Published:Updated:

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்கான எழுச்சி கீதம்!

குணவதி
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்கான எழுச்சி கீதம்!
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்கான எழுச்சி கீதம்!

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமையவிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக நடந்துவரும் இந்தப் பெருமுயற்சி, இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. இந்தச் செய்தியைத் தமிழர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கும் நிதியைப் பெறுவதற்கும் `ஹார்வேர்டு தமிழ் இருக்கை’ அமைப்பு பல்வேறு வழிகளில் முயன்றுவருகிறது. இந்த வரிசையில் உருவான `ஹார்வேர்டு தமிழ் இருக்கை’ எழுச்சி கீதம், கனடா தலைநகரான டொரன்டோவில் நடத்தப்பட்ட  நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் எழுதியுள்ள `ஹார்வேர்டு தமிழ் இருக்கை’ எழுச்சி கீதத்துக்கு, இசையமைத்திருக்கிறார் `பண்ணையாரும் பத்மினியும்', `ஒருநாள் கூத்து' போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன். பாடலைப் பாடியவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த ஜெஸிக்கா ஜூட். ஹார்வேர்டு தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான அ.முத்துலிங்கம் பாடலைத் தயாரித்துள்ளார். `உலகத் தமிழர்க்கோர் தமிழ் இருக்கை...’ எனத் தொடங்கும் ‘ஹார்வேர்டு தமிழ் இருக்கை’ எழுச்சி கீதப் பாடலை, யூ டியூபிலும், ஹார்வேர்டு தமிழ் இருக்கை ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கனடா நாட்டைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ வழங்கிய சிறப்பு இலக்கியப் பரிசு, பேராசிரியர் டேவிட் ஷுல்மன் டொரன்டோவுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்வில், அவர் முன்னிலையில் ‘ஹார்வேர்டு தமிழ் இருக்கை’ எழுச்சி கீதம் வெளியிடப்பட்டது. ‘பாடலை வெளியிட்ட பிறகு, பாடகி ஜெஸிக்கா ஜூட், அரவிந்தன் இசைக்குழுவுடன் பல பாடல்களைப் பாடினார். அந்த இசை நிகழ்ச்சியின் மூலம், திரட்டப்பட்ட 10 ஆயிரம் டாலர்களும் தமிழ் இருக்கைக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது. 

ஹார்வேர்டு தமிழ் இருக்கையின் எழுச்சி கீதத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இதுகுறித்துப் பேசியபோது, ``எளிய பின்னணி என்னுடையது. கத்துக்கிட்டே இருக்கணும்னு நினைப்பேன். `பண்ணையாரும் பத்மினியும்' படத்துக்கு இசையமைச்சது எனக்கோர் அடையாளத்தை ஏற்படுத்தி, இந்த இசைப் பயணம் நல்லா போயிட்டிருக்கு. ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்கான முயற்சிகளை நான் ஆரம்பத்துலயிருந்தே கவனிச்சிட்டு வர்றேன். ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்கான எழுச்சி கீதம் தயாரித்த அ.முத்துலிங்கம்தான் என்னையும் ஜெஸிக்காவையும் இந்தப் பாடலுக்காக அணுகினார். ஜெஸிக்காவை எனக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமா தெரியும். எழுச்சி கீதத்தைச் சிறப்பாகப் பாடியிருக்காங்க. எனக்கு எதிர்பாராம கிடைச்ச வாய்ப்பு இது. மகிழ்ச்சியாவும் பெருமையாவும் இருக்கு.

தமிழ் இலக்கியத் தோட்டம் நடத்திய நிகழ்ச்சியில எழுச்சி கீதம் இசைக்கப்பட்ட பிறகு, பல பாடல்களை ஜெஸிக்கா பாடியிருக்காங்க. இந்தப் பாடலாலயும் நிதி திரண்டிருப்பது எனக்கும் ஜெஸிக்காவுக்கும் ரொம்ப சந்தோஷம். உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்து படிக்கிற அறிவுச் சுரங்கம் ஹார்வேர்டு பல்கலைக்கழகம். அங்கே தமிழ் மொழிக்கு இருக்கை அமையுறது, வெறும் மொழிவளர்ச்சியா மட்டுமில்லாம, தமிழ் இசைக்கும் ஒரு பாலமா இருக்கும்னு நம்புறேன். கர்நாடக இசை உலகத்தோட எல்லா மூலைகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்கு. அதே மாதிரி, தமிழ்ல இருக்கிற மாற்று இசை, நாட்டுப்புற இசை, இந்த மண்ணுக்கேயான இசைக் கருவிகள்னு எல்லா வடிவங்களும் எல்லாருக்கும் அறிமுகமாகும்னு நம்புறேன்” என்றார்.

`ஹார்வேர்டு தமிழ் இருக்கை’ நன்கொடை வழங்க விரும்புபவர்கள் harvardtamilchair.org இணையதளத்துக்குச் சென்று donate என்ற பட்டனை அழுத்தி நன்கொடை அளிக்கலாம் என `ஹார்வேர்டு தமிழ் இருக்கை’ அமைப்பு தெரிவித்துள்ளது.