Published:Updated:

கருணாநிதியின் பலம்... இணையத்தின் வீரியம்... விறுவிறுக்கும் டிஜிட்டல் தி.மு.க..!

கருணாநிதியின் பலம்... இணையத்தின் வீரியம்... விறுவிறுக்கும் டிஜிட்டல் தி.மு.க..!
கருணாநிதியின் பலம்... இணையத்தின் வீரியம்... விறுவிறுக்கும் டிஜிட்டல் தி.மு.க..!

கருணாநிதியின் பலம்... இணையத்தின் வீரியம்... விறுவிறுக்கும் டிஜிட்டல் தி.மு.க..!

மிழக அரசியலில் எம்.எல்.ஏ-க்கள் வெறும் எண்ணிக்கைகளாக மாறிவிட்டார்கள். மக்கள் பிரதிநிதிகள் மந்தை ஆடுகளைப்போல் சொகுசு விடுதிகளில் வைத்து 'பராமரிக்கப்படுகிறார்கள்'. தங்களுக்கு நல்லது செய்வார்கள் என சட்டமன்றத்திற்கு இவர்களை அனுப்பிவைத்த மக்கள், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தயாராகும் அளவுக்கு தங்களின் ஆட்டத்தை எல்லை மீறி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க-வின் அனைத்து அணியினரும்.

இந்தநேரத்தில், “வயதும், உடல்நிலையும் தடையாக இல்லாமல் போயிருந்தால் கருணாநிதி இந்நேரம் தமிழக அரசியலைக் கபடி ஆடுகளமாக மாற்றிக் காட்டியிருப்பார்” என ஆருடங்கள் சொல்கிறார்கள் பலர். அவர்களே, “தமிழக அரசியல் களத்தைத் துார்வார வேண்டிய இந்தநேரத்தில் ஏரி குளங்கள் துார் வாரப்படாமல் இருக்கிறன” என ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின். 'இதற்கெல்லாம் அவர் சரிப்பட்டு வரமாட்டார்' எனவும் பகடி செய்கிறார்கள் ஸ்டாலினை நோக்கி. என்றாலும், “அ.தி.மு.க-வின் இரு அணிகளின் அரசியலை உண்மையில் ஸ்டாலின் உற்றுநோக்கித்தான் வருகிறார்" என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். உள்கட்சிக் குழப்பத்தில் ஆளும்கட்சி சந்தித்துவரும் பிரச்னைகளை கவனித்துவரும் அவர், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்காததற்குக் காரணம் குட்டையில் இருப்பது மீனல்ல; திமிங்கலம் என அவர் நன்கு தெரிந்து வைத்திருப்பதுதான். ஆம். பி.ஜே.பி. எனும் திமிங்கலம். 

அன்று, சசிகலாவிடம் தேவையான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ-க்கள் இருந்தபோதிலும் தங்கள் வசதிக்காக அரசியலமைப்புச் சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகும்வரை காத்திருந்தது கவர்னர் மாளிகை. இன்று... தொடர்ந்து இந்த அதிகார ஆட்டத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லாத எண்ணிக்கையில் ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இருப்பதை வெளிப்படையாக மீடியாக்கள் எழுதித் தள்ளுகின்றன. எண்ணிக்கையோடு பெயர்களையும் பட்டியலிட்டு அ.தி.மு.க-வின் இன்னொரு அணியும், எதிர்க்கட்சியான தி.மு.க-வும் கவர்னருக்கு மனு கொடுத்தும், அது உள்கட்சிப் பிரச்னை என எந்தவித குழப்பமும் இன்றிச் சொல்கிறார் கவர்னர். 

இப்போது சபாநாயகர் தனபாலின் வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி தரப்பு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சட்டமன்றத்தில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து விடாதபடி தகுதியிழப்பு செய்துள்ளனர். 

"தமிழக அரசியலில் நிலவும் இந்த அசாதாரண சூழலில், தி.மு.க சத்தமின்றி தன் பலத்தைக் கூட்டும் வேலையில் இறங்கிவிட்டது. ஒருபக்கம் இன்றைய அரசியல் சூழலுக்கு தக்கபடி எதிர்வினையாற்றிவரும் அதே சூழலில் தங்களின் பழைய பலத்தை இன்றைய தலைமுறைக்குத் தக்கபடி புதுப்பித்துக் கொள்ளும் வேலையிலும் சத்தமின்றி இறங்கியுள்ளது" என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள். அதன் முதல்கட்டமாக தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை வலுவாக்கும் முயற்சியில் அக்கட்சியின் இறங்கியுள்ளனர்" அவர்கள். 

இன்றைய அரசியல் சூழலில், மோடி முதல் மூவேந்தர் முன்னேற்றக்கழகம் வரை நம்பியிருப்பது சமூக வலைதள பிரசாரங்களைத்தான். இந்திய அரசியலில் மோடி இத்தனை விஸ்வரூபம் எடுத்ததற்குக் காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர் கைக்கொண்ட சமூக வலைதள பிரசார யுக்திதான். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிலும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக கட்சிகளும் அந்த யுக்தியைக் கையிலெடுத்தன. குறிப்பாக தி.மு.க-வும் சமுக வலைதள பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியது. முதுமை காரணமாக அந்தத் தேர்தலில், கருணாநிதி அனைத்துத் தொகுதிகளுக்கும் செல்ல முடியாமல் ஓய்வெடுக்க, 234 தொகுதிகளிலும் ஸ்டாலின் பம்பரமாகச் சுற்றிவந்தார்.

ஆட்டோவில் சவாரி செய்தார். பொதுமக்களோடு சேர்ந்து தெருவோரக் கடைகளில் டீ குடித்தார். அரசியல் களத்திற்கே உரிய வெண்ணிற அடையை களைந்துவிட்டு பலவண்ண நிறங்களில் பேன்ட், சர்ட் அணிந்து பரபரப்பு ஏற்படுத்தினார். 360 டிகிரி பிரமாண்ட மேடைகளில் அவர் மட்டும் நின்று ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டங்களுக்கு நிகராக டஃப் கொடுத்தார். இந்தப் பிரசார யுக்தியின் பின்னணியில் நின்றவர்கள், மோடியின் வெற்றிக்கு காரணமான அதே குழுவினர்தான்.

அத்தனை முயற்சிகளுக்குப் பின்னும் தி.மு.க., ஆட்சியமைக்கக் கூடிய அளவிற்கு தொகுதிகளைப் பெறமுடியாமல் தோல்வியையே தழுவியது. டிஜிட்டல் பிரசாரத்தினால் கொஞ்சம் கௌரவமான தோல்வி எனலாம். அதே சமயம் மேலோட்டமான இந்த பிரசாரம் வெற்றிக்கு கைகொடுக்காது என்பதையும் உணர்ந்த தி.மு.க. இப்போது தனது ஐ.டி. பிரிவு என்கிற தகவல் தொழில்நுட்பப் பிரிவை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது. ஐ.டி. பிரிவு என்பது வெறுமனே பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதற்கான தெழில்நுட்ப வசதி என்பதைத்தாண்டி, அதைக் கட்சியின் பிரசாரத்திற்கான பொக்கிஷமாக மாற்ற திட்டமிட்டுள்ளது தி.மு.க. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தும்வகையில் அந்தப் பிரிவை மாற்றியமைக்க உள்ளதாகச் சொல்கிறார்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள். 

வெறுமனே மீடியாக்கள் மற்றும் மக்களுடனான தொடர்பைத் தாண்டி, கட்சியின் முதற்கட்டத்தலைவர்கள் முதல் உள்ளுர் பேச்சாளர்கள் வரை மக்களுடன் பேச வேண்டிய விஷயங்களை, அதிகார மையங்களில் வைக்கவேண்டிய விவாதங்களை எதிர்காலத்தில் இந்த அணிதான் முடிவு செய்யும் என்கிறார்கள் அவர்கள். தி.மு.க-வின் எதிர்காலத்தை முடிவுசெய்யப்போவது இந்த ஐ.டி பிரிவுதான் என்பதுபோன்று அந்தப் பிரிவின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் தி.மு.க. தலைமை வடிவமைத்துள்ளது. 

தி.மு.க. ஐ.டி. பிரிவின் செயலாளராக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜனின் மகன். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றவர். பாரம்பர்ய அரசியல் பின்புலம் கொண்டவர் என்றாலும், இவர் நேரடி அரசியலில் இயங்கியதில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில்தான் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.. தி.மு.க என்ற பெரிய கட்சியின் எதிர்கால வெற்றியை நிர்ணயிக்கப்போகும் தகவல் தொழில்நுட்பப் பிரிவை வழிநடத்துவதற்கு பலரின் பெயரையும் யோசித்து, இறுதியாக இவரை முடிவு செய்ததாம் தி.மு.க. தலைமை. பாரம்பர்யமான ஒரு அரசியல்வாதியை இந்தப் பொறுப்புக்கு நியமிக்காமல் அமெரிக்காவில் பயின்ற ஒருவரை நியமித்ததில் இருந்தே இந்த அணியின் செயல்பாட்டைக் கணிக்க முடியும். கார்பரேட் நிறுவனத் தொடர்புடைய இவர் ஐ.டி பிரிவை அதே 'சிஸ்டமேடிக்' அணுகுமுறையோடு நடத்துவார் என்கிறார்கள். 

