Published:Updated:

எரியும் குழந்தை... விரியும் சந்தேகம்...

திசைமாறும் விழுப்புரம் விவகாரம்!

தவழும் குழந்தைகளைத் தழுவும் ‘மர்ம தீ’, விடைசொல்ல முடியாத விபரீதமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் நெடிமொழியனூர் கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் - ராஜேஸ்வரி தம்பதியருக்கு நர்மதா, ராகுல், ஜெயராமச்சந்திரன் என மூன்று குழந்தைகள். கடந்த 2013-ம் ஆண்டு இவர்களின் இரண்டாவது குழந்தை ராகுல் பிறந்தபோது, தீ எனும் துயரமும் ஒட்டிக்கொண்டது. ராகுலின் உடலில் தானாகத் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்தக் குடும்பத்தை மட்டுமல்லாமல், தமிழகத்தையே உலுக்கியது. ‘ஸ்பான்டேனியஸ் ஹுயூமன் கம்ப்யூஷன்’ என்ற அரிய நோயால் ராகுல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் அது நிரூபணமாகாததால், தீப்பிடித்ததற்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

காற்றில், தீ ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்குப் பரவுவதுபோல, இந்தத் தம்பதிக்குப் பிறந்த மூன்றாவது குழந்தையின் உடலிலும் தீப்பற்றி எரிவது, அவர்களை மேலும் கலங்கவைத்தது. ராகுலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அதே மருத்துவமனையில், மூன்றாவது குழந்தைக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டு, தற்போது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். காயங்கள் ஆறினாலும் தீப்பிடிப்பதற்கான மர்மமும் விலகாமலேயே உள்ளது.

‘‘பிறந்து 10 நாட்களே ஆன என்னோட மூணாவது புள்ள கால்ல தீ பிடிச்சி எரிஞ்சபோது, அவனுக்கு நாங்க பெயர்கூட வெக்கலை. சென்னை மருத்துவமனை பதிவுலகூட ‘ராஜேஸ்வரி குழந்தைனுதான் பதிஞ்சாங்க. டீன், நாராயண பாபு சார்தான் குழந்தைக்கு ‘ஜெயராமச்சந்திரன்’னு அழகான பெயர் வெச்சாரு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எரியும் குழந்தை... விரியும் சந்தேகம்...

மூணு மாத சிகிச்சைக்குப் பிறகு இப்போ தீக்காயம் முழுசா குணமாயிடுச்சு. குழந்தையோட இடது கால் கட்டை விரல்ல அதிகமான காயம் இருந்ததால, அந்த விரல எடுத்துட்டாங்க. எங்களைப் பரிசோதிச்ச மனோதத்துவ டாக்டர், ஆட்கள் யாரோதான் குழந்தைக்குத் தீ வைக்குறதா ரிப்போர்ட் கொடுத்திருக்காரு. விரோதியா இருந்தாலும் குழந்தைக்குத் தீ வைக்க யாருக்காவது மனசு வருமா? குழந்தைக்குத் தானா தீப்பிடிக்கற நோய் இல்லைனு சொல்லிட்டாங்க. ஆனா, ஏன் தீப்பிடிக்குதுனு கண்டுபிடிச்சு சொல்லாதது தான் குழப்பமா இருக்கு.
எங்க குடும்பத்த தீய சக்தி பிடிச்சிருக்குனு சொல்லி செங்கல் சூளைக்கு வேலைக்குப் போய்க்கிட்டிருந்த என் வீட்டுக்காரரை வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு சரியான வேலை இல்லாததால அரசாங்கம் ஏதாவது தொழில் தொடங்க உதவி பண்ணணும்’’ என்று தழுதழுத்தார் ராஜேஸ்வரி.

சென்னை கீழ்ப்பாக்கம் குழந்தைகள் நல மருத்துவமனை டீன் நாராயண பாபு, ‘‘குழந்தைக்கு 40-க்கும் மேற்பட்ட அதிநவீன பரிசோதனைகளை செய்துவிட்டோம். தானாக எரிவதற்கான எந்தச் சாத்தியக்கூறுகளும் இல்லை. எதனால் குழந்தை எரிகிறது என்பதும் தெரியவில்லை’’ என்றார் சுருக்கமாக.

‘‘குழந்தையின் பெற்றோர்கள், குழந்தையைக் காட்டி பல சலுகைகளையும் உதவிகளையும் பெற்று வருவதை நாம் கவனிக்க வேண்டும். மருத்துவர்கள் குழப்பமில்லாத ஒரு முடிவை கூறினால்தான், அரசு மேற்கொண்டு விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும். இல்லை என்றால், கடைசிவரை குழந்தை எரிவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவே முடியாது’’ என்கிறார் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்புக் குழு அமைப்பின் செயலாளர் கிரிஜா குமரபாபு.

இதுகுறித்து நெடிமொழியனூர் கிராம மக்கள், ‘‘கர்ணனின் குடும்பத்துக்கு ஏற்கெனவே இரண்டு பசுமை வீடுகளை அரசு வழங்கியுள்ளது. கோயில் குருக்களுக்கு கிராமப் பஞ்சாயத்து சார்பில் ஒதுக்கிய நிலத்தை, கர்ணனுக்கு வழங்கப் போவதாக அதிகாரிகள் கூறியதால், எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் கர்ணனின் சொந்த ஊரான பரங்கினியில் பறவைகள் பண்ணை அமைக்க நிலம் ஒதுக்கியுள்ளார்கள். தற்போது மேலும் தாட்கோ வங்கி மூலம் கர்ணனுக்கு ‘டாடா ஏஸ்’ வண்டி வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ராகுல் காலில் தீப்பிடித்ததால், அவனால் சரியாக நடக்க முடியவில்லை. தலையில் ஒரு பக்கம் முடியே வளரவில்லை. மூணாவது குழந்தைக்குக் கால் கட்டை விரலையே எடுக்க வேண்டிய நிலைமை. ஒரு பாவமும் அறியாத குழந்தைகள் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று அரசு கண்டுபிடிக்காமல், உதவிகளை மட்டும் வழங்கிக்கொண்டிருப்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’’ என்றார்கள்.

குழந்தையின் உடலில் தானாகத் தீப்பிடிக்க எந்த மருத்துவக் காரணமும் இல்லை என்கிறபோது, அதன் தீர்வுதான் என்ன? அந்தக் குழந்தையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது!

- ஆ.நந்தகுமார்
படம்: தே.சிலம்பரசன்