Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’6 எம்.பி-க்கள்!’ எடப்பாடியின் அடுத்த குறி... தினகரனுக்கு நெருக்கடி!

தினகரன்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்ததுபோலவே, தினகரன் பின்னால் நிற்கும் 6 எம்.பி-க்களின் பதவிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தி தினகரனுக்கு அடுத்த ஷாக் கொடுக்க எடப்பாடி தரப்பு தயாராகிவருகிறது. 

ஆட்சியை லாகவமாகக் கொண்டுசெல்வதுபோலவே, அ.தி.மு.க என்ற கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இருந்துவருகிறது. ஏற்கெனவே மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி பின்னால் இருந்துவருகிறார்கள். ஆனாலும், தினகரன் பின்னால் கணிசமான அளவில் கட்சியினர் இருந்துவருவது எடப்பாடி பழனிசாமிக்கு உறுத்தலாகவே இருந்துவந்தது. மேலும், தினகரன் பின்னால் இருந்த எம்.எல்.ஏ-க்களைத் தன் வசப்படுத்த எடப்பாடி பழனிசாமி முயன்றும் அந்த முயற்சி முழுமையாகப் பலனளிக்கவில்லை. 

இதனால் தினகரன், தன் பின்னால் நிற்கும் எம்.எல்.ஏ-க்களை வைத்து எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் அல்லது ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று  முடிவு செய்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியோ ஆட்சியையும் தனது பதவியையும் காப்பாற்ற ஒரே வழி தினகரன் பின்னால் நிற்கும் எம்.எல்.ஏ-க்கள் பதவியைத் தகுதி நீக்கம் செய்வது ஒன்றுதான் வழி என்ற முடிவுக்கு வந்தார். சபாநாயர் மூலம் 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யவைத்து தனது பவரைத் தினகரனுக்கு உணர்த்தினார் எடப்பாடி. 'தகுதி நீக்கம் செல்லாது' என்று தினகரன் அணியினர் நீதிமன்றத்தை நாடினாலும், தற்போது அந்த 18 பேரும் எம்.எல்.ஏ-க்கள் என்ற தகுதியை இழந்த நிலையிலேயே இருக்கிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை எப்படியும் தங்கள் வசம் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உள்ளது எடப்பாடி தரப்பு. இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கலை ஏற்படுத்தி இரட்டை இலையை முடக்கும் திட்டத்தில் தினகரன் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில், தினகரன் அணியினர் இரண்டு புகார் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்கள். தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றபோது, தினகரன் அணியைச் சேர்ந்த எம்.பி நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டது எடப்பாடி தரப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், தினகரன் பின்னால் லோக்சபா உறுப்பினர்கள் மூன்று பேரும், ராஜ்யசபா உறுப்பினர்கள் மூன்று பேரும் உள்ளார்கள். தினரகன் பின்னால் நிற்கும் உறுப்பினர்கள் அனைவருமே, தினகரனுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள். இவர்கள் நாடாளுமன்றத்தில் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் கலந்துகொண்ட நவநீதகிருஷ்ணன்தான் அ.தி.மு.க-வின் ராஜ்யசபா குழுத் தலைவராக இருக்கிறார். இந்த நிலையில், அவர் நாடாளுமன்றத்தில் வேறு வகையில் சிக்கலை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. 

டெல்லி தேர்தல் ஆணையத்தின் விசாரணையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய எடப்பாடி - பன்னீர் அணியினர் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆலோசனையில் தினகரன் ஆதரவு எம்.பி-க்களிடம் முதலில் பேச்சுவார்ததை நடத்துவது; அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் முரண்டுபிடித்தால்,எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ததுபோல அவர்களுக்கும் சிக்கலை  ஏற்படுத்தலாம் என்று முடிவுசெய்துள்ளார்கள். அதற்குச் சட்டரீதியாகக் காரணத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். “பொதுக்குழுத் தீர்மானத்தின்படி சசிகலாவின் பதவியே செல்லாமல் போயுள்ளது. அதேபோல், தினகரன் அ.தி.மு.க-வின் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்று தேர்தல் ஆணையமே சொல்லிவிட்டது. பொறுப்பில் இல்லாத தினகரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது கட்சித்தாவல் தடைச் சட்டத்துக்குட்பட்டது” என்று சட்ட விதியை இவர்கள்மீது பாய்ச்சவுள்ளார்கள். 

பாராளுமன்றம்

தற்போது தினகரன் பின்னால், நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன், உதயக்குமார், செங்குட்டுவன், நாகராஜ் ஆகிய ஆறு உறுப்பினர்கள் உள்ளார்கள். ஆனால், இவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால், அது லோக்சபா  மற்றும் ராஜ்யசபாவின் சபாநாயகரால் மட்டுமே முடியும். அதற்கு முன்பு நவநீதகிருஷ்ணனிடம் இருக்கும் அ.தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற பதவியை மைத்ரேயன் வசம் ஒப்படைத்துவிட்டு, அவர் மூலமே சபாநாயகருக்குக் கடிதம் கொடுக்கும் திட்டத்தில் எடப்பாடி தரப்பு இப்போது இறங்கியுள்ளது. 

இந்தத் திட்டமே, தேர்தல் ஆணையத்தில் இந்த ஆறு உறுப்பினர்களும் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெறுவதற்காகத்தான் என்றும் எடப்பாடி அணியில் உள்ள நிர்வாகிகள் சொல்கிறார்கள். அதேநேரம், எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ததுபோல, எம்.பி-க்களையும் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்ய முடியாது. அதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன என்கிறார்கள் தினகரன் அணியினர். எடப்பாடியின் இந்த அரசியல் மூவ் தினகரன் தரப்புக்குக் கடும் அப்செட்டை ஒருபுறம் ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement