Published:Updated:

ஊழல் வழக்கில் இருந்து பினராயி விஜயன் விடுவிப்பு!

ஊழல் வழக்கில் இருந்து பினராயி விஜயன் விடுவிப்பு!
ஊழல் வழக்கில் இருந்து பினராயி விஜயன் விடுவிப்பு!

ஊழல் வழக்கில் இருந்து பினராயி விஜயன் விடுவிப்பு!

லாவ்லின் ஊழல் வழக்கில் இருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை கேரள உயர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

1995-ம் ஆண்டு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல், பந்தியார், செங்குளம் நீர் மின் நிலையங்களை சீரமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கான பணிகளை கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி.லாவ்லின் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்து அந்த திட்டத்தை நிறைவேற்றியது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக பினராயி விஜயன் லாவ்லின் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்கு அப்போது செலவிடப்பட்ட தொகை 375.5 கோடி ரூபாய்.

ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் கேரள அரசுக்கு 266 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பின்னால் வந்த காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டியது. இது தொடர்பாக விஜிலென்ஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. விசாரணையில் பண இழப்பு உண்மைதான் என்று கண்டுபிடிக்கப்பட்டு பினராயி விஜயன் உட்பட மின்சாரத்துறை அதிகாரிகள் ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வர் உம்மன்சாண்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை எர்ணாகுளம் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு இல்லை என்று 2013-ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராம்குமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பினராயி  விஜயனுக்கு தொடர்பு இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டாலும் மின்சாரத்துறை அதிகாரிகளின்மீது தொடர்ந்து வழக்கு நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. லாவ்லின் வழக்கு, கடந்த பல ஆண்டுகளாக முதல்வர் பினராயி விஜயனுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வந்தது. தற்போது அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு