500 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் பி.ஏ-வுக்கு ஏழு ஆண்டு சிறை | Seven years imprisonment for Tahsildar in Ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/12/2017)

கடைசி தொடர்பு:18:00 (05/12/2017)

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் பி.ஏ-வுக்கு ஏழு ஆண்டு சிறை

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய உதவியாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது அரியலூர் நீதிமன்றம். 

                              

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றியவர் தெய்வசீகாமணி. தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் வாரிசு சான்று கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சமாக உதவியாளர் தெய்வசிகாமணி கேட்டுள்ளார். எதற்கு பணம் தரணும்னு ராமஜெயம்  கேட்க, பணம் கொடுத்தால்தான் இங்கு வேலை நடக்கும்.

                                 

இங்கு சும்மா வேலை பார்க்க முடியாதுனு கடுப்பாகப் பேசியிருக்கிறார் தெய்வசிகாமணி. அதனால் ஆத்திரம் அடைந்த ராமஜெயம் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரை அணுகியிருக்கிறார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை உதவியாளர் தெய்வசிகாமணியிடம் வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்த அரியலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி, தெய்வசிகாமணிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.