Election bannerElection banner
Published:Updated:

சேலம்: `தேர்தல் சுயநலத்துக்காக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு!’ - எம்.பி பார்த்திபன் காட்டம்

பா.ம.க
பா.ம.க ( எம்.விஜயகுமார் )

`எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 70 சதவிகித வன்னியர் இன மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஓட்டு போடவில்லையென்றால் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற முடியாது.’

``எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 70 சதவிகித வன்னியர் இன மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஓட்டுப் போடவில்லையென்றால் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற முடியாது. அதனால் தேர்தல் சுயநலத்துக்காக இந்த உள் ஒதுக்கீடு வழங்கியிருக்கிறார்'' என்கிறார் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சட்டசபையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கும் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றினார். அதையடுத்து பா.ம.க தலைவர் ராமதாஸ் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதாகத் தெரிவிக்கிறார். அவருடைய மகனும், பா.ம.க இளைஞரணித் தலைவருமான அன்புமணி முதல்வரைச் சந்தித்து நன்றி கூறுகிறார். தமிழகம் முழுவதும் பா.ம.க-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிவருகிறார்கள். ஆனால், ``இது தேர்தல் ஏமாற்று வேலை’’ என்கிறார் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்.

இது பற்றி சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபனிடம் பேசியபோது, ``தமிழகத்தில் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும் வன்னியர் சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவந்தோம். அதற்கு முதன்முதலில் முத்தாய்ப்பாக 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி பிள்ளையார்சுழி போட்டவர் மறைந்த தலைவர் கலைஞர்.

அவர் வழித்தோன்றலான ஸ்டாலின், விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் வன்னியர் சமுதாய மக்களுக்கு தி.மு.க ஆட்சி அமைந்ததும் உள் ஒதுக்கீடு வழங்குவதாக தெரிவித்தார். வன்னிய சமுதாய மக்களின் பிரதிநிதியாகச் சொல்லிக்கொள்ளும் மருத்துவர் ராமதாஸ் அதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி உள் ஒதுக்கீடு அறிவித்திருப்பதை வரவேற்கிறார். இது எந்தவிதத்தில் நியாயம்?

எம்.பி பார்த்திபன்
எம்.பி பார்த்திபன்

உண்மையில், வன்னியர் சமுதாய மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்திருந்தால், எங்கள் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தபோதே உள் ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சி முடியும் தறுவாயில் அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. தேர்தலுக்காகப் போடும் போலி நாடகம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 70 சதவிகிதம் வன்னியர் இன மக்கள் இருக்கிறார்கள். அவர்கல் ஓட்டுப் போடவில்லையென்றால், எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற முடியாது. அதனால் தேர்தல் சுயநலத்துக்காக இந்த உள் ஒதுக்கீடு வழங்கியிருக்கிறார். இதை வன்னிய சமுதாய மக்கள் நம்ப மாட்டார்கள்.

உண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கும், மருத்துவர் அய்யாவுக்கும் வன்னிய சமுதாய மக்கள் மீது அக்கறை இல்லை. சமூகத்தில் பெரும்பான்மையாக வாழும் வன்னியர் சமுதாய மக்கள் பொருளாதாரரீதியாகவும், அரசு வேலை வாய்ப்புகளிலும் பின்தங்கியே இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தலைவர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியரின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவார். எது எப்படியிருந்தாலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் இயக்கமாக தி.மு.க-வும், தலைவர் ஸ்டாலினும் இருப்பார்கள்'' என்றார்.

இது பற்றி பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள், ``வன்னியர் சமுதாயத்தைவைத்து அரசியல் பிழைப்பு நடத்தக்கூடியவர் பார்த்திபன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய உண்மைத் தலைவர், உத்தம தலைவர் எங்கள் மருத்துவர் அய்யா. அவரின் போராட்டத்தின் மூலமாக மறைந்த தலைவர் கலைஞர் 108 சாதிகளைச் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கி எங்களை ஏமாற்றிவிட்டார்.

அருள்
அருள்

அதைத் தொடர்ந்து எங்களுக்கு சமூகநீதி கிடைக்க மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தொடர்ந்து போராடிவந்தார். சமூகத்தில் இருக்கும் உண்மைநிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக் கூறிய பிறகு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் அரசியல் இல்லை. சமூகநீதிதான் இருக்கிறது. என்றென்றும் வன்னிய சமுதாய மக்கள் மருத்துவர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறது'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு