ஸ்டாலின் கோபப்படுங்கள் சீசன் - 2-வை தள்ளி வைத்த மழை சீசன்!

ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெற்றுவரும் குதிரைபேர ஆட்சியை அகற்றுவதற்காக, தான் மேற்கொள்ளவிருந்த எழுச்சிப் பயணம் பருவமழை காரணமாகத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகச் சில நாள்களுக்கு முன் அறிவித்தார். இந்தப் பயணத்தில் மண்டலவாரியாகப் பொதுக்கூட்டங்களை நடத்தவும், அந்தப் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய அளவிலான தலைவர்களை உரையாற்றவைப்பதற்கும் தி.மு.க. தலைமை திட்டமிட்டிருந்தது. நவம்பர் முதல் வாரத்தில் சென்னையில், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இந்தப் பயணத்தைத் தொடங்கிவைப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை ஆரம்பித்துவிட்டது. இதனால் இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்பதால், இந்த நேரத்தில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டால் மக்களைச் சந்திக்க முடியாது என்ற முடிவுக்கு தி.மு.க தரப்பு வந்துவிட்டது. 

எழுச்சிப் பயணத்தின் தேதியை மாற்றுவது குறித்து கடந்த வாரமே ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது பொங்கலுக்குப் பிறகு, இந்தப் பயணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று ஸ்டாலினிடம் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். அதற்கு, ஸ்டாலினும் ஓகே சொல்லியுள்ளார். இதற்கான முறையான அறிவிப்பையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத, குதிரைபேர அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எதிர்த்து மாநிலம் முழுவதும் மாபெரும் எழுச்சிப் பயணம் மேற்கொள்வேன் என்று அறிவித்து, நவம்பர் முதல் வாரத்தில் இந்தப் பயணத்தைத் தொடங்குவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளில் கழக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில்,வடகிழக்குப் பருவ மழையின் தாக்கம் திடீரென்று கடுமையாகி சென்னை மற்றும் புறநகர் மக்களும் கடலோர மாவட்ட மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். 

ஸ்டாலின்

ஒரு நாள் மழையையே சமாளிக்க முடியாத வகையில் குதிரைபேர அரசின் நிர்வாகம் செயலிழந்து, மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆகவே, மக்கள்படும் சிரமங்களைக் கருத்தில்கொண்டு,என்னுடைய எழுச்சிப் பயணம் தற்போதைக்கு வேறு ஒரு தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

நிர்வாகரீதியாகத் தோல்வியடைந்துவிட்ட இந்தக் குதிரைபேர ஆட்சியை நீக்கும் எழுச்சிப் பயணம் வேறு ஒரு தேதியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அப்போது நான் உங்களை எல்லாம் வந்து சந்திப்பேன் என்றும், தெரிவித்துக்கொள்ளும் அதே நேரத்தில், கழகத்தினர் அனைவரின் கவனமும் கனமழை பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணிகளிலேயே இருந்திட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நடைபெற்றுவரும் குதிரைபேர ஆட்சியை அகற்றுவதற்காகவே இந்த எழுச்சிப் பயணம் என்று ஸ்டாலின் வெளிப்படையாகவே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவும், அதற்கு உறுதுணையாக உள்ள பி.ஜே.பி-க்கு நெருக்கடி கொடுக்கவுமே இந்தப் பயணத்திட்டம் வகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!