எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கில் தினகரன் தரப்பு வாதம் என்ன? | We are not opposing TN government only Edappadi: T.T.V.Dinakaran Lawyer Singvi argued in Chennai High court

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (04/10/2017)

கடைசி தொடர்பு:08:56 (05/10/2017)

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கில் தினகரன் தரப்பு வாதம் என்ன?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, "தங்கள் தரப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத்தான் எதிர்க்கிறார்களே தவிர, இந்த ஆட்சியை அல்ல" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

இந்த வாதத்தைப் பார்க்கும்போது 'படையப்பா' படத்தில் ஒரு வசனம்தான் நம் நினைவுக்கு வருகிறது. "மாப்பிள்ளை அவர்தான்; ஆனா, அவர் போட்டிருக்கிற சட்டை என்னோடது" என்று ரஜினிகாந்த் கூறுவார். அதுபோல், நாங்கள் எடப்பாடி தலைமையிலான ஆட்சியை எதிர்க்கவில்லை; ஆனால், முதல்வரைத்தான் மாற்ற வேண்டும் என்று அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர் தினகரன் தரப்பினர்.

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் களேபரங்களுக்கு மத்தியில், எடப்பாடி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் இணைந்து, பொதுக்குழுவையும் நடத்தினர். ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர். "எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தவர்களுடன் இணைந்து செயல்படும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும்; எடப்பாடிமீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்" என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மனு அளித்தனர். இதனால், கொறடா பரிந்துரையின்பேரில், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் நடவடிக்கை எடுத்தார். 

தங்களை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் உத்தரவிடுமாறு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது, தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கொறடா சமர்ப்பித்த மனுவில் எந்தக் கையெழுத்தும் இல்லை என்றும், அதன் அடிப்படையில் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்றும், கொறடா அளித்த புகாரின் நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.

எடப்பாடி பழனிசாமிமேலும் எடப்பாடிக்குத்தான் எதிர்ப்பே தவிர, இந்த ஆட்சிக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஏற்கெனவே ஆளுநரிடம் அளித்த மனுவிலும் தாங்கள் இந்தக் கருத்தையே வலியுறுத்தியதாக வாதத்தின்போது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் சபாநாயகர் நடுநிலை வகிக்கவில்லை; முதல்வர் உத்தரவின்பேரில் 18 பேரையும் அவர் தகுதிநீக்கம் செய்துள்ளார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மீதான புகாரில் சபாநாயகர், விளக்கம்கூட கோரவில்லை என்றும் சிங்வி வாதிட்டார்.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்குக்கு முன், தகுதிநீக்கத்தை ரத்துசெய்யும் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தகுதிநீக்கம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை தள்ளிவைக்கப்படும் என்று உயர்நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 

"முதல்வரைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்; ஆட்சியை அல்ல" என்பது தினகரன் தரப்பினரின் கருத்தாக உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக வேறு ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்தாலும், அவர்கள் தினகரனுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. தவிர, தி.மு.க சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இந்த அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என்றும், எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளில் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்தே அரசியல்களம் தெளிவடையுமா? அல்லது மேலும் குழப்பம் அடையுமா? என்பது தெரியவரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்