கேரளாவில் கம்யூனிஸ்ட் ஊர்வலத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு! | In CPM procession workers was attacked with country bombs

வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (09/10/2017)

கடைசி தொடர்பு:08:01 (09/10/2017)

கேரளாவில் கம்யூனிஸ்ட் ஊர்வலத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கம்யூனிஸ்ட் ஊர்வலத்தில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் நான்கு காவலர்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். 

கேரளா

கேரளாவில், தற்போது கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்துவருகிறது. இந்த ஆட்சியில், அரசியல் சார்ந்த கொலைகள் நடைபெறுவதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டிவருகிறது. இதற்காக, நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தியது. இதே நாளில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில், 200 பேர் வரை பங்கேற்றதாக காவல்துறையினர் கூறினர். ஊர்வலம் பானூர் என்னும் இடத்தை அடைந்ததும், மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென கற்களால் தாக்கினர். பின்னர், நாட்டுவெடிகுண்டுகளும் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கம்யூனிஸ்ட் ஊர்வலம் பாதியில் தடைபட்டது. 

இந்தத் தாக்குதலில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேர், நான்கு காவல்துறையினர் என மொத்தம் ஒன்பது பேர் காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறை சார்பில், 'இந்தத் தாக்குதலில்  ஒன்பது பேர் காயமடைந்தனர். எனினும் பெரிய அளவில் காயங்கள் இல்லை. இந்தச் சம்பவத்துக்கு, பாரதிய ஜனதா அல்லது ஆர். எஸ்.எஸ்  காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக'த் தெரிவித்தனர்.