Published:Updated:

“ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டும் என்று சொன்னாரா இந்திரா?!”- இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு பகிர்வு

“ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டும் என்று சொன்னாரா இந்திரா?!”- இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு பகிர்வு
“ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டும் என்று சொன்னாரா இந்திரா?!”- இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு பகிர்வு

“ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டும் என்று சொன்னாரா இந்திரா?!”- இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு பகிர்வு

நவ இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான நேருவின் புதல்வியான இந்திரா, அவருக்குப்பின் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தினை அடுத்த பல தலைமுறைகளுக்கு நிலைநிறுத்தக் காரணமானவர். ஒரு பெண்ணாய் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்து தந்தையின் ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகளில் பங்குகொள்ள தொடங்கி தந்தையின் அந்திமக்காலம் வரை அவரோடு பயணித்தவர். நேருவுக்குப்பின் அரசியலலில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டதோடு, வெகு சீக்கிரத்தில் கட்சியின் தலைமைப்பதவி மற்றும் பிரதமர் பதவியை அடைந்தார். தனது உறுதியான சாதுர்யமான அரசியல் நடவடிக்கைகளால் உலக நாடுகளை வியப்புடன் பார்க்கவைத்தார். 70 களின் மத்தியில் தனக்கு அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் உருவானபோது எமர்ஜென்சி ஆயுதத்தை கையிலெடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உறைய வைத்தார். 

அடுத்துவந்த தேர்தலில் அதன் பயனை அறுவடைசெய்யநேர்ந்ததையடுத்து தன் செயலுக்கு நேர்மையாக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அரசியில் இயந்திரம் மக்களுக்காக செவ்வனே செயல்பட்டது எமர்ஜென்சியினால் விளைந்த நன்மைகளில் ஒன்று. இந்திராவின் மக்கள் சக்தி அதற்கடுத்த தேர்தலில் அவரை மீண்டும் அதிகாரத்தின் உச்சத்தில் உட்கார வைத்தது. 

1982-ம் ஆண்டு நவம்பர் மாதம்  'ஜூனியர் விகடன்' இதழுக்காக எழுத்தாளர் சிவசங்கரி இந்திரா காந்தியிடம் பிரத்யேக பேட்டி எடுத்திருந்தார். இந்திரா தன் வாழ்வின் பர்சனல் பக்கங்களைப் பகிர்ந்துகொண்ட அந்த விரிவான பேட்டியை அவரது நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு தருகிறோம்...

“வெளிநாடுகளில் உங்களுக்கு இருக்கும் உயர்வான இமேஜ் உள்நாட்டில் இல்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறார்களா  அப்படியானால், அதுகுறித்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?’’

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த இமேஜில் எனக்கு நம்பிக்கையும் இல்லை, ஈடுபாடும் இல்லை. இன்ன இமேஜ் உருவாகிறது என்ற உணர்வு இல்லாமல் என் மனசுக்கு நியாயமாய், நேர்மையாய்த் தோன்றியதைச் செய்வதையே நான் விரும்புகிறேன். ஆனால், என் நடவடிக்கைகள் என் நாட்டைப் பாதிக்கக் கூடாது. அந்த அளவுக்கு நான் விழிப்போடு செயல்படுவது அவசியம். நான், என் இமேஜ் என்பதைவிட, என் நாடு, அதைப் பிறர் மதிப்பது எனக்கு முக்கியம்.” 

“மக்களின் மனத்தைப் புண்படுத்தும் எந்தத் தீவிரமான நடவடிக்கையும் உதாரணத்துக்கு ஆர். எஸ். எஸ். சட்டத்தால் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறும் நீங்கள், தமிழ் நாட்டில் சில ஜாதியினரின் மனத்தைப் புண்படுத்துவதையும், தெய்வ வழிபாட்டைக் கேலி செய்வதையுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள தீவிர இயக்கங்களைக் கட்டுப்படுத்த இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?' 

“ஆர்.எஸ்.எஸ். சட்டத்தால் தடை செய்யப்பட வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். ஒருதரம் அப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டு அது தோல்வியையே அடைந்தது. மக்கள் விழிப்புஉணர்வு பெற்று இந்த மாதிரி இயக்கங்களின் தீவிரப் போக்கை நிறுத்த வேண்டும். பேச்சால், எழுத்தால், நடவடிக்கைகளால் மக்களின் மனதை ஓர் இயக்கம் நோகச் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய விஷயமே. ஆர்.எஸ்.எஸ். அல்லது தமிழ்நாட்டில் தாங்கள் குறிப்பிட்ட இயக்கம் எதுவாக இருந்தாலும் ஒருசார்பு மக்களின் உணர்வுகளை அவமதித்து நாட்டின் ஒற்றுமையைப் பாதிப்பார்களேயானால், நிச்சயம் அவற்றின் வளர்ச்சி தடுக்கப்பட வேண்டும். மக்களின் அமைதி, ஒற்றுமையைவிட நமக்கு முக்கியமானது வேறு ஒன்றும் இல்லை. இதை நான் போகும் இடங்களிலெல்லாம் அவசியம் வலியுறுத்துகிறேன்.

