Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''உங்கள் கட்சிக்கு ரஜினி பெயர் சூட்டுங்கள்!'' - தமிழருவி மணியனுக்கு நண்பரின் 'கோரிக்கை'!⁠⁠⁠⁠

தமிழருவி மணியன்

''தமிழருவி மணியனும் நானும் மாணவர்களாக இருந்த காலத்தில், பெருந்தலைவர் காமராசரின் தன்னலமற்ற சேவையைப் பார்த்து அவர் தலைமையை ஏற்று பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள். அந்த வழியில் வந்த தமிழருவி மணியன், காந்தியின் பெயரால் இயக்கம் வைத்துக்கொண்டு சமீபகாலங்களில், ஆதாயத்துக்காக யார் யாரையோ காமராசருடன் ஒப்பிட்டுப் பேசி அவர்  மதிப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், தன் மதிப்பையும் இழந்து  வருகிறார். அரசியல் ஆதாயத்துக்காக நண்பன் ஒருவன் தரம் தாழ்ந்து போகிறானே...'' என்று, எளிமையான அரசியல்வாதியும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தமிழகப்பொதுச்செயலாளருமான ஜான்மோசஸ் நம்மிடம் வருத்தப்பட்டார்.

  ''அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே?'' என்ற நமது கேள்விக்குப் பதில் அளித்தவர்... 

''இதை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. தன்னை ஒரு புனிதர் போல காட்டிக்கொள்ளும் தமிழருவி, இந்தச் சமூகத்தில் தீங்கு விளைவிக்கும் புல்லுருவி. அவர் எப்போதும் கொள்கை கோட்பாடு ஏதுமற்ற வெறும் வார்த்தை வியாபாரி என்பது எனக்குத் தெரியும். இப்போது மட்டும் அல்ல, அப்போதே அப்படித்தான்.  தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார். அவரைப்பற்றித் தற்போதைய தலைமுறைக்கு சொல்லவேண்டிய கடமை எனக்குள்ளது. ரஜினி ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

1968-ல் ஸ்தாபன காங்கிரஸ் மூலமாக பெருந்தலைவர் காமராசர் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவருடைய ஆளுமையையும், எளிமையையும் பார்த்து  என்னைப்போன்ற கல்லூரி மாணவர்கள் அவர் பின்னால் சென்றோம். நாகர்கோயில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசருக்கு தேர்தல் பணியாற்றச் சென்றபோது தமிழருவி மணியனும் அங்கு வருகிறார். அப்போதே பேச்சுத்திறமை  மிகுந்த தமிழருவி, அதன் மூலம்  தன்னுடைய நண்பர் வட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டார். பெருந்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதும், பல கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் மாணவர் பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்றது. அப்போது நான், தமிழருவி, வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், தண்டாயுதபாணி, நேதாஜி, தஞ்சை ராமமூர்த்தி, குடந்தை ராமநாதன், திருமங்கலம் ஹக்கீம் போன்றோர் ஒன்றாக இருந்தோம். தமிழகம் முழுக்க சுற்றி வந்தோம். அதன் பின்பு மொரார்ஜி தேசாய் தலைமையில் உருவான ஜனதா கட்சியில் மாணவர் மற்றும் இளைஞர் பிரிவில் பணியாற்றினோம். பின்பு அதிலிருந்து ஜனதா தளம் உருவாகி கோ.கலிவரதன் தலைவராக இருந்தபோது, அவருக்கு எதிராக தனி அணியாக செயல்பட்டார் தமிழருவி. தான் இருக்கிற பகுதியில் கட்சிக்கொடி கட்ட இரண்டு தொண்டர்களை உருவாக்க முடியாத தமிழருவி மணியன், தனி ஆளாக கோஷ்டி அரசியல் செய்து ஊடகத்தில் எப்போதும் தன் பெயர் வரும்படி செய்வதை அப்போதிருந்தே வழக்கமாக வைத்திருந்தார். 

வி.பி.சிங் ஆட்சியில் இருந்தபோது, 'கிராந்திய தளம்'னு ஹெக்டே கட்சி ஆரம்பித்து பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தார். அக்கட்சியின் தமிழக தலைவராக தமிழருவி வந்தார். அதன் பின்பு நெல்லை ஜெபமணியின் ஜனதாவில் சேர்ந்தார். அதன் பின்பு ஜனதா தளத்தில்  மீண்டும் சேர்ந்தார். ஜனதா தள கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றார். இருந்தாலும் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற வெறி அவருக்குள் வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்... நடிகர் சிவாஜிகணேசன் சிறிதுகாலம் ஜனதா தளத் தலைவராக இருந்தபோது, இவரை ஏற்றுக்கொள்ள மாட்டேன், இவருக்கு அரசியல் தெரியாது என்று அவமதித்தார். அதன் பின்பு ஜி.வடிவேலு தலைவராக வந்த பின்புதான் மீண்டும் கட்சிக்குள் வந்தார். காமராசரின் புகழைப் பரப்பி தேசத்தலைவர்களின் வரலாற்றில் நடித்துப் பெருமை சேர்த்த சிவாஜியை அன்று அவமதித்தவர்தான், சமூகத்துக்கு எந்த சிந்தனையுமில்லாமல் படம் நடிக்கும், சரியான அரசியல் பார்வை இல்லாத  ரஜினியை முதல்வராக்குவேன் என்று சபதம் செய்கிறார். 

