Published:Updated:

டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்துவதற்குப் பணமா?

ஓர் உஷார் ரிப்போர்ட் !

‘உங்க வீட்டுக்கு டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த வந்திருக்கோம்’ என்று சொல்லும் ஊழியர்கள், மின் மீட்டர் பொருத்தியபிறகு வீட்டு உரிமையாளர்களிடம், ‘100 ரூபா கொடுங்க’ என்கின்றனர். குடியிருப்புப் பகுதிகளில், நாள்தோறும் மின் ஊழியர்கள் செய்யும் அரங்கேற்றம் இது!

மின் விநியோக முறைகளை மேம்படுத்தவும் மின்துறைக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளைக் குறைக்கவும் மத்திய மின்சார ஆணையம், மின்மேம்பாட்டு சீர்திருத்தக் கொள்கையை 2007-ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி, தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் மின் மீட்டர்களுக்குப் (கறுப்பு - எலக்ட்ரோ மெக்கானிக்கல்) பதிலாக நவீன டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 3 கோடியே 52 லட்சம் மின் இணைப்புகளில், 1 கோடியே 72 லட்சம் இணைப்புகள் வீடுகளுக்கானது. இந்த இணைப்புகளில் உள்ள பழைய மீட்டர்களை மாற்றும் பணி 50 சதவிகிதம் முடிந்துவிட்டது. டிஜிட்டல் மின் மீட்டர்களைப் பொருத்தும் மின்வாரிய ஊழியர்கள், ‘மாமூல்’ கேட்பதாக ஏராளமான புகார்கள் வந்ததால், தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஜனவரி 25-ம் தேதி ‘பணம் கொடுக்க வேண்டாம்’ என்று அறிக்கை வெளியிட்டது. ஆனாலும், மின் ஊழியர்கள் ‘பலர்’ கைநீட்டுவது இன்னும் நிற்கவில்லை என்ற புகார் தொடர்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்துவதற்குப் பணமா?

‘தேவை இயக்கம்’ ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, ‘‘சென்னையில் எங்கள் வீட்டில் டிஜிட்டல் மின் மீட்டர் மாட்டிவிட்டு ரூ.100 கேட்டுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள், உடனே எனக்கு போன் செய்து தகவலைச் சொன்னார்கள். நான் அந்த மின்வாரிய ஊழியரோடு பேசினேன். அதன் பிறகு அவர் பணம் கேட்கவில்லை. ஆனால், டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த, தமிழகம் முழுவதும் ஏரியாவைப் பொறுத்து ரூ.50 முதல் ரூ.100 வரை கேட்கிறார்கள். இந்தத் தொகை மிகச்சிறியதாகத் தெரியலாம். ஆனால், மொத்தம் உள்ள 1,72,19,933 வீட்டு கனெக்‌ஷன்கள் எண்ணிக்கையில் பார்த்தால், மொத்த தொகை ரூ.85 கோடியைத் தாண்டும். இந்த விஷயத்தில் மட்டுமல்ல, மின்வாரியத்தில் பணம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பது இல்லை. புதிய இணைப்புகள் கொடுப்பது, பழுதானால் சரி செய்வது என்று ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ரேட் இருக்கிறது. மின்வாரியத்தில், கையூட்டு கேட்பது உரிமையாகவே ஆகிவிட்டது. ஒவ்வொரு ஏரியாவுக்கும் மின்தடைக்கு பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடுவதுபோல், அந்தந்த ஏரியாவுக்குரிய மின் மீட்டர் பொருத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் தயாராக இருப்பதுடன், மின் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க முடியும்’’ என்றார்.

மின்வாரிய அதிகாரிகள், ‘‘டிஜிட்டல் மின் மீட்டர், துல்லியமாக மின்நுகர்வைக் காட்டிவிடும். உங்கள் வீட்டுக்கு எத்தனை வோல்ட் மின்சாரம் வருகிறது என்பதை நுகர்வோரே கண்டறிந்து அதற்கேற்ப செயல்பட முடியும். மும்முனை இணைப்பு இருக்கும் வீடுகளிலும் மின் சப்ளை அளவை பார்த்துக்கொள்ளலாம். அதை வைத்து ஃபிரிட்ஜ், ஏ.சி போன்றவற்றுக்கு எந்த ஃபேஸ் சிறப்பானது என்பதை நுகர்வோரே தீர்மானிக்கலாம். செல்போன் சார்ஜர், நைட் ரூம் லைட் இன்டிகேட்டர், ஜீரோ வாட்ஸ் பல்பு, நைட் லேம்ப் ஆகியவற்றுக்குச் செலவாகும் மிகச்சிறிய அளவு மின் செலவீனத்தைக்கூட மிகத் துல்லியமாக டிஜிட்டல் மின் மீட்டர் கணக்கிடும். இதனால், மின்வாரியத்துக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும், காந்தம் மூலம் மின் மீட்டரில் எந்த தில்லுமுல்லும் செய்ய முடியாது.டிஜிட்டல் மின் மீட்டர், மின்வாரியத்துக்கும் நுகர்வோருக்கும் பாதுகாப்பானது. மின்வாரிய ஊழியர்களே வீட்டுக்கு வந்து இதைப் பொருத்தித் தருவார்கள். அதற்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இதற்கான செலவை மின்வாரியமே ஏற்கும். ஊழியர்களை உற்சாகப்படுத்த ஒரு மீட்டருக்கு 10 ரூபாயை மின்வாரியம் தருகிறது. அவர்களுக்குக் கூடுதலாகப் பணம் தரத் தேவையில்லை’’ என்றனர்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் விஜயன், ‘‘இலவசமாக மாற்றித்தர வேண்டியது மின்வாரியத்தின் கடமை. பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம். பணம் கேட்பவரிடம் அவரின்
அடையாள அட்டையை காட்டச் சொல்லுங்கள். தொடர்ந்து பணம் கேட்டால், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் கொடுக்கலாம். மேலும், 044-28520416, 28521327, 28521300 ஆகிய எண்களுக்கோ அல்லது adgp@tnebnet.org என்ற ஈமெயில் முகவரிக்கோ புகார் தெரிவிக்கலாம்’’ என்றார்.

கடமையைச் செய்ய ‘கை’ நீட்டலாமா?

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: க.தனசேகரன்