Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“பொதுக்குழுவை எப்படிக் கூட்டுவார்கள் பார்க்கலாம்..!”- திமிறும் தினகரன் அணி #HallOfShameADMK

தினகரன்

“பொதுக்குழுவைக் கூட்டி சசிகலா, தினகரன் நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று அ.தி.மு.க அம்மா - புரட்சித் தலைவி அணிகள் தடாலடியாக அறிவிக்க, ''பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரமே அவர்களுக்குக் கிடையாது” என்று தினகரன் தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. அ.தி.மு.க -வைக் கைப்பற்ற இரண்டு அணிகளிலும் அதிகார யுத்தம் உச்சகட்டத்துக்கு வந்துவிட்டது. 

தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி, இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி, தமிழகத்தில் ஆளும் கட்சி எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அ.தி.மு.க இயக்கம், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எண்ணற்ற சோதனைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் அதிகாரமிக்க பதவியாகப் பொதுச்செயலாளர் பதவியே இருக்கும்வகையில், அந்தக் கட்சியின் சட்டவிதி உள்ளது. அ.தி.மு.க என்ற கட்சியில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்றால், பொதுச்செயலாளர் பதவியில் இருந்தால் மட்டுமே முடியும். அந்தப் பொதுச்செயலாளர் பதவியை வைத்துத்தான் இப்போது அ.தி.மு.க-வின் ஆடுபுலி ஆட்டம் உச்சகட்டத்துக்கு வந்துள்ளது. 

“அதிகார மையமாக நீங்கள்தான் இருக்க வேண்டும்” என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுக்குழுவுக்கு வராமலேயே, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற அடைமொழியோடு பதவியேற்றுக்கொண்டார் சசிகலா. அன்று போயஸ் கார்டன் வீட்டுக்கே சென்று, பொதுக்குழுவில்... ''உங்களைத்தான் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்துள்ளோம்”என்று வரிசைக்கட்டி சொன்னவர்கள்தான் இப்போது கட்சியைவிட்டே சசிகலாவை நீக்குவதற்கு கங்கணம் கட்டியுள்ளார்கள். பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் சசிகலாவையும், அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளரையும்  நீக்குவதவற்காக வரும் செப்டம்பர் 12-ம் தேதி அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என  அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து அ.தி.மு.க-வில் நடைபெற்றுவரும் இந்த அதிரடித் திருப்பங்களால் அடிமட்டத் தொண்டர்களும், கட்சியின் நிர்வாகிகளும் குழம்பிப்போய் உள்ளார்கள். அ.தி.மு.க-வின் பிடி யார் பக்கம் இருக்கப்போகிறது என்ற பலப்பரீட்சைக்கான விடை, செப்டம்பர் 12-ம் தேதி தெரிந்துவிடும். ஆனால், இப்போது பொதுக்குழுக் கூட்ட அறிவிப்பே அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டுள்ளது.

அ.தி.மு.க-வின் சட்ட விதிப்படி பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாகப் பொதுக்குழுவைக் கூட்டி, அந்த மினிட் புக்கைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவேண்டும். அ.தி.மு.க-வின் பொதுக்குழுவில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், 234 நியமன பொதுக்குழு உறுப்பினர்கள் என 3,400 பேர் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ளார்கள். அ.தி.மு.க-வின் சட்டவிதிகளை மாற்றுவது எல்லாம் பொதுக்குழுவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சாதாரண பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றால் பதினைந்து தினங்களுக்கு முன்பே அதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும். அவசர பொதுக்குழுவுக்கு மட்டுமே கால அவகாசம் இல்லை என்ற சட்டவிதி உள்ளது.

செப்டம்பர் 12-ம் தேதி கூட்டப்பட உள்ள பொதுக்குழு, சாதாரண பொதுக்குழுக் கூட்டமாகக் கருதப்பட்டாலும், இந்தப் பொதுக்குழுக் கூட்டத்துக்கும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்தப் பொதுக்குழுவுக்கான அழைப்பு, அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அளிக்கப்படுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. தினகரன், சசிகலாவைக் கட்சியில் இருந்து நீக்கும் முடிவுக்கு எதிராகத் தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கிவருகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களில் தினகரன் ஆதரவாளர்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு என்றால், தினகரன் ஆதரவாளர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிக்கலை ஏற்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம் எடப்பாடி அணிக்கு உள்ளது. பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் அவைத்தலைவர் மதுசூதனனுக்கு இருப்பதாகவும், அவரின்  கையெழுத்துடனே பொதுக்குழு அழைப்பு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதே அ.தி.மு.க-வின் பொதுக்குழுவால் சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிகுறித்த சிக்கல் தற்போது தேர்தல் ஆணையத்தின் முடிவில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் இருக்கும்போது பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் அவைத்தலைவருக்கு எப்படி வந்தது என்ற கேள்வியும் எழுகிறது.

அதேபோல், இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க-வின் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டுவந்து, பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும்வரை கட்சியை வழிநடத்த வழிகாட்டுக் குழு அமைக்கப்படுவதற்கான அனுமதியும் கோரப்படுகிறது. ஆனால், இந்தச் சட்டவிதி மாற்றத்துக்குப் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவும் அவசியமாகிறது. இத்தனை சட்டச்சிக்கலை இந்தப் பொதுக்குழு சந்திக்க உள்ளதால், இந்தப் பொதுக்குழுவை  எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்ற சந்தேகம் பன்னீர் மற்றும் எடப்பாடி தரப்பிடம் உள்ளது. ஏனெனில், எடப்பாடி அணியினர்தான் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலாதான் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்துள்ளார்கள். இந்தச் சிக்கலைப் போக்கத்தான் அவசர பயணமாக ஜெயக்குமார் தலைமையில் டெல்லிக்குச் சென்று சசிகலாவுக்கு ஆதரவாகக் கொடுத்த பிரமாணப் பத்திரத்தை  வாபஸ் வாங்கச் சென்றுள்ளார்கள். 

தினகரன் அணி, பொதுக்குழுவையே நடத்தவிடாமல் செய்ய வேண்டும் என்ற முடிவில் தெளிவாக உள்ளது. அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராகத் தினகரனால் நியமிக்கப்பட்டுள்ள சோழன் பழனிசாமி, “பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு. பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்ததால் கடந்த ஆண்டு அவசர பொதுக்குழுவாகக் கூட்டப்பட்டது. ஆனால், இப்போது பொதுச்செயலாளர் பதவியில் சின்னம்மா (சசிகலா) இருக்கிறார். அவரால், பொதுக்குழுவைக்  கூட்டமுடியாத நிலையில்... துணைப் பொதுச்செயலாளருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. ஆனால், அவைத்தலைவரை வைத்து பொதுக்குழுவைக்கூட்டுவது அ.தி.மு..க-வின் சட்டவிதிகளுக்கு முரண்பாடானது. அவர்களால் எப்படிப் பொதுக்குழுவைக் கூட்டமுடியும் என்று பார்க்கிறோம். பொதுக்குழுவுக்கு யார் போவார்கள்? அதற்கு முன்பே நாங்கள் நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கிவிடுவோம்” என்கிறார். 

தினகரன் அணியின் மூவ் அறிந்த எடப்பாடி அணியினர், தங்களுக்கு ஆதரவானவர்களை மட்டும் பொதுக்குழுவுக்கு அழைத்துத் தீர்மானத்தை நிறைவேற்றும் முடிவில் இருக்கிறார்கள். 

செப்டம்பர் 12-ம் தேதி அ.தி.மு.க-வின் அடுத்த பலபரீட்சைக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement