Published:Updated:

ரிலையன்ஸ் அலைபேசி தொடர்புகள் செயலிழந்த பின்னணி என்ன?

ரிலையன்ஸ் அலைபேசி தொடர்புகள் செயலிழந்த பின்னணி என்ன?
ரிலையன்ஸ் அலைபேசி தொடர்புகள் செயலிழந்த பின்னணி என்ன?


                               

''ரிலையன்ஸ் செல்போனிலிருந்து யாருக்கும் போன் பேசமுடியவில்லை... எந்த அழைப்புகளும் ரிலையன்ஸ் செல்போனுக்கும் வருவதில்லை...'' என்று கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு முழுக்க ரிலையன்ஸ் செல்போன் வாடிக்கையாளர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், 'ரிலையன்ஸ் நிறுவனம் தனது செல்போன் சேவையை நிறுத்திவிட்டது!' என்று மக்களிடையே கிளம்பியிருக்கும் செய்தி அதன் வாடிக்கையாளர்களை நிலைகுலையச் செய்திருக்கிறது.

இதற்கிடையில், ரிலையன்ஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவந்த விநியோகஸ்தர்களும் விற்பனையாளர்களும் ரீசார்ஜ் கூப்பன்களை விற்க முடியாமலும், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமலும் விக்கித்து நிற்கின்றனர். 

ஐநூறு ரூபாய்க்கு இரண்டு செல்போன்களைக் கையில் கொடுத்து, மிகப்பெரிய செல்போன் புரட்சியைத் தொடங்கி வைத்த 'ரிலையன்ஸ்' நிறுவனம்மீது, கோடிக்கணக்கில் மோசடி குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது. 

'என்னதான் நடக்கிறது?' விசாரணையில் இறங்கினோம். முதலில், சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ரிலையன்ஸ் தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று பேசினோம். "சார், நாங்களே இங்க சும்மாத்தான் உட்கார்ந்திருக்கிறோம்... எங்களிடம் வந்து இதையெல்லாம் கேட்டால் எப்படி? யூனிட் ஹெட் யாருன்னு கேட்டு அங்கே போய் விசாரியுங்கள்" என்றனர்.

ரிலையன்ஸ் செல்போன் ரீசார்ஜ் கூப்பன்களை விற்கும் சில ஷோ-ரூம்களுக்குச் சென்றோம். "சார், மல்லையாவுக்கும், அனில் அம்பானிக்கும் பெரிய வித்தியாசம் இல்லைங்க... மல்லையாவை 'டிக்ளேர்' பண்ணிட்டாங்க, அனில் அம்பானியை இன்னும் 'டிக்ளேர்' பண்ணலை... அவ்வளவுதான். ரீசார்ஜ் கூப்பன்களை லட்சக்கணக்கில் கையில் வைத்துக்கொண்டு, விற்கவும் முடியாமல், கம்பெனிக்கே திருப்பி ஒப்படைக்கவும் முடியாமல்,  ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தவிக்கிறோம்" என்றனர்.

தமிழ்நாடு அனைத்து செல்போன் - ரீசார்ஜ் கூப்பன் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர், விஸ்வநாதன் இப்பிரச்னை குறித்து நம்மிடம் பேசும்போது, "ரிலையன்ஸ் செல்போன் குறித்து வருகிற தகவல்கள் அனைத்தும் உண்மைதான். ஒரு விற்பனையாளராக நானே பெருந்தொகையை இழந்து நிற்கிறேன். ரிலையன்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நூற்றுக் கணக்கானோர் எங்களிடம் மனு கொடுத்துவிட்டு தீர்வுக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்.

 'ஐநூறு ரூபாய்க்கு இரண்டு செல்போன்கள்' என்று அனில் அம்பானி, டிசம்பர் 2002-ல் ஒரு திட்டம் கொண்டு வந்தபோது, அதில் சி.டி.எம்.ஏ. மட்டுமே இருந்தது. அதாவது ரிலையன்ஸ் சிம் கார்டை செல்போனிலிருந்து வெளியில் எடுக்கவோ, வேறு நிறுவன சிம் கார்டுகளை அந்த செல்போனில் பொருத்தவோ முடியாதவாறு அது வடிவமைக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தபடி சி.டி.எம்.ஏ. திட்டம் சரியாகப் போகாததால், அனைத்து 'சிம்' கார்டுகளும் ரிலையன்ஸ் செல்போனுக்கும் பொருந்தும் விதமாக ஜி.எஸ்.எம். சிஸ்டத்தைக் கொண்டு வந்தார்கள். 

ஆனால், அந்த ஜி.எஸ்.எம் சிஸ்டமும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் மார்க்கெட்டில் சரிவரப் போகவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான், ரிலையன்ஸ் செல்போன்களுக்கு வரக்கூடிய  'டவர்-லைன்' (சிக்னல்)களை மொத்தமாக சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள். 'ரிலையன்ஸ் டவர் எங்கேயும் கிடைக்கவில்லை'  என்று ஹெட் ஆபீசுக்குப் பொதுமக்கள் யாரும் போவதில்லை. லோக்கலில் ரீ சார்ஜ் செய்த கடைக்கும், செல்போன்களை வாங்கிய கடைக்கும்தான் வருகிறார்கள்.

 'ட்ராய்' விதிகளின் படி, 90 நாட்களுக்கு முன்பாக ஓர் அறிவிப்பு கொடுத்துவிட்டுத்தான், நெட் வொர்க்கை இப்படி நிறுத்த முடியும். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் அப்படி எதையுமே செய்யவில்லை.  டாக்-டைம் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களில் தொடங்கி, விற்பனையாளர்கள் வரையில் அனைவருக்கும் 'ஜீரோ பேலன்ஸ்' என்ற நிலை வந்த பிறகுதான் எந்த நிறுவனமும் தங்களின் நெட் வொர்க்கை இப்படி நிறுத்த முடியும். அப்போதுதான் வாடிக்கையாளருக்கும், விற்பனையாளருக்கும் நஷ்டம் வராது. மேலும், குறிப்பிட்ட செல்போன் சர்வீஸிலிருந்து வேறு செல்போன் நிறுவன சர்வீஸுக்கு மாறுவதற்கு ஏதுவாக  மொபைல் நம்பர் போர்டிங் (porting) வசதியை பழைய நிறுவனமே செய்துகொடுக்கும். பழைய நிறுவனம் அப்படிச் செய்யாமல் போனால், புது நம்பர் வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆதார், கியாஸ், வங்கி என அனைத்து இடங்களிலும் ரிலையன்ஸ் சிம் நம்பரைத் தொடர்பு எண்ணாகக் கொடுத்து வைத்தவர்களின் நிலைமை பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இப்போது வேறு வழியில்லாமல், கடைக்காரர்களே சில செல்போன்  நிறுவனங்களிடம் பேசி, இந்தப் பிரச்னைகளை தீர்க்க முயன்று கொண்டிருக்கிறோம். 

ஆனால், எங்கள் பிரச்னையைத்தான் தீர்க்க முடியவில்லை. ரீசார்ஜ் கூப்பனில் ஆரம்பித்து பல விஷயங்கள், நஷ்டத்தில்  தேங்கிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் பல கடைக்காரர்களும் 5 கோடி ரூபாய்க்கும் மேல்  நஷ்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்திய அளவில் இது எத்தனை கோடிகளைத் தாண்டியிருக்குமோ தெரியவில்லை. யாரிடம் போய் இதைச் சொல்வது என்பதும் தெரியவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவலகத்திலும் எங்களுக்குப் பதில் சொல்ல ஆட்கள் இல்லை. அரசுதான் இதில் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லவேண்டும்" என்கிறார்.