 இடையில் ஜனதா தளத்திலிருந்து விலகியவர், இலக்கியக்கூட்டம், பட்டிமன்றங்களில் பேசத் தொடங்கினார். அதன் பிறகு காந்திய இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வந்தவருக்கு, சத்திய மூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியின்போது பேச வாய்ப்பு கொடுத்தார் மூப்பனார். அங்கு கைதட்டல் அதிகம் கிடைக்கவும், மூப்பனார் தயவில் காங்கிரசில் அடைக்கலமானார். இருந்தாலும் காங்கிரசில் ஏகப்பட்ட தலைகள் இருந்ததால், அவரால் அங்கு தனித் தவில் வாசிக்க  முடியவில்லை. அதன் பின்பு த.மா.கா உருவானதும் அதில் மாநில பொறுப்பு கிடைத்தது. அங்கும் கட்சிக்கு விசுவாசமில்லாமல் தனி அணியாக செயல்பட்டார். அதன் பின்பு அங்கிருந்து வெளியில் வந்து காந்திய மக்கள் இயக்கத்தை மீண்டும் தூசு தட்டினார். திடீரென்று வைகோவை முதல்வராக்காமல் விடமாட்டேன் என்றும், அதற்கு மோடிக்கு ஓட்டுப்போடுங்கள் என்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஊர் ஊராகச் சென்றார். ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு வாக்கு சதவிகிதம் என்று  கணக்குப்போட கால்குலேட்டரும் கையுமாக அலைந்தார். காந்தியும், காமராசரும் எதிர்த்த மதவாதகக் கட்சிக்காக அவர்கள் பெயரைச் சொல்லி வாக்கு கேட்டார். அப்போதே இவருடைய சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது. இதோடு விட்டாரா, 2016 சட்டமன்றத் தேர்தலில் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் ஆரம்பித்த கட்சியோடு இணைந்து சில தொகுதிகளில் ஆட்களை நிறுத்தினார். சொற்ப வாக்குகளைப் பெற்றார். இப்படி நிலையில்லாமல், ஒரு கொள்கை இல்லாமல் சோறு கண்ட இடம் சொர்க்கம் மாதிரி அவர் நிலை இன்று ஆகிவிட்டது. இடையில் எனக்கு அரசியல் வேண்டாம், இனி பேசமாட்டேன், துறவறம் செல்கிறேன், இலக்கியக் கூட்டங்களில் மட்டும் கலந்துகொள்வேன்  என்று அறிவித்தார். அப்போதே எனக்குத் தெரியும், அவர் அடுத்து பெருசா வேறு எதற்கோ பிளான் பண்ணுகிறார் என்று. ரஜினி மன்றத்தைக் குறி வைத்திருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிகிறது. இவரால் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாமல் இருக்க முடியாது. பேசாமல் இருந்தால் அவர் தலை வெடித்துவிடும். அப்படி ஒரு மன வியாதி அவரை பீடித்திருக்கிறது. அவருடைய மூளை இப்போது பி.ஜே.பி-க்காகவே சிந்திக்கிறது. அதை நேரடியாக வெளிப்படுத்தாமல், ரஜினியை முன்னிறுத்துவதன் மூலம் வெளிப்படுத்துகிறார். திருச்சி கூட்டத்தில், எதை எதையோப் பேசியவர் கதிராமங்கலம் - நெடுவாசல் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு பிரச்னை பற்றி பேசினாரா? தன்னுடைய பேச்சைக் கேட்க ரஜினி ரசிகர்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அடுத்த வருடம் இன்னொரு கட்சி அல்லது வேறொரு நடிகரை ஆதரித்துப் பேசுவார். மொத்தத்தில் அவருடைய கல்லா நிறைந்து கொண்டிருக்கவேண்டும். தன்னை பற்றிய செய்தி ஊடகத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவேண்டும். அதுதான் அவருடைய ஒரே கொள்கை!

ஆரம்பத்தில் பெருந்தலைவருக்காக ஒன்றாகப் பணியாற்றியவர் என்ற உரிமையில் அவரிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்... தயவுசெய்து உங்கள் அமைப்பில் இருக்கும் காந்தியின் பெயரை  எடுத்துவிட்டு ரஜினி பெயரை வையுங்கள். காமராசர் பெயரை மேடைகளில் உச்சரிக்காதீர்கள்...'' என்றார் மிகுந்த வேதனையுடன்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement