'இதுதான் அமைச்சர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா?’ - துரைமுருகன் கிண்டல் | Duraimurugan ask questions to tamilnadu ministers regarding rain

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (01/11/2017)

கடைசி தொடர்பு:15:00 (01/11/2017)

'இதுதான் அமைச்சர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா?’ - துரைமுருகன் கிண்டல்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தற்போது நல்ல மழை பெய்துவருகிறது. இது மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது என அமைச்சர்கள் தெரிவித்துவந்தாலும், சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்குவதைத் தடுக்க முடியவில்லை. நகரின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

எதிர்க்கட்சிகள், தமிழக அரசு மழை விவகாரத்தில் சிறப்பாகச் செயப்படவில்லை எனும் குற்றச்சாட்டை தொடர்ந்து முன் வைத்தது. இந்நிலையில், தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குளங்கள், ஏரிகள் முறையாகத் தூர் வாரப்படவில்லை. தி.மு.க ஆட்சிக் காலத்தில், உலக வங்கியில் இருந்து நிதிபெற்று  மழைக்காலத்துக்கு முன்னரே குளங்கள் ஏரிகளைத் தூர் வாரினோம். ஆனால், தற்போது எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதே அமைச்சர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கிறது” என கிண்டலாகக் கூறினார்.