Published:Updated:

கேரளா vs தமிழகம்’... பெண்களைச் சீண்டுகிறதா ‘நீயா நானா’?’ - இயக்குநர் பதில்!

கேரளா vs தமிழகம்’... பெண்களைச் சீண்டுகிறதா ‘நீயா நானா’?’ - இயக்குநர் பதில்!
கேரளா vs தமிழகம்’... பெண்களைச் சீண்டுகிறதா ‘நீயா நானா’?’ - இயக்குநர் பதில்!

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா?' நிகழ்ச்சியில் எத்தனையோ நல்ல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் தலைப்பு, பெண்களிடையே கொதிப்பை உண்டாக்கியிருக்கிறது. 'தமிழ்நாட்டுப் பெண்கள் அழகா? கேரளப் பெண்கள் அழகா?' என்பதுதான் நாளைய நிகழ்ச்சியின் விவாதம். 

''அழகு என்பதை எதைவைத்துத் தீர்மானிக்கிறார்கள்? அழகான ஆடை, அணிகலன்கள் அணிந்தவர்கள் மட்டுமா அழகு? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு பருவத்தில் அழகுதான். பல் தோன்றாத வயதில் எச்சில் வடியச் சிரிக்கும் குழந்தையும் அழகுதான். பல் எல்லாம் விழுந்து பொக்கை வாயாகச் சிரிக்கும் கிழவியும் அழகுதான். ஒவ்வொரு தந்தைக்கும் மகள் அழகு. ஒவ்வொரு கணவருக்கும் மனைவி அழகு. ஒவ்வொரு அண்ணனுக்கும் தங்கை அழகுதானே? அவர்கள் தமிழ்நாடாக இருந்தால் என்ன? கேரளாவாக இருந்தால் என்ன?'' என்று கோபமும் ஆதங்கமுமாக தங்கள் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள் பெண்கள். இதுகுறித்து சில பெண்களிடம் பேசினோம். 

செல்வி (மனிதி அமைப்பினைச் சேர்ந்தவர்) : 

 ''இந்த மாதிரியான தலைப்பே தவறானது. ஒரு பெண்ணையோ, ஆணையோ அழகுனு ஒப்பிட்டுப் பார்க்கிறதே தவறான விஷயம். பெண்ணுக்குச் சமைக்கத் தெரியும் என்பதையே பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முன்னிறுத்தி காட்டுறாங்க. ஆனால், பல்வேறு துறைகளில் பெண்கள் சாதிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. அதெல்லாம் சரியாகப் பதிவாவதே இல்லை. இதுபோன்ற அழகு விஷயங்களைப் பார்க்கும் டீன்ஏஜ் பெண்கள், தங்களை மீண்டும் மீண்டும் அலங்கரித்துகொள்ள வேண்டும் என்ற மனநிலையால் தூண்டப்படுவார்கள். ஒரு நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சி, பெண்களின் திறமைகளை முன்னேற்றுவதாக இருக்கணும். இவங்களோ நிகழ்ச்சி நல்லா ரீச் ஆகணும்னு பெண்களை வியாபாரப் பொருளாகப் பயன்படுத்தறாங்க. விளம்பரத்தைப் பார்த்ததும், நாங்க அழகுனு பேசுறது மட்டுமே தப்புனு சொல்லை. தமிழ்நாடு, கேரளானு பிரிக்கிறதும் தப்புதான். பெண்கள் எல்லோருமே ஒண்ணுதான். கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உணவுப் பழக்கங்களிலிருந்து நிறைய வித்தியாசங்கள் இருக்கே. அதைப் பற்றி பேசலாமே. ஏன் அழகை முன்னிலைப்படுத்தறாங்க.'' 

சூர்யா, இயற்கை அங்காடி உரிமையாளர்: 

''டி.ஆர்.பியை அதிகப்படுத்துவதற்காக எந்தத் தலைப்பையும் எடுக்கலாம்... எப்படியும் பேசலாம்னு நினைக்கறாங்க. இதெல்லாம் பெரிய முட்டாள்தனம். 'நீயா நானா?' நிகழ்ச்சியில் எப்பவுமே காரசாரமா பேசிட்டு, கடைசியில் அறிவுரை சொல்வாங்க. அதேமாதிரி இந்த நிகழ்ச்சியிலும் பெண்களுக்கே அறிவுரைச் சொல்வாங்கன்னு நினைக்கிறேன். அறிவுரை சொல்லும் நீங்க ஏன் ஆடை, அணிகலன்கள், அழகு குறித்து பேசவைக்கறீங்க? இஷ்டத்துக்குப் பேசவிட்டுட்டு அப்புறம் அறிவுரை சொன்னால் சரியாப்போயிடுமா?'' 

திலகவதி, சட்டக் கல்லூரி மாணவி: 

''இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்ததே தப்பு. இதுக்கு எதிராக வழக்குத் தொடரலாம்னு இருக்கோம். பெண்களை எதைவெச்சு அழகுனு தீர்மானிக்கறாங்கன்னே தெரியலை. நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கு. அதைப் பற்றி பேசாமல், அழகு என்கிற வார்த்தைக்குள் பெண்களை அடைக்கப் பார்க்கிறதை கண்டிப்பா ஏற்றுக்கொள்ள முடியாது.'' 

இது குறித்து நீயா நானா நிகழ்ச்சியின் இணை இயக்குநர் திலீபனிடம் பேசிய போது,

"நாங்க நீயா நானாவில் பல பிரிவுகளுக்குக் கீழ் நிகழ்ச்சி பண்ணிட்டு இருக்கோம். அதுல ஒண்ணுதான் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலகலப்பான உரையாடல். நீயா நானா தலைப்புகளை மக்கள்கிட்ட இருந்துதான் எடுக்குறோம். மக்கள் ஒரு படத்தைப் பற்றி விவாதிக்குறாங்கனா அந்தப் படத்துல ஒரு விஷயம் இருக்கும். மக்கள் எந்த விஷயங்கள் பற்றி விவாதிக்குறாங்களோ அந்த விஷயத்தைதான் நாங்க தொலைக்காட்சி நிகழ்ச்சியா விவாதிக்கிறோம். அப்படிதான் நீட் தேர்வுக்கு தொடர்பாகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பல விவாதங்களை நடத்தியிருக்கோம். அழகோட வெவ்வேறு பரிமாறல் இல்லாம நம்முடைய வாழ்க்கை முழுமையடையாது. அழகை எளிமையா வர்ணிச்சிட முடியாது. அதுக்கும் சில வரைமுறைகள் இருக்கு. இந்த நிகழ்ச்சியும் அழகு ரசனை சார்ந்த ஒன்றுதான்' என்றார்.