இரட்டைஇலைச் சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு | two leaves issue, election commission may declare the decision today

வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (30/10/2017)

கடைசி தொடர்பு:11:06 (30/10/2017)

இரட்டைஇலைச் சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற வழக்கில், தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு வழங்கும் எனத் தெரிகிறது. 

அ.தி.மு.க-வின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அந்த அணி, பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா அணியாகப் பிரிந்தது.  பின்னர், பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு, பழனிசாமி- பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் சசிகலா தரப்பு இன்னொரு அணியாகவும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டிபோட்டனர். 

காலியாக இருக்கும் ஆர்.கே.நகருக்கான தேர்தல் மற்றும் நடைபெறாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றை விரைவில் நடத்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியது. அதனால், இரட்டை இலை தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க, கடந்த ஒரு மாதமாக விசாரணை  நடைபெற்று வந்தது. தினகரன் தரப்பிலிருந்து சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் இரட்டை இலைச் தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வருகிறது. இதில் பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜராக, மைத்ரேயன் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் சசிகலா தரப்பில் கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். 

விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், இரட்டை இலை யாருக்கு என்பதைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணை, டெல்லியில் இருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.