Published:Updated:

'திசைமாறும் தாதுமணல் வழக்கு!' - அரசு நியமித்த வக்கீலுக்கு எதிராக போர்க்கொடி

'திசைமாறும் தாதுமணல் வழக்கு!' - அரசு நியமித்த வக்கீலுக்கு எதிராக போர்க்கொடி
'திசைமாறும் தாதுமணல் வழக்கு!' - அரசு நியமித்த வக்கீலுக்கு எதிராக போர்க்கொடி

'திசைமாறும் தாதுமணல் வழக்கு!' - அரசு நியமித்த வக்கீலுக்கு எதிராக போர்க்கொடி

தாதுமணல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞருக்கு எதிராக வி.வி.மினரல் மற்றும் பீச் மினரல் சங்கத்தைச் சேர்ந்த மினரல் நிறுவன உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

தாதுமணல் தொழிலுக்குத் தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தாது மணல் தொழில் முடங்கியுள்ளது. தாது மணல் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே தமிழக அரசு நியமித்த ககன்தீப்சிங்பேடி தலைமையிலான ஆய்வுக்குழு நடத்திய அறிக்கை முழுமையாக சமர்ப்பிக்கப்படவில்லை. திருச்சி மாவட்டத்தில் ஆய்வுநடத்தி முடிக்கப்படாததால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தாதுமணல் விவகாரத்தில் மினரல் நிறுவனங்களுக்கும் இத்தொழிலை எதிர்த்து புகார் அளிப்பவர்களுக்கும் என இருதரப்பிலுள்ள சாதக பாதகங்கள் மற்றும் உண்மை நிலைமையை நீதிமன்றத்தில் நடுநிலை தவறாமல் எடுத்துரைப்பதற்காக அறிவுரையாளராக (அமிக்கஸ் க்யூரி) வழக்கறிஞர் வி.சுரேஷ் என்பவரை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016 ஜனவரி 28ல் நியமித்தது. தற்போது நடுநிலை அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் வி.சுரேஷ் என்பவர் ஒருதலைபட்சமாகவே தனது அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் சில ஆதாரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. வழக்கறிஞர் சுரேஷ் நியமனத்துக்கு எழுந்துள்ள சர்ச்சை காரணமாக தாது மணல் வழக்கு திசை திரும்பவாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
 

இதுகுறித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் இந்தியா நிறுவன பொது மேலாளர் ஸ்டீபன்டேவிட் கூறுகையில், "பீச் மினரல்ஸ் சம்பந்தமாக நிறைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர் தயாதேவதாஸ். இவர் இந்தியா கார்னெட் சாண்ட் கம்பெனியின் உரிமையாளர் ஆவார். திருச்சியில் ஆற்றுமணலில் மினரல் பிரித்தெடுக்கும் தொழிலில் முறைகேட்டில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு இவர் மீதுள்ள வழக்கு நிலுவையிலுள்ளது. கடந்த 2006ல் தயாதேவதாஸ் என்பவர் தியாகி பொன்னையா பிள்ளை என்பவர் மூலமாக விவி மினரல் நிறுவனத்தின் மீது ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு 2006 நவம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

அடுத்து, சுந்தரம் என்பவர் தாது மணல் குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, வி.சுரேஷ், கே.முத்துநாயக், சி.பி.மோசஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில் வழக்கறிஞர் சுரேஷைத்தான் நடுநிலை அறிவுரையாளராக நீதிமன்றம் நியமித்தது.  இதனால் அவரிடமிருந்து நடுநிலையான நீதியை எதிர்பார்க்க முடியும் என்பதும் சந்தேகத்துக்கிடமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், தாதுமணல் நிறுவனங்களை ஆய்வு செய்யும் குழுவுக்கு ககன்தீப் சிங் பேடி தலைவராக இருப்பது ஏற்கக்கூடியது அல்ல என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய பிறகும், அவரது அறிக்கையைப் பின்பற்றி நடுநிலை அறிவுரையாளர் வி.சுரேஷ் தயாரித்துள்ள அறிக்கையும் நம்பகத்தன்மையாக இருக்க வாய்ப்பில்லை. இதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுரேஷ் குறித்து மனுத் தாக்கல் செய்துள்ளேன். மத்திய அரசும் தனது தரப்பில் ஐஆர்இஎல் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற தலைவர் எம்.எஸ்.நாகர் தலைமையில் ஆய்வுக்குழு ஏற்படுத்தியது. அந்தக்குழு ஆய்வு நடத்தி தாதுமணல் தொழில்நடக்கும் கடற்கரை பகுதிகளில் கடல் அலைகளில் அடித்து வரப்படும் மினரலை சட்டத்துக்குட்பட்டு ஏற்றுமதி செய்கிறார்கள் எனவும் சட்டவிரோதமாக எந்த செயல்பாடுகளுமில்லை எனவும் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது" என்றார்.

இதுகுறித்து தயா தேவதாஸிடம் கேட்டதற்கு, "சுந்தரம் தொடர்ந்த வழக்கில் சுரேஷ் வழக்கறிஞராக இருந்தார். அதற்காக அவர் நடுநிலையோடு செயல்படமாட்டார் என்று சொல்வதில் அர்த்தமில்லை. அப்படிப்பார்த்தால் தற்போது, அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட விஜய நாராயணன்கூட வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துகாக வாதாடியிருக்கிறார். வழக்கறிஞர் சுரேஷ் தாக்கல்செய்த அறிக்கையால் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்படும் என்பதற்காகவே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. என் மீதும் தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை வி.வி.மினரல்ஸ் நிறுவனம் சுமத்திவருகிறது" என்றார்.

டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் நிறுவன சட்ட ஆலோசகர் ஜெயகாந்தன் , "பொதுவாக வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் தங்களுடைய வாதிகளுக்காக பல்வேறு வழக்குகளில் மாறி மாறி ஆஜராவது வழக்கம்தான். ஆனால் நடுநிலை அறிவுரையாளராக இருப்பவர்கள் அப்படி செயல்பட முடியாது. ஆனால் சுரேஷ் ஏற்கெனவே தயாதேவதாசுக்கு ஆதரவாக வாதாடியதை மறைத்து விட்டார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு