95 சதவிகித உறுப்பினர்கள் வருகை! பரபரப்பில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்

பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று, சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் கூட உள்ளது. கூட்டத்துக்கு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 95 சதவிகிதம் பேர் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க இன்று வரை பல அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவந்தது. அதில், பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு, கட்சி மற்றும் ஆட்சியை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 

இரு அணிகளும் இணைந்த பிறகு எடுத்த முக்கிய முடிவு, பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டதைக் கூட்டுவதுதான். அதன்படி, செப்டம்பர் 12-ம் தேதி பொதுக்குழு கூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இன்று நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைத் திரும்பப் பெற்று, கட்சியின் சின்னத்தை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், பொதுச் செயலாளர் பதவிலிருந்து சசிகலாவை நீக்குவது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  95 சதவிகித உறுப்பினர்கள், கூட்டத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!