Published:Updated:

 ''டெண்டுல்கரை பாராட்டிய மோடி..!''

 ''டெண்டுல்கரை பாராட்டிய மோடி..!''
 ''டெண்டுல்கரை பாராட்டிய மோடி..!''

'தூய்மையே சேவை' திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மத்திய அரசின் ‘தூய்மையே சேவை’ பிரசாரத்தின்கீழ், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மும்பை பாந்திரா தெருக்களில் நேற்று அதிகாலை துடைப்பம் ஏந்தி சுத்தம்செய்தார். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து, நிருபர்களின் கேள்விகளுக்கு டெண்டுல்கர் பதிலளித்தபோது, ''ஆங்காங்கே காணப்படும் அழுக்கு மற்றும் குப்பை காரணமாக நமது தாய் பூமியின் அழகு சீரழிவதைக் காணும்போது, எனக்கு வருத்தமாக இருக்கிறது.  நாம் பொதுவாக வீடுகளில் குப்பையைப் போட மாட்டோம். ஆனால், வெளியில் குப்பைகளைக் கொட்டுகிறோம். இது எனக்குப் பிடிக்காத வி‌ஷயம். ஆகையால், ஒவ்வொருவரும் ‘தூய்மையே சேவை’ பிரசாரத்தில் பங்கேற்று, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதன்மூலம் மும்பையின் அழகு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தேசமும் சுகாதாரத்துடன் காணப்படும். இது, நாட்டின் ஆரோக்கியத்துக்குத் துணை புரியும்'' என்றார்.

சச்சின் டெண்டுல்கர், துடைப்பம் ஏந்தி தெருக்களைச் சுத்தம் செய்ததை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், ''தூய்மை இந்தியா திட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்கும் இளைஞர்களைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்முடைய இளைஞர் சக்திகள் ஒன்று சேர்ந்து, தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தில், சச்சினின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. அவருடைய நடவடிக்கையினால், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஊக்கமடைவார்கள்'' என்று பாராட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த், பிரதமரின் இந்தத் திட்டத்தைப் பாராட்டியிருந்தார்.