இந்தக் குழுவில் தற்போது புதிதாக இணைந்துள்ள பத்திரிகையாளர் கே.பார்த்திபனிடம் பேசியபோது, “தமிழகத்தில் 1967-ம் ஆண்டில் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை வீழ்த்தி, தி.மு.க. தமிழகத்தில் அரியணையில் ஏற முக்கியக் காரணம், 'மக்களை சந்தி, மக்களோடு இரு, மக்களின் பிரச்னைகளைப் பேசு' என்ற அண்ணாவின் உறுதியான கொள்கைகள்தான். மக்களோடு இருந்து அவர்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்ததுதான் கட்சித் தொடங்கிய 18 வருடங்களில் தி.மு.க.-வை ஆட்சியில் அமர்த்தியது. மக்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள அண்ணா பயன்படுத்திய முதல் யுக்தி, பத்திரிகைகள்!... என்னதான் மேடைகளில் கைதட்டல் ஒலி விண்ணைப்பிளக்கும் அளவுக்கு ஒரு தலைவர் பேசினாலும், அது அங்குள்ள மக்களைத்தாண்டி செல்லாது என்பதை அண்ணா உணர்ந்திருந்தார்.

அதனால்தான், பத்திரிகைகளை அண்ணா நடத்தினார். அது தமிழகத்தின் சந்துபொந்தில் பேசிய தி.மு.க. தலைவர்களின் பேச்சையும், தமிழகம் முழுக்க கொண்டு சேர்த்தது. அவர் வழியில் தி.மு.க. தளகர்த்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பெயர்களில் பத்திரிகைகள் நடத்தினார்கள். கட்சியின் நடவடிக்கை, தலைவர்களின் பேச்சுகளை அந்தப் பத்திரிகைகள் மக்களிடம் அப்போது கொண்டு சேர்த்தன. பத்திரிகைகள் மூலமாக மக்களோடு ஏற்படுத்திக் கொண்ட தொடர்புதான் தி.மு.க-வின் பெரும்பலமாக அப்போது கூறப்பட்டது. அண்ணாவின் 'திராவிட நாடு', கருணாநிதியின் 'முரசொலி' ஆகிய நாளிதழ்கள், மக்களோடு அந்தக் கட்சி நெருக்கமாவதற்கு முக்கிய பங்காற்றின. தொண்டர்களுக்கான கெஸட் போன்று முரசொலி இயங்கியது. 

பல லட்சம் தொண்டர்களைக்கொண்ட ஒரு கட்சியில் ஒவ்வொரு தொண்டனையும் கட்சியின் தலைமையோ அல்லது தலைவரோ நேரில் தொடர்புகொள்ள முடியாது. ஆனால், பத்திரிகைகள் அந்தப் பணியை செவ்வனே செய்தன. கட்சிப் பத்திரிகையை காசு கொடுத்து வாங்கி கட்சித் தலைமையின் நாடியை அதன் தொண்டர்கள் தெரிந்து கொள்வார்கள். டீக்கடையில் அரசியல் பேசும் தொண்டன் முதல் பொதுக்கூட்டத்தில் பேசப்போகும் கட்சித்தலைவர்கள்வரை அத்தனை பேருக்கும் முரசொலிதான் தி.மு.க-வின் முகமாகத் திகழ்ந்தது. கருணாநிதியின் அனல் பறக்கும் கட்டுரைகள், கடிதங்களைப் படித்து, தொண்டர்களும், தலைவர்களும் அதற்குத் தக்கபடி மேடையில் பேசுவார்கள். 

தற்போது வாசகர்களுக்கும், கட்சித்தொண்டர்களுக்கும் வாசிப்புப் பழக்கம் குறைந்துபோன இந்தக் காலகட்டத்தில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தொலைக்காட்சி சேனல்களை கையில் எடுத்துக் கொண்டு, அவற்றின் மூலம் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டன. பத்திரிகைகளைவிட தொலைக்காட்சி அலைவரிசைகள், வீடுகளில் உள்ள மக்களையும், தொண்டர்களையும் ஒருபடி எளிதாக சென்றடைந்து, கட்சிகளுக்கு பயன்பட்டு வருகின்றன. அதற்கு அடுத்தக்கட்டமாக, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் தேடிப்போய் விஷயங்களைக் கொண்டுசேர்ப்பதற்கான ஒரேவழி சமூக வலைதளங்கள் என்பதை தி.மு.க. உணர்ந்ததாலேயே ஐ.டி. பிரிவு உருவாக்கப்பட்டது. 

'ஸ்மார்ட் மொபைல் போன் இல்லாதவர்களே இந்தக்காலத்தில் யாரும் இல்லை' என்ற அளவுக்கு இளைய தலைமுறையினர் பெரும்பாலும் முகநுால், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற எல்லாவிதமான சமூக வலைதளங்களிலும் இயங்குகிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளை விடவும் மொபைல் போன் சிறந்த தகவல்தொடர்பு சாதனமாக மாறியுள்ளது. 

தி.மு.க. தகவல்தொழில்நுட்பப் பிரிவு, மற்ற கட்சிகளின் ஐ.டி. பிரிவைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டு, கட்சியின் கடந்த கால வரலாறு, துறைவாரியாக தமிழக, இந்திய அரசியல் தொடர்பான தகவல்கள் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தி.மு.க-வின் நிலைப்பாடு, கட்சி முன்னோடிகளின் வரலாறு உள்ளிட்டவற்றை சேமித்து வைத்து, இணையத்தில் வெளியிட்டுள்ளன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தி.மு.க-வின் இடத்தை தக்கவைப்பது மற்றும் கட்சியினருடன் நேரடித்தொடர்பில் இருக்க விரும்புவதே. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலா ஐ.டி. பிரிவில் இப்போது வேகமெடுத்திருக்கிறது” என்றார். 

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவருடன் பேசியபோது, "தொடர்ந்து இருமுறை தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமரும் வாய்ப்பை இழந்ததற்கு, அக்கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடமிருந்து விலகி நின்றதே காரணம். ஸ்டாலின் செயல்தலைவராக கட்சிப் பணியாற்றினாலும், அவரால் கலைஞரின் இடத்தை நிரப்ப முடியாது. கருணாநிதியின் செயல்பாடு அத்தகையது. கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தபோது, தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வட இந்திய அரசியலுடனும், அதன் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தார். மாநிலத்தில் கட்சி வலுவாக இருக்கவும், இந்திய அரசியலில் முக்கிய சக்தியாக தி.மு.க செயல்படவும் அதுவே காரணமாக அமைந்தது. ஆனால், ஸ்டாலின் தி.மு.க. தலைமைக்கு வந்தபின்  மாநில அரசியலைத் தாண்டி, கட்சியின் தொடர்பை விரிவுபடுத்திக் கொள்ளவில்லை. இது தி.மு.க-வுக்கு பெரும் பின்னடைவு. இதனைக் கருத்தில்கொண்டே தகவல் தொழில்நுட்பப் பிரிவை தற்போது அக்கட்சி கையில் எடுத்திருக்கிறது" என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “உதாரணத்திற்கு முக்கியமான ஒரு பிரச்னைக்கு தி.மு.க-வின் தன் நிலைப்பாட்டை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதோடு, அதை வடஇந்தியாவின் முக்கியத் தலைவர்களுக்கு டேக் செய்வது, ரீ-ட்வீட் செய்வதன் மூலம் ஒருமித்த கருத்துடைய கட்சியை அடையாளம் காண முடியும். இதன்மூலம் ஒரு விவகாரத்தில் கட்சியின் கொள்கை, அதற்கு ஆதரவான கட்சிகள், அதுதொடர்பான அடுத்தக் கட்ட நடவடிக்கை என ஒரு முக்கோணத் தொடர்பை ஏற்படுத்துவதே தி.மு.க-வின் திட்டம். தமிழக அரசியலின் முக்கியப் பிரச்னைகளில் தி.மு.க-வின் நிலைப்பாட்டை வடிவமைக்கப்போவது, அதன் ஐ.டி. பிரிவில் உள்ள குழுவே. கட்சியின் நிலைப்பாட்டை இந்தக் குழுவின் மூலம் அறிந்து, கட்சித்தலைவர்கள் முதல் தொண்டர்கள்வரை, அதனைக் கட்சியின் கருத்தாக தெரிவிப்பார்கள். இனி வருங்காலங்களில் தி.மு.க-வின் அரசியல் செயல்பாடு, இளைஞர்களைக் கவரும் விதத்தில் புதுவிதமாக இருக்கும்” என்றார்.

முதுமையினால் கருணாநிதி என்கிற பரபரப்பு அரசியல் தலைவர் முடங்கிக்கிடப்பதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஸ்டாலின் இட்டு நிரப்புவது தகவல் தொழில்நுட்ப பிரிவு என்ற ஒன்றின் கையில் மட்டும் இல்லை; அது ஸ்டாலினின் அயராத உழைப்பிலும் ஒளிந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு