ஓராண்டுக்குப் பிறகு முரசொலிக்கு வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி! மகிழ்ச்சியில் தொண்டர்கள் | After one year time DMK head karunanithi visited murasoli office

வெளியிடப்பட்ட நேரம்: 22:35 (19/10/2017)

கடைசி தொடர்பு:09:09 (20/10/2017)

ஓராண்டுக்குப் பிறகு முரசொலிக்கு வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி! மகிழ்ச்சியில் தொண்டர்கள்

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை காரணமாக தொடர் ஓய்வில் இருந்துவந்தார். எந்தப் பொது நிகழ்ச்சிக்கும் அவர் போகாமல் இருந்துவந்தார். முரசொலி நாளிதழின் பவள விழாவில்கூட கலந்துகொள்ளும் நிலையில் அவர் உடல் நிலை சரிஇல்லாமல் இருந்துவந்தது. 

கருணாநிதி

அவர் உடல் நிலைகுறித்து வதந்திகளும் வந்த வண்ணம் இருந்தன. முதலில், மிகவும் மோசமான நிலையில் இருந்த அவரது உடல்நிலை,  கடந்த சில நாள்களாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னர், கடுமையான ஞாபக மறதியால் அவதிப்பட்ட கருணாநிதி, தற்போது நன்றாகத் தேறிவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்னர், தனது கொள்ளுப் பேரனிடம் இருக்கும் வீடியோ பதிவில், அவர் சிரித்துக் கொஞ்சி விளையாடியதைப் பார்த்திருப்போம். 

இன்று மாலை, திடீரென யாரும் எதிர்பாராத நிகழ்வாக, தி.மு.க தலைவர் கருணாநிதி, சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் முரசொலி அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், துரை முருகன், வேலு, பொன்முடி உட்பட தி.மு.க-வினரும் குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர். 

கடந்த மாதம் நடைபெற்ற முரசொலி பவள விழாவின் தொடர்ச்சியாக, சென்னை முரசொலி அலுவலகத்தில் முரசொலி கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி நிறைவுற்றாலும், இன்று கருணாநிதி கண்காட்சியைப் பார்வையிட வந்தார். அலுவலகம் முழுவதும் இருந்த புகைப்படங்களைப் பார்வையிட்ட அவர், சுமார் 20 நிமிடத்துக்கு மேல் அங்கிருந்தார்.

கருணாநிதி

 பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கருணாநிதி, கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார். இல்லம் அருகே அவரது கார் சென்றபோது, அவர் முகத்தில் புன்சிரிப்பு இருந்தது. தனது கைகளைத் தானே அசைக்கவும் செய்தார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பிறகு, பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவந்தார். இத்தனை காலம் கழித்து தி.மு.க தலைவர் முரசொலி அலுவலகம் வந்தது தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.