'ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியில் இறங்கிவிட்டேன்' - பொதுக்குழுவுக்கு எதிராகக் கொந்தளித்த தினகரன் | Two days for governor to take action against the government, TTV dhinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (12/09/2017)

கடைசி தொடர்பு:14:05 (12/09/2017)

'ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியில் இறங்கிவிட்டேன்' - பொதுக்குழுவுக்கு எதிராகக் கொந்தளித்த தினகரன்

அ.தி.மு.க பொதுக்குழு குறித்து தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பார்த்தேன். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, கட்சியின் பொதுக்குழுவை பொதுச் செயலாளர்தான் கூட்ட முடியும். அவர் பணியாற்ற முடியாததால், துணை பொதுச் செயலாளர் நான்தான் கூட்ட முடியும். அவர்கள் கூட்டி இருப்பது பொதுக்குழுவே அல்ல. 

அவர்கள் எந்தத் தீர்மானம் நிறைவேற்றினாலும் அது சட்டப்படி செல்லாது என நேற்றே நீதிமன்றம் சொல்லிவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் இவர்கள் தீர்மானம் செல்லும். இவர்களைப் பதவியில் வைத்த சசிகலாவுக்கே இவர்கள் இத்தனை துரோகம் செய்கிறார்கள் என்றால், மக்களுக்கு இவர்கள் என்ன நல்லது செய்யப்போகிறார்கள் என்று மக்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்.
ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியில் நான் இறங்கிவிட்டேன். அம்மா இருந்த பொதுச் செயலாளர் பதவியில் யாரையும் இவர்களால் பார்க்க முடியவில்லை என்பதைப் போல, அவர் இருந்த முதலமைச்சர் பதவியில் இவர்கள் இருப்பதை எங்களாலும் பார்க்க முடியவில்லை. இந்த ஆட்சியை உன்னால்தான் மாற்ற முடியும் என்று மக்கள் எங்களிடம் தெரிவிக்கிறார்கள். இரண்டு துரோகமும் கூட்டணி வைத்துள்ளன. ஆட்சி முடிந்ததும் அனைவரும் எங்களிடம் வருவார்கள். 

நீட் தேர்வு போன்ற பல விஷயங்களில் இது அம்மா ஆட்சி  இல்லை என்பதை காட்டிவிட்டார்கள். திருப்பூருக்கு திருமண விழாவுக்கு சென்றபோது அங்கிருந்த கட்சியினர் இந்த ஆட்சியை தூக்கி எறியுங்கள் என்றார்கள்.

இந்த ஆட்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சில அமைச்சர்கள், நாங்கள் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ளதாகக் கூறுகிறார்கள். அவர்கள் தேர்தலைச் சந்தித்தால், டெபாசிட் கூட பெற மாட்டார்கள். தேர்தல் களத்தில் எங்களுக்கும் தி.மு.க.வு -க்கும் தான் போட்டி. ஆளுநர் இரண்டு நாளில் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன். இல்லையென்றால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை. தேர்தல் நடந்தால் உன்மையான அ.தி.மு.க யார் என்பது தெரியவரும். கட்சியை காப்பற்றுவதற்கு எந்த ஒரு முடிவையையும் எடுக்க  எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.