Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவம்பர் 20-ல் ம.தி.மு.க சார்பில் மாநில சுயாட்சி மாநாடு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை சென்னை, தாயகத்தில் அவைத்தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வைகோ

* திராவிட இயக்கத்தின் 101 வது ஆண்டுத் துவக்க நாளான நவம்பர் 20-ல் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது என்றும், இம்மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை அழைப்பது என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்குவதற்கு செயல்திட்டங்களை வகுப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* இலங்ககைத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டும், தமிழ் இனப்படுகொலை நடத்திய கொடூரமான சிங்கள இனவாத அரசைப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்கவும் இலங்கைத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய வைகோ அவர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள ராணுவத்தைச் சேர்ந்த சரத் வீரசேகரா உள்ளிட்ட சிங்களவர்கள் வைகோவைச் சூழ்ந்துகொண்டு ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசுவதைத் தடை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தனர். ஐ.நா மன்றத்திலேயே இலங்கைத் தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் வகையில் வைகோவை தாக்குவதற்கு கைக்கூலிகளை ஏவிவிட்ட சிங்கள அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கப்பட்டது

* ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு உரையாற்றிய வைகோமீது  தாக்குதல் நடத்த தமிழ் இனப்படுகொலை நடத்திய முன்னாள் ராணுவத்தினர் சிலரை சிங்கள அரசு ஏவிவிட்டது. இந்திய நாட்டின் குடிமகனும் 24 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றியவருமான தமிழ் தேசிய இனத்தின் தலைவர் வைகோ அவர்களைத் தாக்க முயன்ற சிங்கள அரசுக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தைத் தெரிவிக்காதது வருத்தத்துக்கு உரியதாகும். இனியாவது மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு உரிய முறையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

*ஜெனிவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று கண்ணீரும் ரத்தமும் கலந்த இலங்கைத் தமிழர்களின் துயர வரலாற்றை எடுத்துக்கூறி நீதி கேட்ட வைகோமீது தாக்குதல் நடத்த சிங்கள முன்னாள் ராணுவத்தினரை இலங்கை அரசு ஏவி விட்டது. சிங்கள அரசின் இச்செயலைக் கண்டித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement