ஹிஜாப் பற்றி எதுவும் இல்லை என்பது அவர்களின் வாதம். எங்களின் சீனியர்கள் பலரும் ஹிஜாப் அணிந்து வகுப்பறையில் பாடங்களை கவனித்தார்கள். இப்போதுதான் புதிதாகத் தடை விதிக்கிறார்கள் என்றனர் அவர்கள். மாணவிகள் போராட்டத்தைத் தொடர்ந்து ஜனவரி முதல் தேதி கல்லூரி வளர்ச்சிக் குழு கூடி விவாதித்தது. வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதிக்க முடியாது என்று அது முடிவெடுத்தது. மாணவிகள் போராட்டம் தொடர்ந்தது.

4. பா.ஜ.க-வைச் சேர்ந்த உடுப்பி எம்.எல்.ஏ ரகுபதி பட், ''ஹிஜாப் விவகாரத்தை எஸ்.டி.பி.ஐ கட்சியே தூண்டி விடுகிறது'' என்று குற்றம்சாட்டினார். இஸ்லாமியர்களுக்கான கட்சியான எஸ்.டி.பி.ஐ 'கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா' என்ற மாணவர் அமைப்பை வைத்திருக்கிறது. 'இவர்கள்தான் இஸ்லாமிய மாணவிகளைத் தூண்டிவிடுகிறார்கள்' என்பது எம்.எல்.ஏ-வின் குற்றச்சாட்டு. கர்நாடகக் கல்லூரிகளில் கல்லூரி வளர்ச்சிக் குழு என்ற அமைப்பு இருக்கிறது. கல்லூரி தொடர்பான முடிவுகளை எடுக்கும் இந்தக் குழுக்களில் எம்.எல்.ஏ-க்கள் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள். எனவே, கல்லூரிகளின் சார்பில் எம்.எல்.ஏ-க்களே பேசுகிறார்கள்.

ஹிஜாப் சர்ச்சை
ஹிஜாப் சர்ச்சை

5. போராட்டம் நடத்திய உடுப்பி கல்லூரி மாணவிகள், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து இஸ்லாமியப் பிரதிநிதிகளுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சு நடத்தியது. 'மாணவிகள் வகுப்பறைக்குள்ளும் ஹிஜாப் அணியலாம். ஆனால், ஆசிரியர் பாடம் நடத்த உள்ளே வந்ததும் ஹிஜாப்பை அகற்றிவிட வேண்டும். அரசு முறையாக ஓரு வழிகாட்டுதல் தரும்வரை இந்த நிலை தொடரும்' என்று அதன்பின் முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டம் நடத்திய உடுப்பி மாணவிகள் ஆறு பேர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

6. கர்நாடகாவில் சில கல்லூரிகளில் யூனிஃபார்ம் கட்டாயம், சில கல்லூரிகளில் இப்படி இல்லை. இந்நிலையில் கர்நாடக அரசு ஓர் உத்தரவை வெளியிட்டது. 'கல்லூரி வளர்ச்சிக் குழு பரிந்துரைக்கும் சீருடையை மாணவ, மாணவிகள் கட்டாயம் அணிய வேண்டும். சமத்துவம், கண்ணியம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகள் அணிவது தடை செய்யப்படுகிறது' என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஹிஜாப் அணிவதை இந்த உத்தரவு மறைமுகமாகத் தடை செய்தது. இந்த அரசு உத்தரவை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டது.

7. ஹிஜாப் தடை மேலும் சில கல்லூரிகளிலும் பரவியது. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, மாணவிகள் தங்கள் சீருடைக்கு மேல் காவித் துண்டு அணிந்துகொண்டு கல்லூரிகளுக்கு வந்தனர். பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இதன் பின்னணியில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்து அமைப்பினர் சிலர் மாணவ, மாணவிகளுக்கு காவித் துண்டுகள் மற்றும் தலைப்பாகைகளை விநியோகிக்கும் வீடியோக்களும் வெளியாகின. 'விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். முதல்வரும், உள்துறை அமைச்சரும் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நீங்கள் பயப்பட வேண்டாம்' என்று சொல்லி அவர்கள் காவித்துண்டுகளை அணிவிக்கும் காட்சிகள் வெளியாகின. ஹிந்து ஜாகரன வேதிகே என்ற அமைப்பின் பின்னணி இதற்கு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஹிஜாப் சர்ச்சை
ஹிஜாப் சர்ச்சை


8. ஹிஜாப் போராட்டம் நடத்தும் மாணவிகளுக்கு எதிராக காவித்துண்டுடன் இந்து மாணவர்கள் திரண்டதால் பல கல்லூரிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. உடுப்பி, குந்தாப்புரா, பாலகாடி, கொப்பா, மங்களூரு என ஐந்து கல்லூரிகள் இதனால் ஹிஜாப்பை தடை செய்தன. இவற்றில் மூன்று அரசு கல்லூரிகள், இரண்டு தனியார் கல்லூரிகள். தட்சின கன்னடா, உடுப்பி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதைத் தாண்டியும் பல பகுதிகளுக்கு இந்த சர்ச்சை பரவியது. மாண்டியாவில் முஸ்கான் கான் என்ற மாணவி கல்லூரிக்குள் நுழைந்தபோது காவித்துண்டுடன் பல மாணவர்கள் அவரை கேரோ செய்து 'ஜெய் ஶ்ரீராம்' என்று முழக்கமிட்டதும், பதிலுக்கு அவர் 'அல்லாஹு அக்பர்' என்று முழக்கமிட்டதும் இந்தியா முழுக்க வைரலானது. ''இந்தியாவில் ஒவ்வொரு மதத்தினருக்கும் சுதந்திரம் இருக்கிறது. என் பண்பாட்டை நான் பின்பற்றுகிறேன். அவர்கள் பண்பாட்டை அவர்கள் பின்பற்றுகிறார்கள். மற்றவர்களின் நம்பிக்கைகளை நான் கேள்வி கேட்பதில்லை. அதேபோல என் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக்கூடாது. ஹிஜாப் அணிவது என் உரிமை'' என்றார் முஸ்கான்.

கர்நாடகாவின் பல கல்லூரி வளாகங்களில் இப்படி பிரச்னை ஏற்பட்டது. ஒரு கல்லூரியில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக இருந்த கொடிக்கம்பத்தில் காவிக்கொடியை மாணவர்கள் ஏற்றினர். பிரச்னை மேலும் தீவிரமடைவதைத் தவிர்க்க, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

9. ஹிஜாப் சர்ச்சை தொடர்பான ஐந்து வழக்குகளை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித், இதில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க மறுத்தார். 'அரசியல் சாசனம் தொடர்பான பல கேள்விகளை அடக்கிய வழக்கு இது. பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எனவே, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்' என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ண திட்சித், நீதிபதி ஹாஸி ஜைபுன்னிசா மொஹியுதின் ஆகிய மூன்று நீதிபதி அடங்கிய அமர்வு இதை விசாரிக்க உள்ளது. 18 மாணவிகள் சார்பில் தொடுக்கப்பட்ட ஐந்து வழக்குகளை மொத்தமாக இந்த அமர்வு விசாரிக்கும். ஹிஜாப் அணிவது அரசியல் சட்டப்படி வழங்கப்பட்ட அடிப்படை உரிமையா, சீருடை தொடர்பான கர்நாடக அரசின் உத்தரவு செல்லுமா ஆகிய கேள்விகளுக்கு இந்த தீர்ப்பு பதில் சொல்லும். இந்த மூன்று நீதிபதிகள் அமர்வு வழங்கும் தீர்ப்பில் திருப்தி இல்லை என்றால், அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில்தான் மேல் முறையீடு செய்ய முடியும்.

ஹிஜாப் சர்ச்சை
ஹிஜாப் சர்ச்சை

10. கர்நாடகக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், கடலோர கர்நாடக மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆகியோர் இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். 'கல்வி நிலையங்களில் மத வெறுப்பு பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும்' என்று அக்கறையுள்ள பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். ''இந்தப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்து வைக்கவில்லை. முஸ்லிம் மாணவிகள் போராடியபோது அவர்களுக்கு ஆதரவு மட்டுமே தெரிவித்தோம்'' என்கிறார் கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலத் தலைவர் அதாவுல்லா புஞ்சல்கட்டே. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் முன்னாள் தேசிய செயலாளர் ஹர்ஷ நாராயணன், ''பள்ளி மற்றும் கல்லூரிகளில் மத நடைமுறைகள் எதுவும் இருக்கக்கூடாது. மத அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா சொல்லட்டும். அப்படி அவர்கள் சொன்னால், நாங்களே அந்த அமைப்பில் சேரத் தயார்'' என்கிறார்.

அரசியல்வாதிகள் தேர்தலைப் பார்க்கிறார்கள். மாணவர்கள் தேர்வைப் பார்க்கிறார்கள். தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் பரிதவிப்பில் இருக்கிறார்கள்.