சமீபத்தில் வட கிழக்குப் பிரதேசங்களுக்குச் சென்றிருந்தபோது அந்த எளிய மக்களுக்குப் புரிகிற வகையில், இங்கே வண்ணவண்ண நூல்களைக் கொண்டு ஆடைகளை நெய்கிறீர்கள். இந்த நூல்களைத் தனியாகப் பார்த்தால் அழகாகவும் இல்லை, உறுதியாகவும் இல்லை. ஆனால், ஒன்றாகச் சேர்த்து நெய்து லுங்கி அல்லது போர்வையான பிறகு இந்த நூல்களே அழகான, உபயோகப்படுத்தப்படக் கூடிய, உறுதியான பொருளாக மாறிவிடுகின்றன. இதைப்போலத்தான் நமது தேசிய ஒருமைப்பாடும்... அந்தந்த மாநிலங்கள் தங்கள் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்கிற அதே சமயத்தில் தேசப்பற்றுடன் ஒருங்கிணைத்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது என்று சொன்னேன்...”

“ 'மக்கள் விழிப்புஉணர்வு பெற்று இந்த இயக்கங்களின் தீவிரப்போக்கை நிறுத்த வேண்டும் என்றீர்களே' - எப்படி?"

''அங்கேதான் உங்களைப் போன்ற எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வருகிறீர்கள். . . திறமையான எழுத்தால் சாதிக்க முடியாதது என்ன?'' 

“அப்படியென்றால், இதில் அரசாங்கத்தின் பங்கு ஒன்றும் இல்லை என்கிறீர்களா?''

''நிச்சயம் உண்டு. கூடவே ஜனங்களும் செயல்பட வேண்டும் என்கிறேன். எனக்குத் தெரிந்தவரை ஜனங்கள் சண்டைதான் போடுகிறார்கள்... நீண்ட வருடங்களாக இதர சாதிச் சங்கங்கள் இயங்கிவந்தாலும் இப்போது ஒருசில வருடங்களாகப் பிராமணச் சங்கமும் தொடங்கப்பட்டுத் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டது. சாதிக் கொடுமை அறவே ஒழிய வேண்டும் என்று மும்முரமாக நாம் நினைக்கையில், இப்படி ஆங்காங்கு சாதிகள் தீவிரமாகி வருவது வருந்தக்கூடியதுதான்...”

“சாதிகளை ஒழித்து ஒரு சட்டம் கொண்டுவருவது கஷ்டமா?"

''அத்தனை எளிதான விஷயம் இல்லை. அதிகாரபூர்வமாக எளிதில் நம் மக்களை அணுக முடியாது; நல்லவிதமாய் எடுத்துச் சொன்னால் கொஞ்சம் கேட்பார்கள், அவ்வளவுதான். ஆரம்ப காலத்தில் அவரவர் தொழிலையொட்டி ஒரு ட்ரேட் யூனியன்போல உண்டான சாதிப் பிரிவுகள் நாளடைவில் இறுகி, சிக்கலானதோடு, நம் முன்னேற்றத்தைப் பலவிதங்களில் தடுப்பதும் ஒரு துர்பாக்யம்தான். ஆனால், நிலைமை முன்போல இப்போது அத்தனை கடுமையாக இல்லை... கலப்புத் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இது ஒரு நல்ல அறிகுறி...”

“மைனாரிட்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள், ஹிந்துக்களைவிட அதிக உரிமைகளைப் பெறுவதாகச் சிலர் சொல்கிறார்களே... உங்கள் கருத்து என்ன?" 

“இந்தக் கண்ணோட்டம் நிச்சயம் தவறுதான். மைனாரிட்டி வகுப்பைச் சார்ந்தவர்களை, மெஜாரிட்டி வகுப்பினர் அமுக்கிவிடாமல் சம உரிமை வழங்குவதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறது; மற்றபடி யார் தவறிழைத்தாலும் அது எந்த வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்பட்டே ஆகவேண்டும்.” 

''பெண்கள் விடுதலை பற்றி . . ?''

