Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“425 பேர் போலி கையெழுத்து!” - தேர்தல் ஆணையத்தைக் கிறுகிறுக்க வைத்த தினகரன் அணி

தேர்தல் ஆணையம்

இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், பலரின் கையெழுத்துப் போலியாக இருப்பதாகத் தினகரன் தரப்புவைத்த வாதத்தினால்... அந்த வழக்கு இழுபறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அ.தி.மு.க-வின் கட்சி சின்னமான இரட்டை இலை விவகாரத்தில் வரும் 30-ம் தேதி அன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் இதுவரை மூன்றுகட்ட விசாரணை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நான்காவது கட்டமாக  நடைபெறவுள்ள விசாரணையில் முடிவு எட்டப்படும் என்று எடப்பாடி அணி எதிர்பார்த்து வருகிறது. ஆனால், தினகரன் அணி சார்பில் கடந்த 23-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யபட்ட இரண்டு புகார் மனுக்களினால், இரட்டை இலை வழக்கு விசாரணை இன்னும் நீடிக்கும் என்றே தெரிகிறது. இதற்கு முக்கியக் காரணமாகத் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி அணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தையே, தினகரன் அணி சந்தேகத்துக்கு உட்படுத்தியிருப்பதால் வழக்கு விசாரணை முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்.

கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யபட்டன. அதில், “அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஒருமனதாகச் சசிகலாவைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்ததை ரத்துசெய்தும், தினகரனின் நியமனம் செல்லாது என்றும் பொதுக்குழுவில் இயற்றபட்ட தீரமானத்துக்கு ஆதரவாகக் கையெழுத்திடப் பட்டிருக்கிறது” என அந்தப் பிரமாணப்பத்திரங்களைத் தாக்கல்  செய்தனர். 'இந்தப் பிரமாணப்பத்திரங்களை ஆவணமாக ஏற்றுக்கொண்டு இரட்டை இலைச் சின்னத்தை எங்கள் அணிக்குத் தர வேண்டும்' என்று எடப்பாடி - பன்னீர் அணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

தேர்தல் ஆணையத்தில் விசாரணை

இந்தப் பிரமாணப்பத்திரங்களே வலுவான ஆவணங்களாக இருப்பதால், இரட்டை இலைச் சின்னம் எப்படியும் தங்கள் வசம் வந்துவிடும் என்று எடப்பாடி - பன்னீர் தரப்பு முழுமையாக நம்பியது. இந்த நிலையில், அந்தப் பிரமாணப்பத்திரங்களை வைத்தே இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையத்தைக் கிறுகிறுக்க வைத்துள்ளது தினகரன் அணி. கடந்த 23-ம் தேதி அன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் தினகரன் சார்பில் அபிசேக் சிங்வி, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜர் ஆகினார்கள்.  அவர்கள் தேர்தல் ஆணையர்களிடம் வைத்த முக்கிய வாதமே, “பிரமாணப்பத்திரங்களை எதிர்தரப்பு ஆவணங்களாகத் தாக்கல் செய்துள்ளார்கள். ஆனால், அந்தப் பிரமாணப்பத்திரங்களில் போடப்பட்டிருக்கும் கையெழுத்தே போலியானவை என்று சம்பந்தப்பட்டவர்களே எங்களிடம் சொல்லியுள்ளார்கள். அதனால், பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்திட்டவர்களைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்கள். இதுதான், இரட்டை இலை விவகாரத்தில் இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

தினகரன் தரப்பு இந்த விவகாரத்தை எப்படிக் கையில் எடுத்தது என்று தினகரன் அணியினரிடம் கேட்டபோது, “எங்களுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதே எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 26-ம் தேதி அன்றுதான் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த ஸ்டாம்ப் பேப்பரே பிரின்ட் ஆகியுள்ளது. ஆனால், 25-ம் தேதியே நோட்டரி பப்ளிக் மூலம் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். அதாவது, முன்தேதியிட்டுக் கையெழுத்து வாங்கியதே மோசடிதான். அதில் பலர், 'நாங்கள் கையெழுத்தே போடவில்லை' என்று எங்களிடமே வந்து சொல்லியுள்ளார்கள். மேலும் பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்திட்டதாகச் சொல்லப்பட்டவர்களில் எட்டுப்பேர், நேரடியாக எங்களிடம் வந்தே 'நாங்கள் இந்தப் பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்திடவே இல்லை' என்று சொன்னபிறகுதான் இதில் மோசடி நடைபெற்றிருப்பதை நாங்கள் உறுதி செய்தோம்” என்கிறார்கள். 

அதேபோல், பொதுக்குழுவில் வைத்தும் பலரிடம் பிரமாணப்பத்திரங்களில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக இந்தக் கையெழுத்து வாங்கப்படுகிறது என்று யாரிடமும் சொல்லாமலே கையெழுத்து வாங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை 425 பேரின் பிரமாணப்பத்திரங்களில் போலியாகக் கையெழுத்துப் போடப்பட்டிருப்பதைத் தேர்தல் ஆணையத்திடம் தினகரன் அணியினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “போலி கையெழுத்துப் புகாரைத் தேர்தல் ஆணையம் முதலில் விசாணைக்கு எடுத்துக்கொண்ட பிறகே இரட்டை இலை வழக்கு குறித்து முடிவு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இரட்டை இலை

எடப்பாடி - பன்னீர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரங்களைத் தினகரன் தரப்பு கையில் வைத்துக்கொண்டு சம்பந்தபட்ட நபர்களிடம் சில நாள்களாகத் தனித்தனியாகப் பேசிவருகிறார்கள். அவர்கள்தான், “நாங்கள் கையெழுத்திடவே இல்லை” என்று சொன்னதும், அதையே புகாராகக் கொண்டு சென்று இரட்டை இலை வழக்கில் புதிய சிக்கலைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படுத்தியுள்ளார்கள் என்கிறார்கள். 

போலி கையெழுத்துப் புகாரை விசாரணைக்குத் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், நீதிமன்றத்தை நாடும் முடிவில் தினகரன் அணியினர் உள்ளார்கள். 30-ம் தேதி அன்று இறுதி விசாரணை என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தாலும், இந்தப் போலி புகார் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காமல், இரட்டை இலை வழக்கை முடித்துவைக்க முடியாத நிலை உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close