Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: ரூ.100 கோடி லஞ்சப் புகார் - அரசுக்கு நெருக்கடி; அமைச்சர் அனில் தேஷ்முக் தலை தப்புமா?

உத்தவ் தாக்கரே, சரத் பவார்
உத்தவ் தாக்கரே, சரத் பவார்

ரூ.100 கோடி லஞ்சப் புகாரில் சிக்கியிருக்கும் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதவி தப்புமா என்பது குறித்து முதல்வர் உத்தவ்தாக்கரேயுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்துகிறார்.

மும்பையில் போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் சமீபத்தில் வேறு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்ல பாதுகாப்புக் குளறுபடி தொடர்பாகவே இந்த இடமாற்றம் நிகழ்ந்தது. இடமாற்றம் கிடைத்த அடுத்த இரண்டாவது நாளில், மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டை பரம்பீர் சிங் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிராவில் சிவேசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்திவருகின்றன. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராக இருக்கிறார். இந்தநிலையில் அவர்மீது மாநில பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டு எழுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானி இல்ல பாதுகாப்புக் குளறுபடியில் கைதுசெய்யப்பட்டுள்ள குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் மற்றும் சில காவலர்களிடம் மாதம் ரூ.100 கோடி பணம் வசூலித்துக் கொடுக்கும்படி அனில் தேஷ்முக் வற்புறுத்தியதாக, பரம்பீர் சிங் தான் எழுதிய கடிதத்தில் குற்றம்சாட்டியிருக்கிறார். தொழில் நிறுவனங்கள், பார், பப், ஓட்டலகள் போன்ற இடங்களிலிருந்து மிரட்டிப் பணம் பறித்து 100 கோடி ரூபாய் திரட்ட வேண்டும் என வலியுறுத்தினார் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பரம்பீர் சிங்குடன் அனில் தேஷ்முக்
பரம்பீர் சிங்குடன் அனில் தேஷ்முக்

இதையடுத்து, அனில் தேஷ்முக்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க அழுத்தம் கொடுத்துவருகிறது. மும்பையில் போராட்டமும் நடத்திவருகிறது.

முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ், இது தொடர்பாக அளித்த பேட்டியில், `அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகளை முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டுகொள்ளாமல் இருக்கிறார்’ என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்தp பிரச்னையால் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு புதிய ஆட்சியமைக்க வாய்ப்பை எதிர்பார்த்து பாஜக காத்துக்கொண்டிருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள ஊழல் பிரச்னை மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லப் பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தைக் காரணம் காட்டி, சட்டம் ஒழுங்கு பிரச்னை சீர்குலைந்திருப்பதாகக் கூறி, மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா என்பது குறித்து பா.ஜ.க தலைமை ஆலோசித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், அனில் தேஷ்முக்கை பதவியிலிருந்து நீக்குவது குறித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து பேசவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சரத்பவார் அளித்த பேட்டியில், `அனில் தேஷ்முக் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தீவிரத்தன்மை கொண்டது. ஆனால் குற்றச்சாட்டு கூறப்பட்ட நேரம்தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும் இது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

அம்பானி வீடு; வெடி பொருள்களுடன் கார்! - என்கவுன்ட்டர் ஸ்பெலிஸ்ட்டை நள்ளிரவில் கைதுசெய்த என்.ஐ.ஏ

இதற்கிடையே, இந்தப் பிரச்னைகளுக்கு காரணமான, முகேஷ் அம்பானி வீட்டின் அருகில் வெடிகுண்டுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட கார் வழக்கில், புதிய திருப்பமாக இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கார் கைப்பற்றப்பட்ட அடுத்த சில தினங்களில் கார் உரிமையாளர் கிரண் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டது தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக வினாயக் ஷிண்டே என்ற கான்ஸ்டபிளும், நரேஷ் என்ற கிரிக்கெட் சூதாட்ட ஏஜென்ட்டும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் முகேஷ் அம்பானி இல்லத்துக்கு அருகில் வெடிகுண்டுகளுடன் கார் நிறுத்தப்பட்டது குறித்து மட்டுமே தேசியப் புலனாய்வு ஏஜென்சி விசாரித்துவந்தது. ஆனால் அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த உத்தரவின் பேரில், வெடிகுண்டுகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட காரின் உரிமையாளர், கிரண் கொலை தொடர்பான வழக்கு விசாரணையையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்து தீவிரமாக விசாரித்துவருகிறது தேசியப் புலனாய்வு அமைப்பு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு