மகாராஷ்டிராவில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பை மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர் யஷ்வந்த் ஜாதவ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. தற்போது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மைத்துனர் ஸ்ரீதர் மகாதேவ் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். உத்தவ் தாக்கரேவின் மனைவி ரேஷ்மி தாக்கரேவின் சகோதரரான ஸ்ரீதர் மகாதேவ் சொந்தமாக ஸ்ரீசாய்பாபா கிரஹநிர்மிதி என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்திவருகிறார்.

இந்த நிறுவனம் கட்டிவரும் கட்டடத்தில் 11 வீடுகளை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.45 கோடி.
2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பிஹு கோல்டு, சத்னம் ஜுவல்லர்ஸ் ஆகிய இரு கம்பெனிகள் தரப்பில் 84.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டன. அந்தப் பணம் பின்னர் 258 கிலோ தங்கம் வாங்குவதற்காக புஸ்பக் புல்லியன் என்ற நிறுவனதின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது. புஸ்பக் புல்லியன் நிறுவனம் இத்தனை பெரிய பணப் பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு பெரிய நிறுவனம் இல்லை என்பதை விசாரணையில் தெரிந்துகொண்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2017-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விசாரணையில் பிஹு கோல்டு, சத்னம் ஜுவல்லர்ஸ் இரண்டு நிறுவனங்களும் ஷெல் கம்பெனிகள் என்று தெரியவந்தது. பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை வாங்குவதற்காக மட்டுமே இந்த கம்பெனிகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது, அதோடு புஸ்பக் நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ் பட்டேல் கம்பெனியில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டார். இதனால் புஸ்பக் நிறுவனம் வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் புஸ்பக் குரூப் நிறுவனம் ஹம்ஷபர் டீலர் பிரைவேட் லிமிடெட் என்ற ஷெல் (போலி) கம்பெனிக்கு ரூ.30 கோடியைப் பரிமாற்றம் செய்தது. அந்தப் பணத்தை ஹம்ஷபர் நிறுவனம் உத்தவ் தாக்கரேவின் மைத்துனர் நிறுவனமான ஸ்ரீசாய்பாபா நிறுவனத்துக்கு உத்தரவாதம் இல்லாத கடனாகக் கொடுத்திருப்பதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் உத்தவ் தாக்கரேவின் மைத்துனர் ஸ்ரீதர் மகாதேவ் மும்பை அருகிலுள்ள தானேவில் புதிதாகக் கட்டிவரும் கட்டடத்தில் இருக்கும் 11 வீடுகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``மத்திய விசாரணை ஏஜென்சி தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டுவருவது துரதிஷ்டவசமானது” என்று தெரிவித்தார்.
சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``ஸ்ரீதர் மகாதேவ் தனது தரப்பில் விளக்கம் கொடுக்க வாய்ப்பு கொடுக்காமல் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். இது சர்வாதிகாரத்தின் தொடக்கம். இதற்கான விலையை பாஜக கொடுக்கும்” என்று தெரிவித்தார்.
அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் முன்பாக மும்பையில் பாஜக நிர்வாகி மொஹித் கம்போஜி வசிக்கும் 14 கட்டடங்களுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. கட்டடத்தில் விதிகளுக்கு மாறாக மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மாநகராட்சி அதிகாரிகள் பாஜக பிரமுகர் வசிக்கும் கட்டடத்தில் சோதனை செய்யவிருக்கின்றனர். ஏற்கெனவே பாஜக மத்திய அமைச்சர் நாராயண் ராணே வசிக்கும் கட்டடத்துக்கும் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.