Published:Updated:

காவிரியில் அனுப்புவது சுத்தமானது அல்ல... கழிவுநீர் !

குமட்டவைக்கும் நிஜம் !நேரடி ரிப்போர்ட்

‘‘நல்ல தண்ணீர் வந்தாச்சு... குடத்தை நல்லா கழுவி பிடி...!” இதுதான் 4 கோடி தமிழ் மக்கள் காவிரி குடிநீர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. தமிழ் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் காவிரி ஆறு தூய்மையானதுதானா என்பதை நேரடியாகக் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டபோது, அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தன. காவிரி நீரை குடிப்பது குளியலறை கழிவு நீரை சுத்திகரித்து குடிப்பதற்கு சமம் என்கிறார்கள், கர்நாடக - தமிழக எல்லையோர மக்கள்.

கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் உருவாகும் காவிரி, தென்னிந்திய நதிகளில் தூய்மையானதாகவும் ஜீவநதியாகவும் கருதப்படுகிறது. இது கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு புறநகர், சாம்ராஜ் நகர் வழியாகத் தமிழகத்துக்குள் புகுந்து தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது.
இதற்கு பல துணை ஆறுகள் இருந்தாலும் ஆர்க்காவதி ஆறு, காவிரி துணை ஆறுகளில் குறிப்பிடத்தகுந்தது.

இந்த ஆர்க்காவதி, கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி கோலார், பெங்களூர் வழியாக ராம்நகர் மாவட்டம் கனகபுராவில் இருந்து 58 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து 20 கிலோ மீட்டர் பயணித்தால் தொட்டகாலஹள்ளி என்ற மலைக் கிராமம் இருக்கிறது. அங்கிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில்தான் காவிரியும், அர்க்காவதியும் சந்திக்கும் சங்கமா என்ற இடம் உள்ளது. சங்கமாவில் இருந்துதான் அசுத்தமான அர்க்காவதி ஆற்று நீரும், தூய்மையான காவிரி ஆற்று நீரும் கலந்து தமிழகத்துக்குப் பயணிக்கின்றன. அதன் பிறகுதான் அந்த நீர் கர்நாடகாவின் அடர்ந்த வனப்பகுதிக்குள் புகுந்து நேரடியாகத் தமிழகத்தின் ஒகேனக்கலில் வந்து விழுகிறது. அதனால் இந்த நீரை கர்நாடக மக்கள் பயன்படுத்துவதில்லை. தமிழக மக்கள்தான் பயன்படுத்துகிறார்கள். இது தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களின் விவசாயத்துக்கும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காவிரியில் அனுப்புவது சுத்தமானது அல்ல... கழிவுநீர் !

ஆர்க்காவதி ஆறு, காவிரியில் கலப்பதால் நிகழும் ஆபத்து பற்றி அந்த ஆற்றுப்படுகையில் வசிக்கும் கர்நாடக பொதுமக்களிடம் கேட்டோம். முத்து என்பவர், ‘‘என் சொந்த ஊரே சங்கமாதான். எனக்குத் திருமணம் ஆகி குழந்தைகளோடு இங்கேதான் இருக்கேன். காவிரியும் ஆர்க்காவதியும் கலக்குற இடம்தான் சங்கமா. ஆர்க்காவதி ஆறு, நான் சின்ன பையனா இருந்தபோது நல்லா சுத்தமா இருந்துச்சு. அப்புறம் இந்த ஆத்துல தண்ணீர் குறைஞ்சுபோச்சு. பெங்களூரு, டெவலப்மென்ட் ஆனதாலயும் கனகபுரா, பிடுதி, கெங்கேரி, ராம்நகர் போன்றவை டவுனாக மாறியதாலும் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறும் கலீஜ் நீரு (கழிவுநீர்)தான் இந்த ஆத்துல ஓடுது. இந்த ஆத்துல அதிக அளவு பெங்களூரு பாத்ரூம் தண்ணிதான் வருது. அதனால இந்த ஆர்க்காவதி ஆத்த, நாங்க குலச்சு நீரு கனீவே (கழிவு நீர் ஓடை)னுதான் சொல்வோம். இந்த ஆத்து நீரை குளிக்கவோ, குடிக்கவோ முடியாது. மீறி இந்த நீரைக் குடிச்சா வியாதி வரும். குளிச்சா தோல் அரிப்பு வரும். ஆர்க்காவதி ஆறு, காவிரியில் கலப்பதற்கு முன்பே காவிரி ஆத்துக்கு வரும் தண்ணியத்தான் நாங்க குடிக்கிறோம்’’ என்றார்.

காவிரியில் அனுப்புவது சுத்தமானது அல்ல... கழிவுநீர் !

சங்கமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆர்க்காவதி ஆற்றுப்படுகையில் உள்ள ஹொக்கே தொட்டி பகுதியைச் சேர்ந்த தாஸ், ‘‘என் போட்டோ பத்திரிகையில் வந்தால், எங்க ஊர்க்காரங்க திட்டுவாங்க. அதனால் போட்டோ எடுக்காமல் இருந்தால், பேசுறேன்’’ என்ற கண்டிஷனோடு பேசினார். ‘‘எங்க ஊர் வழியாக இந்த ஆறு ஓடினாலும் இந்த நீரை நாங்கள் பயன்படுத்துறதில்லை. விவசாயத்துக்குப் பயன்படுத்துனாகூட செடி, கொடிகள் கருகிப்போகுது. ஆடு, மாடு குடிச்சா வயிற்றோட்டம், கோமாரி போன்ற நோய் வருது. இந்த ஆத்துல ஒரு சில குறிப்பிட்ட மீன்கள் மட்டும்தான் இருக்கு. அதுவும் அடிக்கடி செத்து மிதக்கும். சத்தியமா சொல்றேன். இந்த நீர், காவிரியில் கலப்பது விஷத்தைக் கலக்குறதுக்கு சமம். சங்கமத்தில் கலந்த பிறகு இந்த நீர், தமிழக எல்லைக்குள் புகுந்து விடுவதால், காவிரி ஆத்துல கலந்த கழிவு நீரை தமிழக மக்கள்தான் பயன்படுத்துறாங்க.

காவிரியில் அனுப்புவது சுத்தமானது அல்ல... கழிவுநீர் !

என்னைப் பொறுத்தவரை எல்லா மக்களும் சமம். பாவம், இந்த நீரை எப்படித்தான் தமிழக மக்கள் குடிக்கிறாங்களோ தெரியலை. இந்த நீரை தொடர்ந்து குடிச்சா நிச்சயம் வியாதிதான் வரும். கர்நாடகத்தில் காவிரி ஆறு மட்டும்தான் இன்னும் ஓரளவுக்கு நல்லா இருக்கு. இதையெல்லாம்விட இன்னொரு மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், மைசூரு கே.ஆர்.எஸ் டேமிலிருந்து வெளியேற்றப்படும் தூய்மையான காவிரி ஆறும், அரப்பலே டேமிலிருந்து வெளியேற்றப்படும் ஆர்க்காவதி ஆற்றின் கழிவு நீரும்தான் சங்கமாவில் கலக்குது. தமிழ்நாட்டு மக்கள் காவிரியில தண்ணி கேட்டு போராடினா கே.ஆர்.எஸ் டேமிலிருந்து வரும் காவிரியை நிறுத்திவிட்டு, அரப்பலே டேமிலிருந்து வெளியேறும் கழிவு நீரை இரவு நேரத்துல திறந்துவிட்டுடுவாங்க. தமிழக மக்கள் காவிரி தண்ணியக் கேட்டு போராடினா கழிவுநீரை

காவிரியில் அனுப்புவது சுத்தமானது அல்ல... கழிவுநீர் !

கொடுக்குறது கர்நாடக அரசு. இது என்னைப் போன்ற நடுநிலை சிந்தனையாளர்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது’’ என்றார் வருத்தத்துடன்.

‘‘பெங்களூரு கழிவுநீர், சிறிய அளவில் ஆர்க்காவதி நதியில் கலந்து காவிரியிலும் கலப்பது உண்மைதான். இதனால் கர்நாடக மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மற்றபடி காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக விடுவதில்லை. தீவிர நடவடிக்கை மூலம் கழிவுநீர் நதிகளில் கலப்பதை தடுத்து நிறுத்துவோம்’’ என்றார் கர்நாடக மாநில சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி. 

பெங்களூரு மேயர் சாந்தகுமாரியிடம் கேட்டபோது, ‘‘பெங்களூரு சிட்டி முழுவதும் ஒரு நாளைக்கு 2,000 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 1,500 மில்லியன் லிட்டர் வேஸ்டேஜ் நீராக வெளியேறுகிறது. இந்த நீர் கழிவுநீர் சேமிப்புத் திட்டத்தின் மூலம் சேமிக்கப்படுகிறது. நதிகளில் கலப்பதில்லை. அதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். ராம்நகர், பிடதி பகுதிகளில் கலக்கலாம். அதற்கும் பெங்களூரு கார்ப்பரேஷனுக்கும் சம்பந்தமில்லை. பெங்களூரு சிட்டி கழிவுநீர் எங்காவது நதிகளில் கலக்கிறது என்பதை ஆதாரத்தோடு கொடுத்தால் உடனே நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

இதுபற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா சட்டசபையில் பேசும்போது, ‘‘இந்த வருடம் முதல் பெங்களூரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கோலார், சிக்பள்ளாப்பூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்குத் திருப்பி விடப்படும்’’ என்று கூறி இருக்கிறார்.

மேயர் இப்படிச் சொன்னாலும் கழிவுநீர் காவிரியில் கலப்பதைப் பார்க்க முடிகிறது. இதை தமிழக மக்கள் குடிக்கிறார்கள் என்பதை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது!

- வீ.கே.ரமேஷ்,
படங்கள்: ரமேஷ் கந்தசாமி