வெளியிடப்பட்ட நேரம்: 02:20 (23/08/2017)

கடைசி தொடர்பு:10:17 (23/08/2017)

பா.ஜ.க என்னும் பெரிய மீன், அ.தி.மு.க என்ற சின்ன மீனை விழுங்கும்: சீமான் கணிப்பு

'2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க மாட்டார்கள்' என்றும் 'பா.ஜ.க என்ற பெரிய மீன், அ.தி.மு.க. என்ற சிறிய மீனை படிப்படியாகத் தொடங்கி, முழுவதுமாக விழுங்கும்' என்றும் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

சீமான் ஆர்ப்பாட்டம்

மெரினா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மீண்டும் கடற்கரை அருகே நிறுவ வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது, " சென்னை கடற்கரை சாலையில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலையை பல்வேறு காரணங்களைச் சொல்லி அகற்றியுள்ளார்கள். இதை, வெறும் சிலை அகற்றமாக மட்டும் பார்க்கவில்லை. ஒரு தேசிய இனத்துக்குக் கொடுத்த அவமதிப்பாகப் பார்க்கிறோம். நீதிமன்றம் சொல்லி எடுத்துள்ளீர்கள் என்றாலும், நினைவு மண்டபத்தில் ஒரு சிலை வைத்தாலும், கடற்கரையின் ஏதாவது ஓர் இடத்தில் அவரது சிலை வைக்கப்பட வேண்டும். ஏனெனில், சிலை எடுத்ததைப் பிரச்னையாகப் பார்க்கவில்லை. அவமானமாகப் பார்க்கிறோம். மதிப்புமிக்க ஒரு கலைஞரான சிவாஜியைப் பெருமைப்படுத்த வேண்டும் என்றே சிலையை நிறுவியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. ஆனால், அதில் கருணாநிதியின் பெயர் இருக்கிறது என்பதற்காகத்தான் இந்த அரசு, சிலையை அகற்ற இவ்வளவு சிரத்தை எடுத்திருக்கிறது. ஆனால், கருணாநிதி வைத்த சிலையை அகற்றிய அ.தி.மு.க-வுக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்கூட ஏன் போராடவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

அ.தி.மு.க-வில் இனி என்ன நடக்கும்?

அ.தி.மு.க. இணைப்புகுறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது, "பணத்தைப் பாதுகாக்கவும் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும்தான் இந்த இணைப்பு நடந்துள்ளது. இணைத்துவைத்ததே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுதான். எனவே, ஆட்சி கலையாது. ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால், டி.டி.வி. தினகரனை சிறையில் வைப்பார்கள், எம்.எல்.ஏ-க்களை மிரட்டுவார்கள். அதன்பிறகு, சசிகலா குடும்பத்தைத் தவிர்த்து, இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்து, பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து தேர்தலைச் சந்திப்பதுதான் பா.ஜ.க-வின் திட்டம். இப்படியே, பா.ஜ.க என்ற பெரிய மீன், அ.தி.மு.க. என்ற சிறிய மீனை முழுவதுமாக விழுங்கும். குறிப்பாக, 2019-ம் ஆண்டு வரை இந்த ஆட்சியைக் கலைக்க மாட்டார்கள் என்பதே என் கணிப்பு" என்றார். 

மேலும் பேசுகையில்,  "இந்த மத்திய, மாநில அரசாங்கம் மக்கள் பிரச்னைகளை ஒருபோதும் தீர்க்காது . மத்திய அரசு, முதலாளிகளுக்கு வேலை செய்யும், மக்களுக்கு வேலை செய்யாது. தேர்வில் ஓராண்டு விலக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்த பா.ஜ.க-வின் தமிழகத்  தலைவர்கள், அதிகாரமற்றவர்கள். எனவே,  நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விடிவுகாலம் பிறக்காது." என்றும் சீமான் விமர்சனம் செய்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க