அனிதா வீட்டிலும் முகம் சுளிக்க வைத்த ஜெ.தீபா பேரவை! குமுறும் ஊர் மக்கள் | Deepa's Attrocities in Anita village ...

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (23/09/2017)

கடைசி தொடர்பு:16:53 (23/09/2017)

அனிதா வீட்டிலும் முகம் சுளிக்க வைத்த ஜெ.தீபா பேரவை! குமுறும் ஊர் மக்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அந்த இடத்தை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்று அரசியல் களத்தில் பல கனவுகளோடு வலம் வந்துகொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர் அம்மா  பேரவையின் செயலாளர் தீபா. அரியலூர் மாணவி அனிதாவுக்கு ஆறுதல் சொல்லவந்த இடத்தில் தீபா நடந்துகொண்டவிதம் அந்தப் பகுதி மக்களை முகம்சுழிக்க வைத்ததோடு, கடும் விமர்சனத்துக்கும் ஆளாக்கியிருக்கிறது.

                   

முகம்சுழிப்புக்கு என்ன காரணம் என்று பொதுமக்களிடம் பேசினோம். "அனிதாவின் இறப்புக்குப் பிறகு அவர்களின் குடும்பத்தினரைப் பார்த்து ஜெ.தீபா ஆறுதல் சொல்லவந்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவர் இங்குவந்து பொதுக்கூட்டம் நடத்துவதைப் போன்று நடந்துகொண்டது சரியா" என்ற கேள்வியோடு பேசத் தொடங்கினார்கள்.

"பல அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்கள் பலரும் அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லிவிட்டு... வந்த இடம் தெரியாமல் சென்றார்கள். உதாரணத்துக்கு நடிகர் விஜய், யாருக்கும் தகவல் சொல்லாமல் காலையிலேயே அனிதாவின் வீட்டுக்கு வந்து, அவருடைய தந்தையின் அருகில் அமர்ந்து, 'அனிதாவுக்கு நானும் ஓர் அண்ணன்தான்' என அவர்களின் கையைப்பிடித்து மனம் உருகப் பேசினார். அவர் போகும்போது, 'உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னிடம் வாருங்கள்' என்று ஒரு போன் நம்பரையும் கொடுத்துவிட்டுத் தனியாளாகச் சென்றார். 

              ஜெ.தீபா

ஆனால் இந்த அம்மா தீபா, அனிதாவின் வீட்டுக்கு வருவதற்கு முதல்நாளே மீடியாக்கள் முதல் எல்லோருக்கும் தகவல் சொல்லி... பின்பு, 22 மாவட்டங்களில் உள்ள மாவட்டச் செயலாளர்களுக்கும் தகவல் தெரிவித்து... அவர்களும் வண்டி நிறைய கட்சி ஆள்களோடு வந்திறங்கி... மாநாட்டுக்கு முதல்வரை வரவேற்பதுபோல் வரவேற்று... அனிதாவின் வீட்டுக்குப் பந்தாவாக அழைத்துவந்தார்கள். அவர்கள் குழுமூர் வந்ததும்... தொண்டர்கள், 'தீபா அம்மா வாழ்க, அம்மாவின் வாரிசே வாழ்க வாழ்க' என்று போட்ட கோஷங்கள் அடங்குவதற்கே வெகுநேரமானது. 

                      ஜெ.தீபா

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பக்ரித் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு ஊருக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் அனிதா இறந்த அன்று வாணியம்பாடியில் பக்ரித் நிகழ்ச்சியை முடித்துவிட்டு என்னேரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அனிதாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக அரியலூருக்கு புறப்பட்டார். ஒரு கட்சியின் தலைவர் எந்த மாவட்டத்திற்கு செல்வதாக இருந்தாலும் அந்த மாவட்ட செயலாளருக்கு முதலில் தெரிவிப்பார்கள்.

இரண்டாவதாக அந்த கட்சியின் தொலைகாட்சிக்கு அழைப்பு விடுப்பார்கள். இதுதான் வழக்கம். இரண்டுபேருக்குமே தகவல் தெரிவிக்காமல் விஜயகாந்த் பெரம்பலூர் வந்துள்ளார். அனிதாவின் வீட்டுற்கு எப்படி போவது என்று வழி தெரியாமல் பிறகுதான், மாவட்டசெயலாளருக்கு போன் செய்து கேட்டுள்ளார். அதற்குள் வீட்டிலிருந்து அனிதாவின் உடலை எடுத்து விட்டார்கள் என்று சொன்னதும் சுடுகாட்டிலாவது அஞ்சலி செலுத்துவோம் என்று சென்றுள்ளார். அப்போது எந்த மீடியாக்களும் என்னை நோக்கிவரவேண்டாம். யாரும் கோஷம்போடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். அவர் சாதாரணமாக அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். அந்த மக்களே இவரை போன்ற ஒரு தலைவர் யாருமில்லை என்று புகழ்ந்தார்கள்.

                ஜெ.தீபா

 அதுமட்டுமல்லாமல், அனிதா வீட்டுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வெளியே வந்த அவர், கட்சித் தொண்டர்களிடம் பேசினார்; நிர்வாகிகளைத்  தனித்தனியே அழைத்து  ஆலோசித்தார்; அனிதாவின் வீட்டுக்கு அருகில் இருந்த மாடியில் ஏறித் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்...

மாவட்டச் செயலாளர்இப்படி  அனிதா வீட்டையே கட்சி மாநாடு நடக்கும் திடல்போல ஆக்கினார். ஓர் உயிரைப் பறிகொடுத்து ஒரு மாதம்கூட முடியாத நிலையில், அந்தக் குடும்பமே ஆதரவின்றிப் பரிதவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற நிகழ்வுகளை அரங்கேற்றுவது சரியா? அவர், அரசியல் செய்ய இதுதான் இடமா'' என்றனர் வேதனையுடன்.

இதுதொடர்பாகத் தீபா பேரவையின் அரியலூர் மாவட்டச் செயலாளர் வரதராஜனிடம் பேசினோம். "அனிதாவின் வீட்டுக்கு தீபா ஆறுதல் சொல்ல வருகிறார் என்று மூன்று நாள்களுக்கு முன்பே தெரியும். ஆனால், நான் யாரிடமும் சொல்லவில்லை; கூட்டமும் சேர்க்கவில்லை. ஜெயலலிதாபோலவே முகஜாடை இருப்பதால் தீபாவைப் பார்க்க மக்கள் கூடிவிட்டார்கள். அவ்வளவுதான்.

அனிதாவின் வீட்டுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தீபா வெளியே வந்ததபோது, அவர்களைப் பார்க்க வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்பட்டார்கள். அதனால்தான் அவர் மாடியில் நின்று தொண்டர்களைப் பார்த்து, கையசைத்து வணங்கினார். அந்த இடத்தில் செய்தது தவறுதான். ஆனால், தொண்டர்கள் நிர்ப்பந்தப்படுத்தியதால்தான் இந்த நிலைக்கு ஆளானோம்" என்று முடித்தார்.

ஆறுதல் சொல்லப்போன வீட்டுக்கு அட்ராசிட்டி எதற்கு?


டிரெண்டிங் @ விகடன்