Published:Updated:

``கம்யூனிஸ்ட்கள் கரம் கோத்தால் மட்டும் புரட்சி வந்துவிடாது!" - தியாகு

``கம்யூனிஸ்ட்கள் கரம் கோத்தால் மட்டும் புரட்சி வந்துவிடாது!" - தியாகு
``கம்யூனிஸ்ட்கள் கரம் கோத்தால் மட்டும் புரட்சி வந்துவிடாது!" - தியாகு

``கம்யூனிஸ்ட்கள் கரம் கோத்தால் மட்டும் புரட்சி வந்துவிடாது!" - தியாகு

இங்கிலாந்துப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவை அந்தந்த நாடுகளின் நலன்களை மட்டும் சார்ந்தவை; அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமான சில உரிமைகளைப் பெற்றுத்தந்தவை; அந்த நாடுகளின் எல்லைகளுக்குள் மட்டும் அதிர்வை உண்டாக்கியவை. ஆனால், 1917-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி ரஷ்யாவில் லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி, ஒட்டுமொத்த மனித குலத்துக்கான நலனை முன்மொழிந்தது. நக்சலைட் வாழ்க்கை, தமிழ்த் தேசியச் செயல்பாடுகள், மனித உரிமைப் போராட்டங்கள் எனப் பொதுவாழ்க்கையில் தன்னை முழுமையாகக் கரைத்துக்கொண்டவர் தியாகு. இவர் தமிழ் உலகுக்கு அளித்த `மூலதனம்’ மொழிபெயர்ப்பு மிகப்பெரிய கொடையாகக் கருதப்படுகிறது. `சமூகநீதி தமிழ்த் தேசியம்’ இதழின் ஆசிரியரான அவரிடம் வைக்கப்பட்ட சில கேள்விகள் இவை...

`` `நவம்பர் புரட்சி'யை இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் கொண்டாடுறாங்க. அதுக்கும் இந்தியாவுக்கு என்ன தொடர்பு?''

`` `நவம்பர் புரட்சி',  உலகம் முழுக்க விடுதலைக்குப்  போராடின எல்லா தேசங்களுக்கும் ஊக்கம் கொடுத்துச்சு. புரட்சிக்குப் பிறகு நடந்த `கம்யூனிஸ்ட் அகிலம்'கிற மாநாட்டுல இந்தியாவிலிருந்து எம்.என்.ராய் கலந்துகிட்டார்.  நவம்பர் புரட்சியின் விளைவாகத்தான் உலகம் முழுக்கப் பொதுவுடமை இயக்கங்கள் தோன்றுச்சு. `அரோரா கப்பல் வேட்டின் ஓசைதான் எங்களுக்கு மார்க்ஸியத்தைக் கொண்டுசேர்த்தது'னு மாவோ சொல்வார். மாஸ்கோ ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல் `அரோரா'. அந்த வகையில் நவம்பர் புரட்சிக்குப் பிறகுதான் இந்தியாவுலயும் பொதுவுடைமை இயக்கம் தோன்றுச்சு. சிங்காரவேலர் இங்கே மே தினம் கொண்டாடினது, அலிப்பூர் சிறையில கம்யூனிஸ்டுகள் புதிய கட்சி தொடங்கினது எல்லாம் நவம்பர் புரட்சிக்குப் பிறகுதான். `நவம்பர் புரட்சி'ங்கிறது உலகத்துல ஒவ்வொரு நாட்டுக்கும் நெருக்கமானது. இந்தியாவுக்கு, கூடுதல் நெருக்கமானது.

வலதுசாரிகளும்கூட `மார்க்ஸியங்கிறது இறக்குமதி தத்துவம்'னு அதுக்கு எதிரா பிரசாரம் பண்றாங்க. இந்தியாவுல தோன்றின பௌத்த மதத்தை உலகத்துல பல நாடுகள் ஏத்துக்கிட்டிருக்காங்க. இந்தியாவுல தோன்றிய புத்தனுக்கு இங்கே என்ன வேலைன்னு யாரும் கேட்கலை. இங்கு உள்ளவர்கள் புத்தனுக்குத் தேசப்பற்று இல்லைனு சொல்லலை.

மின்சாரம், தொலைபேசி இவையெல்லாம் வெளிநாட்டுக்காரங்க கண்டுபிடிச்சதுதானே. அது எப்படிப் பொருந்துதுனு இவங்களுக்குக் கேள்வி வரலையே. ஆனா, சமூகத் தத்துவங்கள்னு வர்றப்போ மட்டும் இப்படிக் கேள்வி கேட்குறாங்க. உண்மையில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு வழிகாட்டக்கூடிய புரட்சி அது. மக்கள் நலன் சார்ந்து சில நலத்திட்டங்களை அனுபவிச்சு மக்களைத் தக்கவைக்கவேண்டிய  இடத்துக்கு முதலாளித்துவச் சக்திகளையே  நிர்பந்திச்ச புரட்சி அது. நவம்பர் புரட்சிங்கிறது கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, ஜனநாயகச் சக்திகள், தேசிய விடுதலைக்குப் போராடக்கூடிய எல்லா ஆற்றல்களும்னு சேர்ந்து நினைவுகூரவேண்டியது.''

``இந்தியாவுல கம்யூனிஸ்ட் கட்சிகள் பல வகையில பிரிஞ்சு இருக்கிறதுனாலத்தான் புரட்சி நடக்கலைன்னு புரிஞ்சுக்கலாமா?''

``அது ஒரு தவறான புரிதல். என்ன காரணம்னா, இந்தியாவுல கம்யூனிஸ்டுகள் எல்லோரும் ஒண்ணுசேர்ந்தாகூட, மக்கள்தொகையோட மிகச்சிறிய சிறுபான்மைதான் அவங்க. ரஷ்யாவுல எல்லா கம்யூனிஸ்டுகளும் ஒண்ணுசேர்ந்ததால புரட்சி நடக்கலை. கம்யூனிஸ்டுகளில், போல்ஸ்விக்குகள் மக்களோடு ஒண்ணுசேர்ந்ததால புரட்சி நடந்துச்சு. அதே மாதிரி, இங்கே எந்தப் பிரிவினராவது மக்களோடு இணைவதில் வெற்றிபெற்றால், அது புரட்சிக்கு வழிவகுக்கும்.

இதுல கம்யூனிஸ்டுகள் இருக்கிற குழுக்கள்ல சிலர், தேசிய சுய நிர்ணய உரிமையை ஏத்துப்பாங்க. மற்றொரு பிரிவினர் மறுப்பாங்க. சிலர் `ஆளும்வர்க்கத்தோடு சேர்ந்து நிற்கணும்'பாங்க. சிலர் `கூடாது'ன்னு சொல்வாங்க. இப்படி வெவ்வேறு கருத்துகள் இருக்கும்போது, வெவ்வேறு போக்குகள் இருக்கும்போது ஒண்ணுசேரணும்கிறது சாத்தியமாகாது. அப்படியே நடந்தாலும் இன்னும் பிளவுகள்தான் உருவாக்கும். முக்கியமானது என்னன்னு கேட்டா, இந்தியாவுக்குனு ரெண்டு தனிச்சிக்கல்கள் இருக்கு. ஒண்ணு, சாதிச் சிக்கல். இன்னொண்ணு தேசிய இனச் சிக்கல். இந்த ரெண்டு சிக்கல்களுக்கும் சரியான தீர்வை முன்வைத்து போராடாத காரணத்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றிபெறலை. இப்ப அதற்கான மாற்றங்கள் செய்யப்படுது. தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பது, சாதி ஒழிப்புக்கான திட்டங்களை வகுப்பது, மார்க்ஸிய லெனினியத்தை இந்தியச் சூழலுக்குப் பொருத்துவதுன்னு நிறைய மாற்றங்கள் நடந்துகிட்டு வருது. இதுவரையில் வெற்றிபெறாமல் இருந்ததற்குக் காரணம், கம்யூனிஸ்டுகள் சரியான கொள்கையோடும் வெகுமக்களோடும் சேராமல் இருந்ததுதான்.''

 ``தேசிய இனச் சிக்கலை சரியா புரிஞ்சுக்கிட்டா, புரட்சி நெருங்கிடும்னு புரிஞ்சுக்கணுமா?''

``இல்லை. அது மட்டுமல்ல, சாதிச் சிக்கல்களைப் பொறுத்தவரை சரியான முடிவெடுக்காததும் ஒரு காரணம். சாதிக்கு எதிரா பேசுறது, தீண்டாமை ஒழிப்பு பற்றிப் பேசுறது, மக்கள்கிட்ட மனிதாபிமானத்தை, தன்மானத்தை ஊட்டுறது எல்லாமே பெருமைதான். ஆனால், சாதி ஒழிப்புக்கு என ஒரு திட்டத்தை முன்வெச்சு, அதை ஒழிக்கிறதுக்கு முயற்சிகள் போதாமையா இருக்கு.

ஆணாதிக்கமா இருந்தாலும், சாதி ஆதிக்கமா இருந்தாலும், மதப்பிரச்னையா இருந்தாலும் வர்க்கப் பிரச்னையைச் சரிபண்ணிட்டா எல்லாம் சரியாகிடும்னு நினைக்கிற வர்க்க சுருக்கவாதம் (Class Reductionism) கம்யூனிஸ்டுகள்கிட்ட இருந்த குறை. இப்ப அதெல்லாம் மறுபரிசீலனைக்கு உள்ளாகியிருக்கு. சரிபண்ணி கொண்டுவரணும். இதையெல்லாம் சரிபண்ணிட்டா, புற நிலைமைகள் சரியாகியிருந்தா, புரட்சி இங்கேயும் நடக்கும், வெற்றி பெறும்.  அதுவும் ஒவ்வொரு தேசிய இனமாத்தான் வெற்றிபெறும். இந்தியா முழுமைக்குமான புரட்சிங்கிறது ஒரு கானல்நீர் வேட்டை.''

``தலித் அரசியல் போன்ற அடையாள அரசியல், என்.ஜி.ஓ-க்களின் செயல்பாடு போன்றவைதான் கம்யூனிச இயக்கத்தோட தோல்விக்குக் காரணம்னு ஒரு தரப்பு வாதிடுறாங்களே?''

``நான் அப்படி நினைக்கலை. தீண்டாமைங்கிறதும் சேரி என்பதும் கற்பனை இல்லையே. தலித்துகள்னு மக்களுக்குள்ள ஒரு பிரிவினர் இருக்கிற வரைக்கும், தீண்டாமைனு ஒண்ணு இருக்கிற வரைக்கும் அதுக்கு எதிரா அடையாளப்படுத்திக்கிட்டு ஒன்றுபடுவது தவறு கிடையாது. அவங்க யதார்த்தமான விஷயத்தைத்தானே வெளிப்படுத்துறாங்க. அது புரட்சிக்குத் தடையெல்லாம் இல்லை. அது புரட்சிக்கு உந்துகோல்தான். புரட்சியைத் தூண்டும். அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அமைப்பா ஒண்ணுசேர்ந்திருக்காங்க. கறுப்பினத்துக்கு எனச் சில பாகுபாடுகள் இருப்பதால்தானே திரண்டிருக்காங்க? கறுப்பினம் என்பது, வெறும் அடையாள அரசியல் அல்ல. கறுப்பினம் என்பதன் மூலம் சமூகப் பாகுபாடுகளை ஒழித்து, சமூகச் சமத்துவத்தை ஏற்படுத்த பார்க்கிறாங்க. அதே மாதிரிதான் இந்த அணித் திரட்சியும் சரியானதுதான்.

அப்புறம், என்.ஜி.ஓ-க்களைப் பொறுத்தவரை எல்லோரையும் ஒரே மாதிரி சொல்ல முடியாது. என்.ஜி.ஓ-ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் என்ன `Non Government Organisations. அரசு அல்லாத அமைப்புகள். இதுல நேர்மையா உழைக்கிறவங்களும் இருக்கிறாங்க அல்லது புரட்சிகரப் போராட்டங்கள்ல இருந்து மக்களை திசைதிருப்பி சாதாரண சில்லறைச் சீர்திருத்தங்கள், சமரசங்கள் பக்கம் திருப்புறவங்களும் உண்டு. எல்லாரையும் பொத்தாம்பொதுவா புறக்கணிக்கிறதும் தப்பு, அரவணைக்கிறதும் தப்பு.''

``சாதித் தொடர்பான சிக்கலைத் தீர்க்கிறதுக்கு பெரியார், அம்பேத்கர் சிந்தனைகள் என்ன வகையான பங்களிப்பைச் செய்தன?''

``இவங்க ரெண்டு பேருமே கருத்தியல் புரட்சியாளர்கள். தங்களோட கருத்தாலேயே அடியோடு மாற்றிபோடும் மாதிரியான அவர்களது வேலை பெருசு. அம்பேத்கரோட பங்களிப்பும் சரி, பெரியார்

தமிழ்நாட்டுக்குள்ளே செஞ்சதும் சரி, அது அப்படியானதுதான். ஆனா, அவங்க `செயல் புரட்சியாளர்கள்'னு சொல்ற மாதிரியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலை.

எடுத்துக்காட்டுக்கு, பெரியார் `தமிழ்நாடு, தமிழருக்கே'னு சொன்னார். அது ஓர் அரசியல் முழக்கம். அதுக்கு ஓர் அரசியல் இயக்கம் வேணும். அப்பப்ப ஓர் அடையாள மறியல் நடத்திக்கிட்டு, சீர்திருத்தவாத இயக்கம் நடத்திக்கொண்டே, எப்படி ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்க முடியும்? காமராஜரையும் ஆதரிச்சுக்கிட்டு, அண்ணாவையும் ஆதரிச்சுக்கிட்டு, கருணாநிதிக்கு சிலை வெச்சுக்கிட்டு, எப்படி அவரோட அந்த முழக்கம் வெற்றி பெறும்? தொகுத்துச் சொல்லணும்னா, நடைமுறை அளவுல நடந்த சில்லறைச் சீர்திருத்தங்கள் அவை.

நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மாதிரி, அந்த நவம்பர் உரையை வெச்சுதான் அம்பேத்கரியர்கள்கிட்ட கேள்விகள் கேட்கவேண்டியிருக்கு. அம்பேத்கர் குறிப்பிட்ட அந்தச் சமூகப் பொருளியல் ஏற்றத்தாழ்வு கூடிட்டே இருக்கே. இன்னும் எப்படி இது ஜனநாயகமாகவே இருப்பதா நம்புறது? அரசமைப்பின் மூலம் சமத்துவத்தைக் கொண்டுவந்திடலாம்கிற முயற்சி, 60 வருஷத்துல தந்த பாடத்தை வெச்சு, வழிமுறைகள்ல மறுபரிசீலனை செய்யணுமா... இல்லையா?

சாதி என்பது கற்பனையோ, வெறும் மனநோயோ  மட்டுமில்லையே! விரும்பினால் வைத்துக்கொள்ளலாம்; வேண்டாவிட்டால் விட்டுவிடலாம் என்ற விஷயம் கிடையாதே. அது யதார்த்தம்.  அந்த யதார்த்தத்தை எதிர்கொள்றதைப் பற்றியும், அதை மாற்றி அமைக்கிறதைப் பற்றியும் யோசிக்கணும் இல்லையா? இங்கே ஜனநாயகம்கிறது வெறும் தன்விருப்பமா மட்டும்தானே இருக்குது. ஒரே இடத்துல தேங்கி நிற்கிறதுக்குப் பதிலா, அடுத்தகட்டத்துக்கு யோசிக்கணுமில்லையா! மக்களை அணித் திரட்டுறதுன்னா என்ன? விடுதலைக்கு என்ன செய்யணும்? யார், யார் நட்பு சக்திகள் என்பதையும் யோசிக்கணுமா இல்லையா?''

``கம்யூனிஸ்டுகள் அனைத்துத் தரப்பு மக்களுடைய பிரச்னைகளிலும் போராடினாலும், தேர்தல் அரசியல்ல பெரிய அளவிலான வெற்றிய ஈட்ட முடியாததற்குக் காரணம் என்ன?''

``தேர்தல்ங்கிறது இங்கே ஜனநாயகத் தேர்தலாக இருக்குதான்னு பார்க்கணும். மக்கள்தொகையில கோடீஸ்வரர்கள் எத்தனை விழுக்காடு இருக்காங்க? நாடாளுமன்றத்துல கோடீஸ்வரர்கள் எத்தனை விழுக்காடு இருக்காங்க? தேர்தலில் கோடீஸ்வரர்களின் பிரதிநிதிகள்தான் வெற்றிபெறுகிறார்கள் என்பது வெட்டவெளிச்சம். விதிவிலக்கா இங்கே ஒருத்தர், அங்கே ஒருத்தர் ஆக  முடியுமே தவிர, பெரும்பணக்காரர்களால் மட்டும்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும். அதனால், கம்யூனிஸ்டுகள் துண்டேந்தி, உண்டியலேந்தி, சந்தா வாங்கி, கட்சி நடத்தி இவர்களோடு போட்டிபோட முடியாமப் போகுது. இது பணநாயகமாக மாற்றப்பட்டிருக்கு.

இந்த இடத்துல அம்பேத்கரைத்தான் நினைவுப்படுத்துறேன். 1949-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி, தன்னோட நகல் அரசமைப்பை ஒப்படைச்சுப் பேசுறப்போ சொன்னார், `நாம் முரண்பாடுகள் நிறைந்த யதார்த்தத்துக்குள் (an era of contradiction) நுழைஞ்சிட்டிருக்கோம்'னு. அப்படிச் சொல்லிட்டு அடிப்படை முரண்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார். `ஆளுக்கு ஓர் ஓட்டு, ஓட்டுக்கு ஒரு மதிப்பு என்ற வகையில் அரசியல் ஜனநாயகத்தை நாம் அடைஞ்சிருக்கோம். ஆனால், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுங்கிற அடித்தளத்துல நின்னுதான் இந்த அரசியல் சமத்துவத்தை அடைஞ்சிருக்கோம். இந்த ஏற்றத்தாழ்வு தொடர்ந்தா அர்த்தமற்றதாகிடும்'னு சொன்னார்.

சொத்துக்குவிப்பைத் தடுக்கணும்கிறது அரசோட கடமைன்னு அரசமைப்புச் சட்டத்தில் எழுதிவெச்சிருக்காங்க. ஆனால், சொத்துக்குவிப்பு பன்மடங்கா பெருகியிருக்கிறதைப் பார்க்க முடியுது. இன்னிக்கு 90 சதவிகித உடைமைகள் 10 சதவிகிதத்தினரிடமும், 10 சதவிகித உடைமைகள் 90 சதவிகித மக்களிடத்திலும் உள்ளன. இது அரசியலில் தாக்கம் செலுத்தி ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றியிருக்கிறது. இந்திய ஜனநாயகமானது, முதலில் பணநாயகமாகவும் பிறகு சாதிநாயகமாகவும் இருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியும். வெற்றிபெற்று அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டுவர முடியும் என்பது ஒரு மயக்கம், மாயை, கற்பனை கணக்குதான். வெறும் தேர்தல் அரசியல்ல மட்டும் நின்னு, இவர்கள் தேர்தல் அரசியலைப் பயன்படுத்துவதாகச் சொன்னது போய், தேர்தல் அரசியல் இவர்களைத் தின்றுவிட்டது.''

