Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க டூ பா.ஜ.க... கார்த்தியாயினி அணி மாறிய பின்னணி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எந்த அணியிலும் சேர்த்துக் கொள்ளப்படாததால் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி, பி.ஜே.பி தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்திருக்கிறார்.

கார்த்தியாயினி

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு, நான்கு ஆண்டு சிறைத்தண்டனையோடு, அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது பெங்களுரு தனி நீதிமன்றம். அந்தத் தீர்ப்பு வெளியானபோது, தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளவுக்குப் பரபரப்பாகப் பேசப்பட்டவர் கார்த்தியாயினி. வேலூர் மாநகர முன்னாள் மேயரான இவர், அப்போது அடித்த அரசியல் ஸ்டண்ட்டில் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களேகூட சற்று ஆடித்தான் போனார்கள். அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு கூடுதலாக 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார், நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. இதையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவைக் குளிர வைப்பதற்காக, அ.தி.மு.க. தரப்பில் பல்வேறு கூத்துகள் அரங்கேற்றப்பட்டன.

அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார் குன்ஹா. அந்தச் சமயத்தில்தான் குன்ஹாவையும், அவரது தீர்ப்பையும் விமர்சித்து மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க (?!) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் கார்த்தியாயினி. அந்தத் தீர்மானத்தினால் ஜெயலலிதாவுக்கே தலைசுற்றியிருக்கும். 'கார்த்தியாயினியின் இந்தத் தீர்மானம், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்' என கடும் கண்டனங்கள் எழுந்தன. அதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திலும், கர்நாடக நீதிமன்றத்திலும் அவரது பெயரில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, 'அவர் பகிரங்க மன்னிப்பைக் கேட்க வேண்டும்' என்று அவரது தலையில் குட்டுவைத்தது நீதிமன்றம். பின்னர் நீதிமன்றத்தின் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார் இவர். அ.தி.மு.க-வின் அதிதீவிர விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொண்டவர் தற்போது பி.ஜே.பி-யில் இணைந்த பின்னணி குறித்து விசாரித்தோம்.

இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், "முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய்தான், கார்த்தியாயினியின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளையார்சுழி போட்டவர். மன்னார்குடி குடும்பத்தின் மூலம் சீட் வாங்கி அமைச்சரான வி.எஸ்.விஜய், வேலூரில் தனக்கென ஒரு அணியை உருவாக்கக் காய் நகர்த்திக் கொண்டிருந்த நேரம் அது. நகராட்சியாக இருந்து, தரம் உயர்த்தப்பட்ட வேலூர் மாநகராட்சிக்கு 2012-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அப்போதைய அமைச்சர் வி.எஸ். விஜய், எப்படியாவது மேயர் பதவியை தன் சகாக்களுக்கு வாங்கிக்கொடுத்து, அவர்களைத் தன் கைக்குள் வைத்துக்கொள்ள விரும்பினார். தனக்கு விசுவாசமான ஆளைத் தேடியபோதுதான், விஜயிடம் வேலை பார்த்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் அனுஷ்குமாரின் மனைவி கார்த்தியாயினி தேர்வானார். பி.ஹெச்.டி ஆய்வில் இருந்த கார்த்தியாயினி, அப்போது கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை. அவர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன்தான் கார்த்தியாயினிக்கு உறுப்பினர் அட்டையே வழங்கப்பட்டது. வேலூரைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரே பெரும்பான்மையாக வசிப்பதால், எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. தேர்தல் என எந்தத் தேர்தலானாலும், அந்த சமூகத்தினரைத்தான் கட்சிகள் வேட்பாளராக நிறுத்தும். மேயர் தேர்தலில் அப்படி நடந்தால், தனக்கு செல்வாக்கு இருக்காது; தான் நினைத்தது நடக்காது என்பதை உணர்ந்த விஜய், மன்னார்குடி அஸ்திரத்தைப் பயன்படுத்தி, மேயர் பதவியைத் தலித்துகளுக்கானதாக அறிவிக்க வைத்து, கார்த்தியாயினியை வெற்றிபெற வைத்தார்.

பாஜக அலுவலகம்

ஆனால், ஆறே மாதத்தில் விஜய்-யின் கனவைத் தகர்த்த கார்த்தியாயினி, அவருக்கு எதிராக அரசியல் செய்ய ஆரம்பித்தார். ஆந்திராவில் கிரானைட் குவாரி, திருவண்ணாமலையில் கலைக்கல்லூரி, ஆற்காட்டில் காகிதத் தொழிற்சாலை என இவர் கொடிகட்டிப் பறக்க விழிபிதுங்கி நின்றார் முன்னாள் அமைச்சர் விஜய். "அமைச்சர் பதவி என்பது ஜெயலலிதாவால் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம். ஆனால், நான் வகிக்கும் மேயர் பதவியை அப்படிச் செய்யமுடியாது. அதனால் அவரை அனுசரித்துப் போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்று சொல்லி வலம்வர ஆரம்பித்தார். கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பொருட்படுத்தாமல் தன் 'வளர்ச்சி'-யில் மட்டுமே கவனம் செலுத்தியதால், விஜய்க்கும், இவருக்குமான இடைவெளி அதிகரித்தது. அதேநேரத்தில், ஆற்காடு எம்.எல்.ஏ-வான ஆர். சீனிவாசனிடம் மட்டும் கார்த்தியாயினி நெருக்கம் காட்டி வந்தார். ஒருகட்டத்தில் கட்சியின் சீனியரும், மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணியையே ஓவர்டேக் செய்து அதிரடி காட்டினார். அடுத்து வந்த எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு காய் நகர்த்தினார். ஆனால், கே.சி.வீரமணியினுடனான மோதல் காரணமாக அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. அதன்பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்தார். ஆனால், கே.சி.வீரமணியைத் தாண்டி எதுவும் செய்ய முடியாமல், அந்த முயற்சியில் தோல்வியடைந்தார். அதன் பிறகுதான் கட்சியில் அவர் டம்மியாக்கப்பட்டார்" என்றார்.

ஜெயலலிதா இறந்த பிறகு ஏற்பட்ட அசாதாரண சூழலில் எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் குழம்பியவர், அனைத்து அணிக் கதவுகளையும் தட்டிப் பார்த்தார். ஆனால், எந்தக் கதவும் இவருக்காகத் திறக்கவில்லை. கடைசி அஸ்திரமாக டி.டி.வி. தினகரன் தரப்புக்குத் தூதுவிட, ஆளைவிட்டால் போதுமென்று தெறித்து ஓடினார்களாம் அந்த அணி நிர்வாகிகள். கட்சி மற்றும் அரசு விழாக்களில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதால், விரக்தியில் இருந்தவர் ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசனை அணுகினார். அப்போது, “அ.தி.மு.க-வில் எந்தப் பக்கம் போனாலும் உன்னால் எதுவும் செய்ய முடியாது. அப்படியே போனாலும், அந்தக் கட்சிக்கு பெரிய எதிர்காலம் எதுவும் இருக்கப்போவதில்லை. தற்போதைய சூழல் பி.ஜே.பி-க்குத்தான் சாதகமாக இருக்கின்றது. உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் அல்லது 2019 எம்.பி. தேர்தல் ஆனாலும், தேர்தலில் கண்டிப்பாக உனக்கு சீட் வாங்கி விடலாம்" என்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகே, முழு நம்பிக்கையோடு டெல்லி சென்று அமித் ஷா முன்னிலையில் பி.ஜே.பி-யில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார் கார்த்தியாயினி என்கிறார்கள் வேலூர் மாவட்ட அ.தி.மு.க.-வினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement