Published:Updated:

பிரதமர் வீடு முன்னர் முற்றுகை:கெஜ்ரிவால் கைது!

புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளுடன் பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஊழலுக்கு  எதிரான இந்தியா என்ற அமைப்பின் அரவிந்த் கெஜ்ரிவால்,ஆதரவாளர்களுடன் கைது  செய்யப்பட்டார்.

மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாற்றுத்  திறனாளிகளுக்கான அறக்கட்டனையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு  கிடைத்த பணத்தை சல்மான் குர்ஷித், அவரது மனைவி லூயிஸ் குர்ஷித் ஆகியோர்  போலி கையெழுத்து போட்டு அபகரித்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சல்மான் குர்ஷித் பதவி விலக  வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில்,தமது கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளுடன் ஊர்வலமாக  சென்று பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும், சல்மான் குர்ஷித் மீது  நடவடிக்கை எடுக்க கோரி பிரதமரிடம் மனு கொடுக்க போவதாகவும் கெஜ்ரிவால்  அறிவித்திருந்தார்.

##~~##
ஆனால் பிரதமரை சந்திக்க அவருக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்து விட்டது.  இதனால் பிரதமர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தும் நோக்கத்துடன்,  பிரதமர் அலுவலகத்தை நோக்கி,கெஜ்ரிவால் தமது ஆதரவாளர்களுடன் பேரணியாக  செல்ல முயன்றார்.
இதனையடுத்து கெஜ்ரிவால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது  செய்யப்பட்டு,டெல்லிக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டனர்.
இந்நிலையில்,சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தமது போராட்டம்  தொடரும் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.