''ஒரு பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படும்போது, அது அவளது மணவாழ்க்கையின் வெற்றிக்குப் பெரும் காரணமாகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால், பெண் சுதந்திரம் என்று சொல்லும்போது அமெரிக்காவில் வழங்கிவரும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. கணவனுடன் குடும்பப் பொறுப்பைச் சமமாக ஏற்று விவேகத்துடன் நடக்கும் பெண் விடுதலையை நான் குறிப்பிடுகிறேன்''.

''எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் பற்றி...''

“இது, அவருடைய திட்டம் என்பதை நான் மறுக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னாலேயே பல மாநிலங்களில் புகுத்தப்பட்டுவிட்ட திட்டம்தான் இது. நான் பிரதமர் ஆவதற்கு முன்பே சில இடங்களில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறேன். சில பள்ளிகள், சில இடங்கள் அன்று தொடங்கியதை, இன்று தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தியிருக்கிறார்...”

“இவ்வளவு நல்ல திட்டத்தை நீங்கள் அப்போது நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தவில்லை?" 

“அதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியா மாதிரி பெருமளவுக்கு ஏழைகள் உள்ள நாட்டில் எதையும் சிந்தித்து, நிதானமாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். இன்று ஒருநாள் பொழுதை மட்டும் நினைக்காமல் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். தொழிற்கூடங்கள் போன்றவை அமைத்து, தினமும் ஒரு குடும்பத்துக்கு வரும்படி கிடைக்கச் செய்வது கால ஓட்டத்தில் அதிக நன்மை பயக்கும் என்று நாங்கள் நினைத்துச் செயல்பட்டோம். இருப்பதை இன்றைக்கு வாரி இறைத்துவிட்டு, நாளைக்கு ஒன்றும் இல்லை என்ற நிலைமையைவிட, நிதானமாக ஒவ்வொரு நாளாய் முன்னேறுவது எத்தனை முக்கியம்?”

“கங்கா - காவிரி திட்டத்தை அமலாக்குவது எந்த அளவில் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என்பதோடு, வெள்ளம், பஞ்சம் போன்ற நிலைகளிலிருந்து மாநிலங்களைக் காக்கவும் முடியுமே?’’ 

" 'என்னுடைய செயல் திட்டங்களில் இதுவும் ஒன்று தெரியுமா. இந்தியாவிலுள்ள நதிகளை இணைக்கும் திட்டம் பற்றிப் பேச்சு எழுந்தபோது, முதலில் அதை வரவேற்றவர் நான். ஆனால், அப்போது மந்திரி சபையில் இருந்த ஒருவரால் இந்தத் திட்டம் தடுக்கப்பட்டுவிட்டது.”

“பிரதம மந்திரி என்ற ரீதியில் நேருஜியையும், உங்களையும் ஒப்பிட இயலுமா?“

“இல்லை, என்னால் முடியாது..இந்த மாதிரி ஒப்பீடுகளை அறவே வெறுப்பவள் நான். அன்றைய நிலை வேறு, இன்றைய நிலை வேறு . . மக்களின் கண்ணோட்டம், பழக்கவழக்கங்கள், நாகரிகம் எல்லாம் மாறிவிட்ட இன்றையச் சூழ்நிலையில் என் தகப்பனார் எப்படி இயங்கி இருப்பார் என்று யாரால் உறுதியாகக் கூற முடியும். தனிப்பட்ட நபர்களை அவர்களுடைய ப்ளஸ், மைனஸ் பாயின்டுகளோடு ஏற்கக் கற்க வேண்டுமே தவிர, இப்படி ஒப்பிட்டு அவரவருடைய தனித்தன்மையைப் பாதிப்பதில் எனக்கு விருப்பமில்லை..”

வாரிசு போட்டியினால் என் மகனுக்கு ஆபத்து வந்துவிடும் என தான் அஞ்சுவதாக மேனகா கூறியிருக்கிறாரே?

“எனக்கு இருந்த சொத்துகளை இரண்டு மருமகள்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டேன். இப்போது என்னிடம் இருப்பவை என் புத்தகங்களும், சில சொந்தப் பொருள்களும்தான். . . இதில், வாரிசுப் போட்டி எங்கிருந்து வருகிறது. எங்கள் வருணை நாங்கள் அனைவரும் உயிராக நேசிக்கிறோம்... இதை அவளே அறிவாள்.. நான் வேறு என்ன சொல்ல. ஞாயிற்றுக்கிழமைகளில் என்னுடன் இருக்க குழந்தையை அனுப்ப வேண்டும் என்பது பேச்சு... ஆனால் பாதிப்பொழுது அனுப்புவது இல்லை. போன் செய்தால் யாரும் பொறுப்பாகப் பதில் சொல்வதில்லை... 'வெளியூர் போய்விட்டார்' என்கிறார்கள். 'திங்கள் அன்று அனுப்புகிறோம்' என்று தட்டிக் கழிக்கிறார்கள். 'திங்கள் அன்று நான் வேலையாய் இருப்பேன்' என்பது அவர்கள் அறியாததா. ஞாயிறு முழுவதும் என் பேரனோடு இருக்க நான் விரும்புவது அவர்களுக்குத் தெரியாததா? ....”

“ஆரம்பத்தில் மேனகாவும், (தற்போது மத்திய அமைச்சர்) நீங்களும் அன்யோன்யமாக இருந்தீர்களே; உங்களுக்குள் இந்தக் கசப்பு வரக் காரணம் என்ன?”

“மேனகா என்னை வெறுப்பது கல்யாணமான மறு வாரமே எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அவருக்குப் பதவி மோகம் அதிகம். சஞ்சயை மணந்ததற்கு அடிப்படைக் காரணம் அரசியல் பிரவேச ஆசைதான்... எதற்காக இதைக் கூறி என் குடும்ப அவலங்களை நானே ஏன் தம்பட்டமடிக்க வேண்டும். இன்றைக்கும் மேனகா என்னவெல்லாமோ சொல்வதற்குப் பதில் பேசாமல் நான் இருப்பதற்குக் காரணம் குடும்ப கெளரவமும், பண்பாடும்தான். ஆனாலும் ஓடஓட விரட்டினால் நானும் என்ன செய்வது? 

முதலில் மேற்கு வங்காளம், கேரளம், பின் தமிழ்நாடு காங்கிரஸ் கையைவிட்டுப் போயின. சிக்கிரமே ஆந்திராவும்...'' 
 
 “இந்த இழப்புக்கள் புதுசு அல்லவே. முன்பு வட இந்தியாவில் உ. பி., பிஹார் போன்ற இடங்களில் எதிர்க்கட்சியினர் ஆட்சி புரிந்ததும் உண்டு; பிறகு, மீண்டும் நாங்கள் ஆட்சியைப் பிடித்ததும் உண்டு.”

“தென் இந்தியாவைப் பொறுத்தவரை இந்த இழப்புக்கு இந்தித் திணிப்பை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லலாமா?'' 

"நிச்சயம் இல்லை. இந்தியை நாங்கள் திணிக்க முயலுவதே இல்லை..''ஒன்றைத் தீர்மானமாய்ச் சொல்கிறேன். கேளுங்கள்; இந்தியைத் திணிக்கும் எண்ணம் எங்களுக்கு நிச்சயம் இல்லை.”

“மும்மொழித் திட்டத்தை நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவருவது சாத்தியம் என்கிறீர்களா?''

''சாத்தியம்தான். அரசாங்கத்தோடு, மக்களும் ஒத்துழைத்தால் எதுதான் சாத்தியமில்லை. கேரளத்திலும், ஆந்திராவிலும் இந்தியைக் கற்பது தங்கள் நன்மைக்கே என்று உணர்ந்து படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் வேண்டுமென்றே மக்கள் இந்திக்கு எதிராக அதிகமாகத் தூண்டி விடப்படுகிறார்கள்...''

“எம்.ஜி.ஆர்., கருணாநிதி, என்.டி.ராமராவ் - இவர்களைப் பற்றின அபிப்பிராயத்தைக் கூற இயலுமா?’’ 

“மன்னிக்கவும். தனிப்பட்ட நபர் எவரையும் நான் விமர்சிப்பதில்லை.’’

“நமது நாட்டின் கலாசாரம் அடிபட்டுப் போகும் அளவுக்கு மேலை நாட்டு நாகரிகம் நம்மை ஆட்கொள்வதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

தாய்மொழி தெரியாது, புடைவை கட்ட வராது - என்று இளைய தலைமுறையினர் பலர் கூறுவது பற்றி உங்கள் அபிப்பிராயம்?" 
“காலம் மாறி வருகிறது. வளர்ந்துவரும் சமுதாயத்தில் மேலைநாடுகளின் பாதிப்பைத் தவிர்க்க இயலாது. ஆனால், அதற்காகத் தாய்மொழி தெரியாது. புடைவை கட்ட மாட்டேன் என்று சொல்வது முளையிலேயே கிள்ளப்பட வேண்டும். ஆடி, ஓடி வேலை செய்யப் புடைவை அசௌகரியமாக இருந்தால் அந்தச் சமயங்களில் இதர இந்திய உடைகளை, சல்வார் கம்மீஸ் போன்றவை அணியலாம். மற்றபடி மாலை வேளைகளிலும், பொது இடங்களிலும் புடைவை அணிந்துசெல்வதைப் பெருமையுடன் பின்பற்ற வேண்டும்... புடைவை அழகான உடை என்பதோடு, வேண்டாத சதையை மறைக்கும், ரொம்ப குச்சி சரீரத்தை மூடி எடுப்பாகக் காட்டும்... நமது இளைய தலைமுறையினரிடம் ரொம்ப பக்குவமாக எதையும் சொல்ல வேண்டும். அதிகமாகக் கண்டித்தால் மீறத் துணிவார்கள். அதனால் சின்ன வயசிலிருந்தே நம் கலாசாரப் பெருமைகளைவிடாமல் எடுத்துச் சொல்வது பெரியவர்களின் கடமை...''

 “மாறிவரும் சமுதாயத்தில் பெருகிவரும் முதியோர் பிரச்னை பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரிந்துகொள்ளலாமா..?''

    “இந்தப் பிரச்னையை ஓர் அனுபவத்தின் மூலம் நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். மிஸ் அன்ன ஆர்ன்ஸ்ஷோல்ட் (ஒரு காகிதத்தில் பெயரை எழுதிக் கொடுக்கிறார்) என்ற பெண்மணி டென்மார்க்கிலிருந்து அடையாறு தியசாபிகல் சொஸைட்டியில் வேலை பார்க்க வந்தார். பின், விஞ்ஞானி ஜே.வி.போஸிடம் சில காலம் வேலை பார்த்தார். தொடர்ந்து என் அத்தையிடம் ஹவுஸ்கீப்பராக இருந்து என்கூடவும் லக்னோவில் வசித்தபின், தள்ளாமை வர டென்மார்க் சென்றார். அங்கு ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியவர், ‘நீ என்னை வேலைக்கு வைத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. நான் அங்கு வந்து விடுகிறேன். எத்தனை வசதியிருந்தும் என்னால் இந்த இல்லத்தில் இருக்க முடியவில்லை' என்று எழுதியதோடு அல்லாமல் புறப்பட்டும் வந்துவிட்டார். சிறு வயதுக்காரர்களின் குரலைக் கேட்டுக்கொண்டு, வீட்டோடு இருப்பதில் உள்ள சந்தோஷம் ஹோமில் வராதுதானே"

“நாளுக்கு நாள் இந்தப் பிரச்னை வளர்ந்துகொண்டு வருவதற்குக் காரணம் என்ன?" 

“கூட்டுக் குடும்பம் நசித்துப்போவது இந்த நிலைமைக்கு ஒரு காரணம், கணவன், மனைவி இருவரும் வேலை பார்ப்பது, இடமாற்றம், பெரிய நகரங்களில் இடநெருக்கடி இவையெல்லாம் இளைய தலைமுறை முதியவர்களைப் புறக்கணிக்க வைக்கிறது. உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் மக்கள் இழந்துவரும் மனிதாபிமானத்தைத் தங்கள் எழுத்துகளால் நிச்சயம் மீட்டுக்கொடுக்க முடியும் 
“ஒருவர் இறந்தபின் கண், கிட்னி போன்ற உறுப்புகளைக் கட்டாயமாகத் தானம் செய்ய வேண்டும் என்பதைச் சட்டமாக்க இயலுமா?’’
''கஷ்டம், ரொம்ப கஷ்டம். நம் நாட்டில் யாரையும் எதற்கும் கட்டாயப்படுத்த முடியாது. குழந்தைப் பருவத்திலிருந்தே இத்தகைய தானங்களின் மேன்மையை எடுத்துச்சொல்ல வேண்டும். கூடவே தான் ஏற்கெனவே சொன்னதுபோல உங்களைப் போன்றவர்கள் தங்கள் எழுத்துகளால் இந்த விழிப்புஉணர்வைப் பெருமளவுக்குக் கொண்டுவர முடியும்.''

''இன்றைய பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்கள் தவறாக இருக்கின்றன என்பது பலரின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்''
“முழுக்க முழுக்கத் தவறு என்று ஒப்புக்கொள்ள மாட்டேன். ஆனால், நமது பாட முறையில் மாற்றம் அவசியம். இன்னமும் பழைய காலத்திலேயே நாம் இருக்கிறோம் ... காலம் மாறிவிட்டது. இதை உணர்ந்து நம் படிப்புத் திட்டத்தையும் மாற்ற வேண்டும். இப்படிச் செய்யும்போது நமது கலாசாரம், பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்...’’

''படிப்பு என்பது நம் அறிவை, நம்மை வளர்த்துக்கொள்ள உதவுகிறதே தவிர, பட்டப்படிப்பு வேலைக்கு உத்தரவாதம் அல்ல என்பதை எப்படி மக்களுக்குப் புரிய வைப்பது?” 

“கஷ்டம்தான் - இன்றைக்கு உலகம் முழுவதிலுமே வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. வேலைகள் இல்லாமல் இல்லை. ஆனால், மேஜை வேலைதான் வேண்டும் என்று பட்டப்படிப்பு படித்தவர்கள் பிடிவாதம் பிடிப்பதால் இன்றைய இளைய தலைமுறையினர் நடுவில் அதீத இருப்புக் கொள்ளாமை... படிப்பு வேலைக்கு உத்தரவாதம் அல்ல என்பதை அவசியம் தொடக்கத்திலிருந்தே உணரவைக்க வேண்டும்... இதுபற்றி நாங்கள் ரொம்ப தீவிரமாகப் பேசி, சிந்தித்து வருகிறோம். மாற்றங்கள் ஏற்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை ...”

“நாட்டுப்பற்று குறைந்து வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

“மிகவும் வருந்துகிறேன்.”

“சுத்தம் நம் நாட்டில் மிகக் குறைவாக இருக்கிறதே! சிங்கப்பூரில் செய்வதுபோல் குப்பை போடுபவர்களைக் கறாராய் தண்டித்தால்?"

“செய்ய வேண்டும்... படித்த, பணக்காரர்கள்கூடப் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதை அவசியம் கண்டிக்க வேண்டியதுதான். I am all for it ...''
“மக்களிடம் செல்வாக்கு உள்ள அரசியல் கட்சிகள் சமுதாயத்துக்கு உதவும் வகையில் ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடக் கூடாதா. இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் தலைவி என்ற முறையில் இதற்கு உங்கள் பதில்?"

“நீங்கள் சொல்வதுபோல மக்களிடம் விழிப்புஉணர்வை உண்டாக்க அரசியல் கட்சிகள் எவ்வளவோ ஆக்கபூர்வமாகச் செயல்படலாம்தான் ... ஆனால், அவர்கள் செய்வது போதாது... I am really sorry about it. அரசாங்கம், கட்சிகள் என்பதோடு, தனிப்பட்ட நபரின் செயலும் சேர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ‘நான் நேர்மையாக இருக்கிறேனா - என் நாட்டுக்கு உண்மையாக உழைக்கிறேனா’ என்று ஒவ்வொரு குடிமகனும் எண்ணிச் செயல்படத் தொடங்கிவிட்டால், முக்கால்வாசிப் பிரச்னைகள் மறைவது நிச்சயம் ...’’ 
“சஞ்சயின் மறைவை நீங்கள் எப்படி தாங்கிக் கொண்டீர்கள் என்று விவரிக்க இயலுமா. உங்களின் அனுபவம், பல இழப்புகளால் தவித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஆறுதல் அளித்து, மீள உதவுமே...” 

“எந்த ஓர் அனுபவத்தையும் அவரவர் தனியாக அனுபவித்துத்தான் மீண்டு வர முடியும். எந்தத் துக்கத்தையும் நாம் தனியாகத்தான் தாங்கியாக வேண்டும். சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வதுபோலத் துக்கத்தைப் பிறரிடம் பகிர்ந்து ஆற்றிக்கொள்ள முடியாது. நமக்குள்ளிருந்தே ஒரு சக்தியைத் திரட்டிக்கொண்டு துக்கத்தை, வேதனையைத் தாங்க வேண்டும். என் கஷ்டத்தை நான் இந்த ரீதியில்தான் தாங்கிக்கொண்டேன்...'நான் இடிந்து போய்விட்டேன் என்பதற்காகச் சஞ்சய் மீண்டு வந்துவிடுவானா, இல்லை இதர வேலைகள் தாமாக நடந்தேறிவிடுமா. சீக்கிரம் நிஜத்தைத் தெரிந்துகொள்ளப் பழகுவதுதான் எல்லாருக்கும் நல்லது...''     

“சஞ்சய் பற்றின அன்பான சம்பவம் ஒன்றைச் சொல்ல முடியுமா?”

“எத்தனையோ இருக்கிறது. எதைச் சொல்ல. சஞ்சய் அன்பு நிறைந்தவன். பிறரிடம் கரிசனம் உள்ளவன். சின்னப் பையனாய் இருக்கும்போதிலிருந்தே என்னிடம் அவனுக்கு அலாதிப் பிடிப்பு உண்டு. டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் தேதி எனக்குப் புது வருடப் பரிசளிப்பதற்காகத் தன் பாக்கெட் மணியை மாசக்கணக்காய் அவன் சேர்ப்பதுண்டு... நாங்கள் லக்னோவில் குடித்தனம் செய்துகொண்டிருந்தபோது ஒரு சமயம் புது வருடப் பிறப்புக்கு அப்பாவுடன் டார்ஜிலிங் போயிருந்தோம்.

கிளம்புவதற்கு 'பாக்' செய்யும்போது ஒரு பெட்டியைக் கொடுத்து அதையும் எடுத்துச் செல்லவேண்டும் என்றான் சஞ்சய். ‘இதில் என்ன இருக்கிறது சஞ்சய். இரண்டு நாள் போக இத்தனை சாமான்களா’ என்று நான் கேட்ட போது, 'என் துணிகளை வேண்டுமானாலும் எடுத்துவிடுங்கள் - இது ரொம்ப முக்கியம்' என்று கூறிவிட்டான். டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் தேதி நான் தூங்கப் போகும்வரை விழித்துக் கொண்டிருந்து அந்தப் பெட்டியை என் பக்கத்தில் வைத்திருக்கிறான். மறுநாள் காலை கண் விழித்தால் கால்மாட்டில் 'தம்’ மென்று ஒரு பெட்டி... உள்ளே ஆறு முள் கரண்டி, கத்திகள்... என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை! சில மாசங்கள் முன்பு என் கணவரிடம் 'லக்னோ வீட்டில் பாத்திரங்கள் போதவில்லை. கத்தி, முள் கரண்டிகள் வாங்க வேண்டும்’ என்று நான் கூறியதைச் சஞ்சய் கேட்டுவிட்டு அதை வாங்கப் பணத்தைச் சேர்க்க ஆரம்பித்திருக்கிறான். குழந்தைதானே அவ்வளவு பணம் அவனிடம் ஏது. முழு செட் வாங்கப் பணம் இல்லாமல் ஆறு எண்ணிக்கை கொண்ட செட்டை வாங்கித் தயாராக வைத்திருக்கிறான்! சஞ்சய் அன்பு நிறைந்தவன்... அதை அவன் வெளிப்படுத்தும் விதமே அலாதிதான்.”  

“உங்களை ஏமாற்றிய, தாக்கியவர்களை மறுபடி சந்திக்கும்போது, உங்கள் மனநிலை என்ன மேடம் கசப்பு, வெறுப்பு இருக்கும் அல்லவா?'' 

“எனக்கு நல்லது செய்தவர்களைவிட தீங்கு செய்தவர்கள்தான் அதிகம். ஆனால், யாரிடமும் எதுவும் சொல்லிக்காட்டாமல், என்னிடம் அவர்கள் திரும்பி வரும்போது முழுமையாய் நான் ஏற்றுக்கொள்வது எவ்வளவு நிஜமோ, அவ்வளவு நிஜம், அவர்கள் மேல் எனக்குக் கசப்பு உணர்வு தோன்றாமல் இருப்பதும்...'' 

“இது எப்படிச் சாத்தியம்... இது, உங்கள் பிறவிக் குணமா... இல்லை, வளர்த்துக்கொண்ட இயல்பா?''

“தெரியவில்லை... ஆனால், யோசிக்கும்போது என் அம்மா இந்தக் குண வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது Orczy என்றவர் எழுதின மர்ம நாவல்களை அடிக்கடி படிப்பேன். ஒருதரம் 'பழிவாங்காமல் விடமாட்டேன்’ என்பது போன்ற தலைப்பு உள்ள புத்தகத்தை நான் படிப்பதைப் பார்த்துவிட்டு, அம்மா என்னைத் தனியாக அழைத்து இந்த மாதிரி புத்தகங்களைப் படிப்பதும், இந்த ரீதியில் சிந்தனையை வளர்ப்பதும் தவறு என்று பக்குவமாய் எடுத்துச்சொன்ன விதமும், அது எனக்குள் உண்டாக்கிய விழிப்புஉணர்வும் இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.....”

“இன்றைய சமுதாயத்தில் பெண்களின் நிலை முன்னேறி இருக்கிறதா... இல்லை, சீர்குலைந்து இருக்கிறதா?”

''கண்டிப்பாய் முன்னேறித்தான் இருக்கிறது; ஆனால், ஆண்கள் நிறைந்த ஆதிக்கச் சமுதாயம் இது என்பதை நாம் மறக்கக்கூடாது... ஆண் சுலபமாகப் பெறும் பதவியை, உயர்வை ஒரு பெண் அடைய, கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது....''

“திருமணத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம். கல்யாணம் இல்லாமலேயே ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் பரவுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

“ ‘திருமணம் என்பது பிற்போக்கானது, எப்படியும் வாழலாம் என்பதே நாகரிகம்' என்று நினைத்துச் செயல்பட்டவர்களில் பலர் தோல்வியின் காரணமாய்ப் பழைமைக்கு மீண்டும் செல்வதிலிருந்தே, திருமணம் ஓர் அழுத்தமான பிணைப்பு, புனிதமான உறவு என்பது நிரூபணமாகவில்லையா. கல்யாணம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, அந்த உறவின் பலம் என்ன, ஆழம் என்ன என்றும் நாம் சிந்திக்க வேண்டும். செக்ஸ் என்பது தண்ணீர் குடிப்பதுபோல ஒதுக்கப்படக்கூடியது அல்ல. அதற்காகச் செக்ஸ்தான் ஒரு திருமண வெற்றிக்கு முழுக்காரணம் என்றும் சொல்ல முடியாது. ஒருவனிடம் திருப்தி இல்லாமல் பல ஆண்களிடம் மாறிமாறி ஈடுபாடு கொள்ளும் பெண் சந்தோஷமாக இருக்கிறாள் என்பதற்கு சாட்சி என்ன?”

“இங்கிலாந்தின் பிரதமர் மிஸஸ் தாட்சர், தன் கணவரின் இரவு சாப்பாட்டைத் தானே தினமும் சமைக்கிறாராம். அந்த மாதிரி உங்கள் குடும்பத்தினருக்காக நீங்களும்...?' 

“இல்லை. எனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியாது... ருசித்துச் சாப்பிடுவேனே தவிர, சமையல் கலையில் நான் தேர்ந்தவர் இல்லை...''     
 

“உங்கள் பொழுதுபோக்கு?”

“புத்தகங்கள் படிப்பது, சினிமா பார்ப்பது. அவகாசம் கிடைத்தால் மலைவாசஸ்தலங்களுக்குச் சென்று காலார நடப்பது...”
 

“நீங்கள் கடைசியாகப் படித்த புத்தகம்?'' 

'' 'ஹண்ரட் இயர்ஸ் ஆஃப் ஸாலிட்யூட்...' இதை, நாகலாந்தில் படித்துக்கொண்டிருக்கும்போது நோபல் பரிசு கிடைத்த செய்தி வந்தது.”
“யோகா, தியானத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா. குழந்தைகளின் குண அமைப்புக்கு இவை உதவுகின்றன என்று நம்புகிறீர்களா'
“நிச்சயமாய்... என் சிறுவயதில் இங்கிலாந்துக்கு அம்மாவுடன் சென்று முதல் வகுப்பில் படித்தபோது அந்தப் பள்ளியில் தினமும் ஒரு மணி நேரம் கை, காலை அசைக்காமல் படுக்க வேண்டும் என்ற பழக்கம் இருந்தது. சவாசனம் மாதிரி இதுவும் ஒருவிதப் பயிற்சிதான். யோகா மட்டுமல்லாமல், எந்தவிதமான தேகப் பயிற்சியும் குழந்தைகளின் மன, குண, உடல் வளர்ச்சிக்கு நல்லதையே செய்யும்...”
“உங்கள் பலம், பலவீனம் என்ன?" 

(சிரித்தபடியே...) “தெரியாது.. இப்படி அலச எனக்கு நேரம் இல்லை என்பதுதான் உண்மை." 

“எந்த நேரமும் புடைவையில் துளி கசங்கல் இல்லாமல், தலைமுடி கலைந்துபோகாமல், எப்போதும் அழகாய், கம்பீரமாய் இருக்கிறீர்களே... இது எப்படிச் சாத்தியமாகிறது?"

“ஓ... நோ... நானா எப்போதும் பளிச்சென்று இருக்கிறேன். தலைமுடி கலைந்துபோய் நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும். அழகாக இருக்கிறேனே, முடி கொட்டி வழுக்கை விழத் தொடங்கிவிட்டது தெரியுமா. இங்கே பாருங்கள்....''

“அரசியலிலிருந்து என்றாவது ஓய்வுபெறும் எண்ணம் உள்ளதா. அப்படி ஓய்வுபெற்றால் என்ன செய்ய உத்தேசம்?" 

“அத்தனையிலிருந்தும் விடுபட நான் விரும்புகிறேன் என்று பேச்சுக்காகச் சொன்னாலும், இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று எனக்குத் தெரியும். என்னால் சும்மா இருக்க முடியாது. பிரச்னைகளை நான் கவர்கிறேன் என்றே நினைக்கிறேன். எங்கு எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், மக்களின் பிரச்னைகள் என்னைப் பாதித்து, அவர்கள் நடுவில் என்னை இழுத்துச் சென்றுவிடும். நான் இருக்கும்வரை இந்தக் குணம் மாறாது என்றே நினைக்கிறேன்....''

அடுத்த கட்டுரைக்கு