``நக்சல்பாரி அரசியல்தான் சரின்னு அரசியலுக்கு வந்தீங்க. தற்போது அதிலிருந்து விலகிவந்திருக்கும் நீங்க, அந்தப் பாதையும் புரட்சிக்குச் சரியில்லை என நினைக்கிறீங்களா?''

``நக்சல்பாரி உணர்வுங்கிறது சரியான உணர்வு, புரட்சிகர உணர்வு; ஆதிக்கத்துக்கு எதிரா கலகம் செய்ற உணர்வு. அதைப் பற்றிச் சொல்லணும்னா அது புரட்சியா மலரத் தவறிய கலகம். அதுக்குக் காரணம், அகம் சார்ந்த முடிவுகள். இவங்களுக்கு புரட்சிமேல நாட்டம் வந்த உடனே ஐந்தாண்டுகளில் புரட்சி, பத்தாண்டுகளில் புரட்சி, ஆயுதங்களைச் சார்ந்த புரட்சினு சொல்லிட்டு, அதுக்காக அவசர, அவசரமா நடவடிக்கைகள்ல இறங்கினவங்க, மக்களைத் தயார்படுத்துறதைப் பற்றி அதிகம் சிந்திக்கலை.

மற்ற கட்சிகள் மாதிரியே தேசிய இனச் சிக்கலைப் புறக்கணிச்சாங்க. சாதிச் சிக்கலையும் கவனிக்க மறந்தாங்க. வெறும் வர்க்கமாகத்தான் இந்தியச் சமூகத்தைப் பார்த்தாங்க. புரட்சியை உடனடியா நடத்துறதுக்கு சீனத்தை பார்த்துதான் முயன்றாங்க. `சீனத்தின் பாதை எமது பாதை; சீனத்தின் தலைவர் எமது தலைவர்'னு சொல்லி சாரூ மஜூம்தார் முழங்கினார். அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த, புரட்சிக்கு முன்னாடி சீனா  எப்படி இருந்ததோ அப்படித்தான் இந்தியா இருக்குன்னு கற்பனை பண்ணிட்டு, `சீனா, ஓர் அரை காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடு'னு அங்கே வரையறுத்ததைவெச்சு `இந்தியாவும் அரை காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடு'னு சொன்னாங்க, சீனாவை மாதிரியே இங்கேயும் தரகு முதலாளித்துவம்தான்னு சொன்னாங்க. இப்படித் தங்களோட அவசரப் புரட்சிக்குப் பொருத்தமான வரையறைகளை அவங்களாகவே முடிவுபண்ணிட்டாங்க. அது உண்மைங்கிற கல்லில் மோதி ஒதுங்கிட்டு. இப்ப அதுல பல பிரிவினர் மறுபரிசீலனை பண்ணி, தேசிய இன விடுதலைக்காக, சாதி ஒழிப்புக்காக எல்லாம் போராட முன்வந்திருக்காங்க.

நாட்டில் சில பகுதிகளில் மட்டும்தான் வெகுமக்கள் ஆதரவு இருந்துச்சு. பரந்துபட்ட அளவுல மக்கள் ஆதரவு கிடைக்கலை. அளவில்லாத தியாகங்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டாங்க. அதற்கேற்ற பலன் ஏதாவது கிடைச்சிருக்கான்னா, கிடைக்கலை. எனவே, அதை மறுபடியும் பரிசீலிக்க வேண்டிய காலம் இது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு