Published:Updated:

‘‘விவசாயமும் இல்லை; வேலையும் இல்லை!”

ஜவ்வாது மக்களுக்கு விடிவுகாலம் எப்போது?

ந்திர போலீஸாரால் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடே அதிர்ந்து கிடக்கிறது. நாலா பக்கமும் ஆந்திர அரசுக்கு நெருக்கடி உருவாகியிருக்கிறது. தமிழகம் முழுக்க ஆந்திர அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில், இவர்கள் ஏன் மரம் வெட்ட போனார்கள்? தெரிந்துதானே போகிறார்கள்? இவர்கள் பக்கமும் தவறு இருக்கிறது என்றும் சிலர் ஆதங்கக் குரல் எழுப்புகிறார்கள்.
இவர்கள் எப்படி அங்கே போனார்கள்? யார் அழைத்துச் செல்கிறார்கள்? படிப்பறிவில்லாத மக்கள்  ஆந்திரா வரை செல்லும் நிலைமைக்கு என்ன காரணம்? இப்படி இன்னும் பல நீண்ட கேள்விகள்... எல்லாவற்றுக்கும் விடைதேடி சித்தேரி மலைக்குள் புகுந்தோம். 

கடந்த 10-ம் தேதி, 8 கிலோ மீட்டர் கரடுமுரடான மலைப் பாதையைக் கடந்து அரச நத்தம் கிராமத்தைச் சென்றடைந்தபோது மாலை 5 மணி. இறந்துபோன ஏழுபேரின் சடலங்களும் கொண்டுவரப்பட்டபோது இருந்த அந்தப் பரபரப்பு அடங்கிப்போய் மயான சோகத்தோடு காட்சியளித்தது கிராமம்.

எதிர்ப்பட்ட ஒரு சிறுவனிடம், இறந்தவர்களின் வீடுகளுக்கு வழி கேட்டுவிட்டு, அவனிடம் பேச்சுக்கொடுத்தோம். ‘‘நான் மலைக்குக் கீழே உள்ள பள்ளிக்கூடத்துல 11-ம் வகுப்பு படிக்கிறேன். இங்க யாருக்கும் நிரந்தரமா வேலை இல்லை. வெளியூருக்கு வேலைக்குப் போனாதான் வாழ்க்கைய நடத்த முடியும். அப்படி வெளியூருக்குக் கூலி வேலைக்குப் போகும்போது, அங்க கிடைக்கிற பழக்கத்த வெச்சி எங்கெல்லாம் வேலை கிடைக்குதோ அங்கெல்லாம் வேலைக்குப் போவாங்க. அப்படி போறவங்கள, பணத்த காமிச்சி, இது மாதிரி மரம்வெட்ட அழைச்சிட்டுப் போயிடுவாங்க. ஊருலயும் அதை யார்கிட்டேயும் சொல்ல மாட்டாங்க. வீட்லகூட ஏதாவது பொய் சொல்லிட்டுத்தான் போவாங்க. ஏன்னா அவுங்களுக்கு அதைவிட்டா வேற வழி இல்லை. நீங்க போய் கேட்டால்கூட சொல்ல மாட்டாங்க’’ என்று சொல்லி சில வீடுகளை அடையாளம் காட்டினான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘‘விவசாயமும் இல்லை; வேலையும் இல்லை!”

அந்த வீடுகளுக்குச் சென்று விசாரித்தபோது அந்தச் சிறுவன் சொன்னதுதான் நடந்தது. ‘நான் எல்லாம் போனதே இல்லை’ என்றே எல்லோரும் பதில் சொன்னார்கள். அரச நத்தத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரிடம் அதைப் பற்றி விசாரித்தோம். ‘‘முன்பெல்லாம் இந்த ஊர்ல விவசாயத்தைதான் நம்பி இருந்தோம். கொஞ்சநாள் விவசாயம்... கொஞ்சநாள் கூலி வேலை... இப்படித்தான் வாழ்க்கையை ஓட்டுவோம். மூணு நாலு வருஷமாவே ரொம்ப வறட்சி. இங்க விளையுற சாமை, கேழ்வரகைக்கூட விளைவிக்க

‘‘விவசாயமும் இல்லை; வேலையும் இல்லை!”

முடியலை. மழை தண்ணி இல்லை. அதனால இந்த மலையில பத்து பைசாவுக்குக்கூட எங்களுக்கு வேலை இல்லை. ஒரு குடும்பத்துல புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமா சேர்ந்து கோயம்புத்தூர், கேரளா, ஈரோடுனு கூலி வேலைக்குப் போய் பத்து, இருபது நாள் தங்கி வேலை பார்ப்பாங்க. அப்புறம் மலைக்கு வந்து ரெண்டுநாள் இருந்துட்டு திரும்பவும் வேலைக்குப் போவாங்க. இதுல பொண்டாட்டி இல்லாம தனியா வேலைக்குப் போற ஆம்பளைங்களை, குறிவெச்சி, ‘நிறைய கூலி தர்றோம்.

மூணுவேளையும் கறிசோறு போடுறோம்’னு சொல்லி... யாருன்னே தெரியாத சிலபேர் வேலைக்குக் கூப்பிடுவாங்களாம். அத நம்பி இவுங்களும் போவாங்க. பெயின்ட் அடிக்கிற வேலை, கல் உடைக்கிற வேலை என அது இதுனு சொல்லித்தான் அழைச்சிக்கிட்டுப் போவாங்க. பாதி தூரம் அழைச்சிட்டு போயிட்டுதான் மரம் வெட்டணும்னு சொல்வாங்க. யாராவது, ‘நான் அந்த வேலைக்கெல்லாம் வரலை’னு சொன்னாக்கூட, ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை வராது. அனுமதி வாங்கித்தான் வெட்டுறோம்’னு சொல்லி அழைச்சிட்டுப் போய் மரம் வெட்ட வைப்பாங்க. ஒரு கிலோ வெட்டுனா 250 ரூபாய் கூலியாம். வெட்டுறதுக்கு மட்டுமில்லை. அதைத் தூக்கிக்கிட்டுப் போய் அவுங்க சொல்ற இடத்துல போட்டாத்தான் அந்தக் கூலியைக் கொடுப்பாங்க. சில நேரத்துல, அந்தக் கூலியைக்கூட கொடுக்காம ஏமாத்தி துரத்தி விட்டுடுவாங்க. ஜவ்வாது மலையிலே இருந்துதான் இங்க வேலைக்கு ஆட்களைக் கூப்பிட்டுகிட்டுப் போவாங்க. இங்கிருந்து போறவங்க வெறும் கூலிங்க. அவுங்களுக்கு ஒண்ணும் தெரியாது. அழைச்சிக்கிட்டு போனவனெல்லாம் தப்பிச்சிகிட்டான். அப்பாவி சனங்களை சுட்டுப்புட்டானுங்க’’ என்று ஆதங்கத்தோடு சொன்னார்.

அடுத்ததாக மோகன் என்பவரிடம் பேசினோம். ‘‘எங்க ஊர்ல முன்பெல்லாம் இதுமாதிரி நடந்தது கிடையாது. சில வருஷமாத்தான் இப்படி போறானுங்க. அதுமாதிரி போறவங்க யாரும் வீட்ல உண்மைய சொல்றதில்லை. பெயின்ட் அடிக்க போறேன், கேரளாவுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க. அவுங்களுக்குத் தேவை, வேலையும் கூலியும்தான். யார் யாரையோ நம்பி இப்படி போறாங்க. அங்க போனவுடனேயே மரம் வெட்டணும்னு சொல்லி வெட்டவெக்கிறாங்க. இதுமாதிரி வேலைக்கு ஆள் கூட்டிக்கிட்டு போறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவுங்க ஒவ்வொரு கிராமத்திலேயும் யாரையாவது முக்கியமான ஆளைப் பிடிச்சி, பத்து பதினைஞ்சு பேரை ஏத்துவாங்க. இப்படி ஒவ்வொரு ஊர்லயிருந்தும் 60, 70 பேரை ஏத்துவாங்களாம். இதெல்லாம் நான் நேர்ல போய் பார்த்தது கிடையாது. பேசிக்கிறதை வெச்சி சொல்றேன்’’ என்றார்.

‘‘விவசாயமும் இல்லை; வேலையும் இல்லை!”

இதுதொடர்பாகப் பேசிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொருளாளரும் அரூர் எம்.எல்.ஏ-வுமான டெல்லிபாபு, ‘‘இதற்கு முன்பே ஆந்திர அரசு 5 பேரை சுட்டுக்கொன்று உள்ளது. 1,000 பேரை சிறையில் அடைத்துள்ளது. இப்போது நிகழ்த்தியிருக்கும் கொடூரம் மனித உரிமை மீறலின் உச்சம். உண்மையில், அவர்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. கல் வேலை, பெயின்ட் வேலை என்று பொய் சொல்லி வெறும் கூலித்தொழிலாளர்களாக இங்கிருந்து கூட்டிச்செல்லப்பட்டு அங்கு மரம் வெட்டுவதற்காகக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சித்தேரியில் இருந்து போன எல்லோரும் பழங்குடியினர்தான். ஏன் பழங்குடியின மக்களை மரம்வெட்ட தேர்வு செய்கிறார்கள் என்றால், அவர்கள்தான் மரங்களை வெட்டி தூக்கிக்கொண்டு பத்து பதினைந்து கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடக்க முடியும். காடுகள் அவர்களுக்குப் பழக்கப்பட்டது என்பதால்தான், இதற்கெல்லாம் காரணம், சித்தேரி மலைப்பகுதியில் அந்த மக்களுக்கு எந்தவிதமான வாழ்வாதாரமும் இல்லாததுதான்.

இங்கு விளையக்கூடிய ராகி, கம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தப் பகுதிக்குக் கொண்டுவந்தால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். இங்கு இவர்களுக்கான வாழ்வாதாரத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்தால்தான் இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்’’ என்கிறார் ஒரு கோரிக்கையுடன்.

விடிவுகாலம் பிறக்கட்டும்.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: வி.சதீஸ்குமார்