Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி! இன்று வேட்பு மனுத்தாக்கல்!

ராகுல் காந்தி

கில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல்செய்ய இருக்கிறார் அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இவரைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாதபோது, அவரே போட்டியின்றித் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் மிக நீண்டகாலமாக இருப்பவர் என்ற பெருமைக்குரியவர் சோனியா காந்தி. 1998-ம் ஆண்டு அந்தப் பதவியை ஏற்ற அவர், தொடர்ந்து 19 ஆண்டுகளாக அதில் இருந்துவருகிறார். அவரின் தலைமையில் 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள் குரல்!

இந்த நிலையில், சோனியா காந்திக்கு அண்மைக்காலமாக அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுவருகிறது. ஓரிருமுறை வெளிநாட்டுக்குச் சென்று, சோனியா சிகிச்சை பெற்றார். இதனால், அரசியல் கூட்டங்கள், கட்சி விவகாரங்களில் பங்கேற்காமல் தவிர்த்துவந்தார். இதற்கிடையே, கட்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில்  துணைத் தலைவரான ராகுல் காந்திதான் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று கட்சிப் பணிகளைச் செய்துவருகிறார். குறிப்பாக இளைஞர்களைக் கட்சிக்குள் இணைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார். இதையடுத்து, ராகுல் காந்தியைத் தலைவராக்க மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்திவந்தனர்.  

''காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும்'' எனக் குரல்களும் தொடர்ந்து எழுந்தன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் ராகுல் காந்தி தலைமை ஏற்பதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரான சந்தீப் தீக்சித்,"காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அவர் தேர்வு செய்யப்படுவார். அதற்கான தேதி எப்போது என்பது உறுதிசெய்யப்படவில்லை. என்றாலும் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. வழக்கமான நடைமுறைகள் முடிந்ததும், கட்சியின் அடுத்த தலைவர் தேர்வுசெய்யப்படுவார். காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவருமே ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்ற மனநிலையிலேயே உள்ளனர்" என்று தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி, சோனியா காந்தி

அதேபோல், கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான ஷகீல் அகமதுவும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். மேலும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான சச்சின் பைலட், "தீபாவளிப் பண்டிகைக்குப் பின் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார்" என்று தெரிவித்திருந்தார். ''காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து அகில இந்தியப் பொறுப்பாளர்களின் விருப்பமும், புதுச்சேரி முதலமைச்சரான எனது விருப்பமும் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்பதுதான்'' எனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

சோனியா அறிவிப்பு!

இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டிகள், ராகுல் காந்தி கட்சியின் தலைவராக வேண்டும் எனக் கோரும் தீர்மானத்தை இயற்றியிருந்தன. இதுகுறித்து, சச்சின் பைலட் (ராஜஸ்தான் மாநிலக் காங்கிரஸ் தலைவர்), ''ராகுல் காந்தி, மக்களின் குரலை வலிமையாக எடுத்துச்சென்று பி.ஜே.பி-க்கு எதிரான நிலையை வலுவாக்கியுள்ளார்'' என்றார். மேலும், ''கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும்'' எனத் தொண்டர்கள் விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து, சோனியா காந்தி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், ''ராகுல் காந்தி எப்போது தலைவர் ஆவார் எனும் கேள்வியைத் தொடர்ந்து எழுப்பிவருகிறீர்கள். அது விரைவில் நடக்கப் போகிறது'' என்று தெரிவித்திருந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலைக்கொண்டே சோனியா காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டதாகப் பேசப்பட்டது. அவரின் அறிவிப்பு, காங்கிரஸ் கட்சியினருக்குப் புதிய உற்சாகத்தை அளித்திருந்தது.

ராகுல் காந்தி

இந்த நிலையில், கடந்த மாதம் டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் அவரின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டத்தில், ராகுல் காந்தியைக் காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 'அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் டிசம்பர் முதல் தேதியன்று தொடங்கும். டிசம்பர் 4-ம் தேதி மனுத்தாக்கல் செய்வதற்குக் கடைசி நாள். டிசம்பர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்" எனக் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல்செய்ய இன்று (4-12-2017) கடைசி நாள். இதுவரை யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. கடைசி நாளான இன்று, ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல்செய்ய இருக்கிறார். ராகுல் காந்தியைத் தவிர, வேறு யாரும் வேட்பு மனுத் தாக்கல்செய்ய வாய்ப்பு இல்லாததால், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே தேவை ஏற்பட்டால், டிசம்பர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலில் யாரும் போட்டியிடாதபட்சத்தில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நேரத்திலேயே அவர் தலைவராவது உறுதியாகிவிடும். அதன்பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. எனவே, குஜராத் மாநிலத் தேர்தலுக்கு முன்னரே, காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்பார் என்பது உறுதியாகி உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement