வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (28/10/2017)

கடைசி தொடர்பு:13:49 (28/10/2017)

கொசஸ்தலையாறு ஆக்கிரமிப்பு: களத்தில் கமல்

`தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுக உதாசினத்தால் வட சென்னைக்கு ஆபத்து. சென்னை- காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்த வேண்டும்' என்று கமல்ஹாசன் நேற்று ஒரு புதிய ட்வீட் பதிவுசெய்திருந்தார்.

மேலும் அந்த ட்வீட்டில் அவர், `கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின்  வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1,090 ஏக்கர் நிலத்தைச் சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம். வல்லூர் மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன.

இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாகப் போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான். பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணைய் முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன. காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கொசஸ்தலையின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தைச் சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

நில வியாபாரிகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையையும் உதவியையும் ஏழை மக்களுக்குக் கொடுக்காத எந்த அரசும் நல் ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைதான் ' என்று குறிப்பிட்டிருந்தார்.

கமலின் இந்த ட்விட் நேற்று பரபரப்பை ஏற்படுத்திருந்த நேரத்தில் இன்று நேரடியாகக் களத்துக்கே சென்று ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். எண்ணூர் கழிமுகம், சாம்பல்குளம் ஆகியப் பகுதிகளில் உள்ள மக்களிடம் அனல்மின் நிலையங்களிலிருந்து  கொட்டப்படும் சாம்பல் கழிவுகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

கமல் களத்தில் இறங்கி ஆய்வு செய்தபோது, சமுகச் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராம் உடனிருந்தார். இந்த ஆய்வைப் பற்றி விகடன் இதழில் கமல் எழுதிவரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில் விரிவாக எழுதவுள்ளார்.